அமீரக செய்திகள்

UAE: குப்பைக்கு செல்ல வேண்டிய பொருட்களை பயணிகளுக்கான போர்வை, பொம்மை, கை பைகளாக மாற்றிய எமிரேட்ஸ் ஏர்லைன்..!! நம்ப முடிகிறதா..??

துபாயை தளமாகக் கொண்ட எமிரேட்ஸ் விமான நிறுவனம் சுமார் 500,000 கிலோ எடையுள்ள பிளாஸ்டிக் மற்றும் கண்ணாடிகளை மறுசுழற்சி செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. இவ்வாறு மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்கள் அனைத்தும் ஒரு முழுமையான A380 விமானத்தின் எடைக்கு சமம் என்று விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

துபாய்க்கு வரும் விமானங்கள் துபாயில் தரையிறங்கிய பின்னர் அந்த விமானங்களில் உள்ள கண்ணாடி மற்றும் பிளாஸ்டிக் பாட்டில்களை மறுசுழற்சி ஆலைக்கு அனுப்பப்படும் முன், அந்த கண்ணாடி மற்றும் பிளாஸ்டிக் பாட்டில்களை விரைவாகப் பிரித்தெடுக்க எமிரேட்ஸ் கேபின் குழுவினர் கடுமையாக வேலை செய்வார்கள் என்று எமிரேட்ஸ் நிறுவனம் கூறியுள்ளது. பின் மறுசுழற்சிக்கு வந்திறங்கும் கண்ணாடிகள், நிறத்தால் பிரிக்கப்பட்டு துகள்களாக உடைக்கப்படும் என்றும் பின்னர் மீண்டும் உற்பத்திக்கு தயாராக இருக்கும் இந்த துகள்கள் அனைத்தும் அமீரகத்தில் உள்ள கண்ணாடி உற்பத்தியாளர்களுக்கு புதிய பாட்டில்களுக்கான கலவையில் சேர்க்க அனுப்பப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண்ணாடியைப் போன்றே மறுசுழற்சிக்கு எடுத்து வரப்படும் பிளாஸ்டிக் பாட்டில்களும் சுத்தம் செய்யப்பட்டு, சிறுசிறு துகள்களாக மாற்றப்படும் என்றும் அதன் பிறகு, அவற்றை உருண்டைகளாக உருக்கி, பிற பிளாஸ்டிக் பொருட்களை தயாரிக்க உற்பத்தியாளர்களுக்கு அனுப்பப்படுவதாகவும் எமிரேட்ஸ் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன் மூலம் விமான நிறுவனம் ஆயிரக்கணக்கான கிலோகிராம் கண்ணாடி மற்றும் பிளாஸ்டிக் குப்பைகளை மறுசுழற்சிக்காக திருப்பி விட்டுள்ளதாக கூறியுள்ளது.

மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக்கில் இருந்து தயாரிக்கப்படும் போர்வைகள்:

கடந்த ஆறு ஆண்டுகளாக, பிளாஸ்டிக் பாட்டில்களில் இருந்து தயாரிக்கப்பட்ட போர்வைகளை நீண்ட தூரம் விமானங்களில் பயணிக்கும் பயணிகளுக்கு விமான நிறுவனம் வழங்கி வருவதாகத் தெரிவித்துள்ளது. சுமார் 28 மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்களில் இருந்து போர்வைகள் தயாரிக்கப்படுவதாகவும் விமான நிலையம் கூறியுள்ளது.

நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ள விவரங்களின் படி, முதலில் பிளாஸ்டிக் பாட்டில்கள் சில்லுகளாக துண்டாக்கப்பட்டு, பின்னர் மெல்லிய நூலாக மாற்றப்படுகின்றன. அடுத்தபடியாக, நூலானது மென்மையான போர்வைகளில் நெய்யப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.

அதுமட்டுமில்லாமல், நடைமுறைக்கு வந்த ஆறு ஆண்டுகளில், எமிரேட்ஸ் போர்வைகள் 95 மில்லியனுக்கும் அதிகமான பிளாஸ்டிக் பாட்டில்கள் குப்பைக்கு செல்வதைத் தடுத்துள்ளன என கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது, மறுசுழற்சி செய்யப்பட்ட பாலிஎதிலீன் டெரெப்தாலேட் (rPET) ஐப் பயன்படுத்தும் உற்பத்தி செயல்முறையானது ஆற்றல் உமிழ்வை சுமார் 70 சதவீதம் குறைத்துள்ளதாகவும் விமான நிறுவனம் கூறியுள்ளது.

அதுபோல, ஏர்லைன்ஸில் வழங்கப்படும் பொம்மை பைகள் (complimentary toy bags), பெல்ட் பைகள் போன்றவை மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்களில் இருந்து தயார் செய்யப்படுவதாக விமான நிறுவனம் கூறியுள்ளது.

எமிரேட்ஸ் விமான நிறுவனத்தால் வழங்கப்படும் குழந்தைகளுக்கான பைகளின் உற்பத்தியானது இதுவரை 8 மில்லியன் பிளாஸ்டிக் பாட்டில்களை குப்பையில் இருந்து மீட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

Related Articles

Back to top button
error: Content is protected !!