அமீரக செய்திகள்

UAE: இனி வெறும் 30 நிமிடங்களிலேயே வேலை ஒப்பந்த செயல்முறையை முடிக்கலாம்..!! புதிய தானியங்கு அமைப்பு அறிமுகம்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் வேலை ஒப்பந்தங்களுக்கான செயல்முறையானது முடிய பொதுவாக இரண்டு நாட்கள் வரையாகும். ஆனால் தற்பொழுது அமீரகத்தில் தொடங்கப்பட்ட புதிய ஸ்மார்ட் சிஸ்டமானது வேலை ஒப்பந்தங்களை முடிக்க தேவையான நேரத்தை இரண்டு நாட்களில் இருந்து அரை மணி நேரமாக குறைக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அமீரகத்தின் மனித வளங்கள் மற்றும் குடியேற்ற அமைச்சகம் (MoHRE) தெரிவிக்கையில் இந்த செயல்முறையானது தானியங்கி அமைப்பாக இருக்கும் என்றும் இதற்கு மனித தலையீடு தேவையில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

அமைச்சகத்தின் கூற்றுப்படி, இந்த அமைப்பு அறிமுகப்படுத்தப்பட்ட முதல் இரண்டு நாட்களில் 35,000 க்கும் மேற்பட்ட வேலை ஒப்பந்தங்களை வழங்க உதவியதாக கூறப்பட்டுள்ளது. இதில் புதிய மற்றும் புதுப்பிக்கப்பட்ட வேலை ஒப்பந்தங்களும் அடங்கும் என்றும் இரு தரப்பினரின் கையொப்பங்களை சரிபார்த்த பிறகு இந்த ஒப்பந்தங்கள் அங்கீகரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சகம் தெரிவிக்கையில், “இந்த புதிய அமைப்பானது படங்களை செயலாக்க மற்றும் சரிபார்க்க மேம்பட்ட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துகிறது. அத்துடன் இது ஒரு பரிவர்த்தனைக்கான (transaction) கால அளவை இரண்டு நாட்களில் இருந்து வெறும் 30 நிமிடங்களாக குறைக்கிறது. அதே நேரத்தில் மனித செயல்பாட்டால் ஏற்படும் தவறையும் குறைக்கிறது” என்று கூறியுள்ளது.

இதன்படி நிறுவனங்கள் தங்கள் விண்ணப்பங்களை வழக்கம்போல் ஏதேனும் சேவை வழங்கல் சேனல்கள் மூலம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் பின்னர் தானியங்கு அமைப்பு விண்ணப்பங்களை அங்கீகரிக்க மற்றும் அனுமதிகளை வழங்குவதற்கான அனைத்து தேவைகளையும் மதிப்பீடு செய்கிறது என்றும் கூறப்பட்டுள்ளது.

அமீரகத்தின் மனித வளங்கள் மற்றும் குடியேற்ற அமைச்சகமானது பல டிஜிட்டல் சேவைகளை வழங்குகிறது. அமைச்சகத்தின் அப்ளிகேஷனானது 100க்கும் மேற்பட்ட சேவைகளை வழங்குகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் அரபு மற்றும் ஆங்கிலத்தில் அதன் WhatsApp சேனல் மூலம் அமைச்சகத்துடன் தொடர்பு கொள்ளலாம் என்றும் 600590000 என்ற எண்ணின் மூலம் இந்தச் சேவை வழங்கப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Related Articles

Back to top button
error: Content is protected !!