அமீரக செய்திகள்

துபாய்: அரசாங்க சேவைகள் பற்றி புகார் தெரிவிக்க புதிய ‘ப்ளாட்ஃபார்ம்’.. அறிமுகம் செய்த இளவரசர் ஷேக் ஹம்தான்.. இரண்டு நிமிடங்கள் போதும்..

துபாய் அரசாங்கத்தையும் துபாயில் வசிக்கும் குடியிருப்பாளர்களையும் இணைக்கும் விதமாக ஒரு புதிய ஒருங்கிணைந்த தொடர்பு தளத்தை (Unified Interactive Platform) துபாயின் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள் அறிமுகம் செய்துள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘தி 04 ப்ளாட்பார்ம்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய தளத்தின் மூலம் குடியிருப்பாளர்கள் அரசாங்க சேவைகள் பற்றிய புகார்களை வெறும் இரண்டு நிமிடங்களில் தெரிவிக்கலாம்.

துபாயின் லேண்ட்லைன் தொலைபேசி எண்ணின் குறியீட்டை கொண்டிருக்கும் இந்த புதிய ’04’ தளத்தில் 40 அரசு நிறுவனங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த புதிய தளத்தின் மூலம் வாடிக்கையாளர்களின் ஈடுபாட்டை மேம்படுத்துவதும், அரசின் சிறப்பை உயர்த்துவதுமே இதன் நோக்கம் என்றும் துபாயின் பட்டது இளவரசர் ஷேக் ஹம்தான் கூறியுள்ளார்.

மேலும், இது குறித்து அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “துபாயில், நாங்கள் எதிர்கால அரசாங்கங்களுக்கு ஒரு முன்மாதிரியை உருவாக்கியுள்ளோம். அரசாங்க தளத்தில் சேவைகளை அணுகும் குடியிருப்பாளர்கள் அரசாங்க சேவைகளின் பயனாளி மட்டுமல்ல, அவற்றை வடிவமைத்தல், செயல்படுத்துதல் மற்றும் மதிப்பீடு செய்வதில் ஒரு மூலோபாய பங்காளியாக இருக்கிறார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அதாவது குடியிருப்பாளர்கள் அரசாங்க சேவைகளை இணையதளம் மூலம் அணுகுவது மட்டுமின்றி அவர்கள் தளத்தில் உள்ள குறைபாடுகளை புகார் செய்யவும், தளத்தை மேம்படுத்துவதற்கு யோசனையும் மற்றும் தளம் குறித்த கருத்தையும் தெரிவிக்க இந்த தளத்தில் அவர்களுக்கு மூன்று விருப்பங்கள் வழங்கப்பட்டுள்ளன.

பரிந்துரை (Suggest)

’04’ தளத்தை அணுகும் பயனர்கள் எந்தவொரு அரசாங்க சேவை அல்லது சேவை தொடர்பான பரிவர்த்தனையை மேம்படுத்த புதிய யோசனை அல்லது ஆலோசனையை ‘Suggest’ என்ற தேர்வின் மூலம் பரிந்துரைக்கலாம்.

புகார் (Complain)

அரசு சேவையை அல்லது போர்ட்டலைப் பயன்படுத்தி எந்தவொரு நிறுவனத்தால் வழங்கப்படும் சேவைகளையும் செயலாக்கும்போது ஏதேனும் நடைமுறை அல்லது பரிவர்த்தனையில் குறைகளோ அல்லது அதிருப்தி அடைந்திருந்தால் ‘Complain’ எனும் விருப்பத்தின் கீழ் புகார் தெரிவிக்கலாம்.

கருத்து (Comment)

அரசாங்க போர்ட்டலில் வழங்கப்படும் எந்தவொரு சேவை அல்லது பரிவர்த்தனையைப் பற்றிய உங்கள் கருத்தையும் ‘Comment’ எனும் விருப்பதை தேர்ந்தெடுத்து பயனர்கள் பகிர்ந்து கொள்ளலாம். உங்களின் கருத்து நேர்மறையானதாகவோ அல்லது எதிர்மறையானதாகவோ இருக்கலாம்.

Related Articles

Back to top button
error: Content is protected !!