அமீரக சட்டங்கள்

தொழிலாளர்களுக்கு பயன் தரும் புதிய விதியை அறிவித்த அமீரகம்.. விபத்து, காயங்கள், இழப்பீடு தொடர்பாக MOHRE அறிக்கை..!!

ஐக்கிய அரபு அமீரகத்தின் மனித வளங்கள் மற்றும் எமிராட்டிசேஷன் அமைச்சகம் (Ministry of Human Resources and Emiratisation – MoHRE) பணியிடத்தில் தொழிலாளர்களுக்கு ஏற்படும் விபத்துகள் மற்றும் காயங்களைக் கையாள்வதற்கான புதுப்பிக்கப்பட்ட விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமீரகம் முழுவதும் உள்ள நிறுவனங்களில் ஏற்படும் வேலை தொடர்பான விபத்துகளில் சிக்கும் தொழிலாளிக்கு சிகிச்சை மற்றும் இழப்பீடு வழங்கும் பொறுப்பு அந்த நிறுவனத்தின் முதலாளிகளுக்கு உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

அமீரகத்தில் ஐம்பது அல்லது அதற்கும் மேற்பட்ட தொழிலாளர்களைக் கொண்ட நிறுவனங்கள், பணியிட விபத்துக்கள் மற்றும் அதனால் ஏற்படும் நோய்களை எவ்வாறு கையாள்கின்றன என்பதை ஒழுங்குபடுத்தும் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தின்படி, பணிபுரியும் இடங்களில் ஏற்படும் விபத்துகளை MOHRE வின் தரவுத்தளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்றும், இந்த அமைப்பு வேலை தொடர்பாக ஏற்படும் விபத்துகள், பாதுகாப்பு நடவடிக்கைகள் போன்றவற்றை கண்காணிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பணியிடங்களில் ஏற்படும் காயத்திற்கான இழப்பீடு மதிப்பானது, தொழிலாளியின் மிக சமீபத்திய அடிப்படை சம்பளத்தின் அடிப்படையில் கணக்கிடப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் ஊழியருக்கு ஏற்பட்டுள்ள காயத்தின் சதவீதத்தைக் குறிக்கும் மருத்துவ அறிக்கை வெளியான பிறகு, அதிகபட்சமாக 10 நாட்களுக்குள் ஊழியர் அவருக்குரிய இழப்பீட்டுத் தொகையை பெறுவார் எனவும் MOHRE வின் புதுப்பிக்கப்பட்ட நடைமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேவேளையில், வேலை தொடர்பாக ஏற்பட்ட நோய் அல்லது காயம் காரணமாக ஒரு ஊழியர் பகுதி ஊனம் அடைந்தால், அவருக்கு நிரந்தர முழுமையான ஊனத்தின் மதிப்பில் ஒரு பகுதி இழப்பீடாக வழங்கப்படும். மேலும், ஊழியருக்கு முழுமையான அல்லது பகுதியளவு ஊனம் உள்ளதா என்பதை ஒரு சிறப்பு மருத்துவக் குழு முடிவு செய்யும், பின்னர் நிரந்தர முழுமையான ஊனம் ஏற்பட்டால் தொழிலாளிக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகையானது மரணம் ஏற்பட்டால் செலுத்த வேண்டிய தொகைக்கு சமமாக வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பணியிடத்திலோ அல்லது வேலை தொடர்பாகவோ காயமடைந்த அல்லது நோய்வாய்ப்பட்ட தொழிலாளி இழப்பீடு உட்பட அனைத்து நன்மைகளையும் பெறுவதற்கு முன்பாக, அந்த நிறுவன முதலாளி தொழிலாளியின் ஒப்பந்தத்தை ரத்து செய்யக்கூடாது. அதேசமயம், மருத்துவ அறிக்கையை வெளியிடுவதற்கு முன்பு வேலை ஒப்பந்தத்தை நிறுத்துவதற்கு தொழிலாளர் முடிவு செய்தால், சம்பந்தப்பட்ட குழுவால் வழங்கப்பட்ட அறிக்கையின்படி, பாதிக்கப்பட்ட தொழிலாளியின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் இந்த நடைமுறையின்கீழ், காயமடைந்த ஊழியர், அவர் பணிபுரியும் நிறுவனம், தொழிலாளி காயமடைந்த தேதி மற்றும் காயத்தின் தீவிரம், விபத்தின் சூழ்நிலைகள் மற்றும் தொழிலாளிக்கு அளிக்கப்பட்ட முதலுதவி மற்றும் சிகிச்சை பற்றிய சுருக்கமான விவரங்கள் போன்ற தகவல்களை உள்ளிட வேண்டியது நிறுவன முதலாளிகளின் பொறுப்பு என்றும், இதற்கான அறிக்கை MOHRE வின் பணியிட காயங்களுக்கான தேசிய அமைப்பில் இணைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமில்லாமல், இது போன்ற பணியிட விபத்துகள் மற்றும் மரணங்களை அமைச்சகத்திடம் புகார் அளிப்பதற்கும் MOHRE வழிவகை செய்துள்ளது. அமைச்சகத்தின் அறிவிப்பின்படி, இனிமேல் (600) 590-000 என்ற எண்ணுக்கு அழைப்பு விடுப்பது, வணிகர்களின் சேவை மையங்களுக்குச் செல்வது அல்லது அமைச்சகத்தின் ஸ்மார்ட் அப்ளிகேஷன்கள் மூலம் தொழிலாளர்கள் தங்களின் தொழில் சார்ந்த நோய் அல்லது விபத்தை எளிய முறையில் புகார் தெரிவிக்கலாம் என்றும் தொழிலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுளளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!