அமீரக செய்திகள்

அபுதாபியில் திறக்கப்பட்டுள்ள மொத்த உழவர் சந்தை!! தினசரி 20 டன் பொருட்களை விற்பனை செய்யும் திறன் கொண்டதாக தகவல்..!!

அபுதாபியில் உள்ள சையத் துறைமுகத்தில் (zayed port) புதிய உழவர் சந்தை திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உள்ளூர் உற்பத்திகளை ஊக்குவிக்கவும், வியர்வை சிந்தி உணவை உற்பத்தி செய்யும் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கவும் மற்றும் உள்நாட்டு வர்த்தக வலையமைப்பை வலுப்படுத்தவும் முடியும் என்று கூறப்பட்டுள்ளது.

அபுதாபி எமிரேட்டில் உணவு பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான தலைவர்களின் உறுதிப்பாட்டிற்கு ஏற்ப திங்கள்கிழமை (மார்ச்.6) அபுதாபி வேளாண்மை மற்றும் உணவுப் பாதுகாப்பு ஆணையம் (Abu Dhabi Agriculture and Food Safety Authority – ADAFSA) புதிய உழவர் சந்தை திறக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

மேலும், மொத்த விற்பனை உழவர் சந்தை வரும் மே மாதம் வரை தினமும் மதியம் 1 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்திருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தினசரி சுமார் 20 டன் விவசாயப் பொருட்களை விற்பனை செய்யும் திறன் கொண்ட 20 உள்ளூர் விவசாயிகளுக்கு உணவளிக்கும் 13 சந்தைப்படுத்தல் நிலையங்கள் இதில் உள்ளன என கூறப்பட்டுள்ளது.

அத்துடன் மொத்த மற்றும் சில்லறை விற்பனையாளர்களுக்கும் பெரிய அளவில் வாங்குவதில் ஆர்வமுள்ள நுகர்வோருக்கும் ஒரு தளமாக இந்த சந்தை அமைவதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும், சந்தையின் முக்கிய ஆதரவாளரான ADAFSA, விவசாய உற்பத்தியாளர்களுக்கு புதுமையான சந்தைப்படுத்தல் வாய்ப்புகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு இது திறக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADQ ஹோல்டிங் நிறுவனத்தின் துணை நிறுவனமான சிலால் நிர்வகிக்கும் இந்த சந்தை, உள்ளூர் தயாரிப்புகளின் போட்டித்தன்மையை உயர்த்துவதுடன் நுகர்வோர் எளிதில் அணுகுவதற்கும் வசதியானதாக மாற்றியுள்ளது. இது குறித்து ஆணையத்தின் இயக்குனர் ஜெனரல் சயீத் அல் பஹ்ரி சலேம் அல் அமெரி அவர்கள் கூறுகையில், உழவர் சந்தை முன்முயற்சியானது, துணைப் பிரதமர், ஜனாதிபதி அலுவலக அமைச்சர் மற்றும் வாரியத் தலைவர் ஷேக் மன்சூர் பின் சயீத் அல் நஹ்யான் ஆகியோரின் ஆதரவையும் வரவேற்பையும் பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் விவசாயத் தொழிலின் முன்னேற்றம், விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பது மற்றும் உள்ளூர் உற்பத்திகளின் போட்டித்தன்மையை அதிகரிப்பது ஆகியவற்றில் ஷேக் மன்சூர் அவர்களின் அர்ப்பணிப்புடன் இந்த முன்முயற்சி இணைந்துள்ளதாகக் கூறியுள்ளார். அதேசமயம், விவசாயிகள் தங்களது உற்பத்தி பொருள்களுக்கு நியாயமான விலையைப் பெறுவதற்கு எந்தவித இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக சில்லறை விற்பனையாளர்களுடன் தொடர்புகொள்வதற்கு சிறந்த வாய்ப்பு என்று தெரிவித்துள்ளார்.

அபுதாபியின் பண்ணைகளில் இருந்து நேரடியாக மொத்த விற்பனையாளர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்களுக்கு விநியோகிப்பதன் மூலம் சந்தை உள்நாட்டு வர்த்தகம் மற்றும் உள்ளூர் பொருளாதாரத்தை ஆதரிகிறது என்று மேலும் வலியுறுத்தியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து சிலால் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சல்மீன் அல் அமெரி அவர்கள் மினா சயீத் மொத்த விவசாயிகள் சந்தையைப் பற்றி குறிப்பிடுகையில், அல் வத்பா உழவர் சந்தையின் சாதனையைத் தொடர்ந்து, அபுதாபி எமிரேட் விவசாயிகளுக்கு ஆதரவளிப்பதற்கான மற்றொரு முன்னேற்றம் என்று தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button
error: Content is protected !!