அமீரக செய்திகள்

UAE: மக்களின் உதவும் மனப்பான்மையை சாதகமாக்கும் பிச்சைக்காரர்கள்..!! 500,000 திர்ஹம்ஸ் வரை அபராதம் விதிக்க வாய்ப்பு.. துபாய் காவல்துறை எச்சரிக்கை….

ரமலான் மாதம் தொடங்குவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அமீரகக் குடியிருப்பாளர்கள் ரமலான் மாதத்தைக் கொண்டாட ஆவலுடன் தயாராகி வருகின்றனர். பொதுவாக, அமீரக மக்கள் ரமலான் மாதத்தில் கருணை மனப்பான்மையுடன் ஏழை எளியோர்க்கு நன்கொடை வழங்க முன் வருவதுண்டு. ஆனால், ஒரு சில பிச்சைக்காரர்கள் அவர்களின் தாராள மனப்பான்மையைப் பயன்படுத்தி ஏமாற்றுகிறார்கள்.

இந்நிலையில், துபாய் அதிகாரிகள் எமிரேட்டில் பிச்சை எடுப்பவர்களுக்கு எதிராக எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளதுடன் வருகின்ற ஏப்ரல் 13, 2024 அன்று பிச்சை எடுப்பதற்கு எதிரான பிரச்சாரத்தை தொடங்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

முக்கியமாக, குடியிருப்பு பகுதிகளில் உள்ள பேனல்கள், ATM ஸ்க்ரீன், 26 யூனியன் கூட்டுறவு சூப்பர் மார்க்கெட் கிளைகளில் 300 டிஸ்ப்ளே ஸ்க்ரீன் உள்ளிட்ட பல்வேறு ஊடகங்கள் மூலம் பிச்சை எடுப்பது குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய தேடப்படும் நபர்கள் துறையின் (Wanted Persons Department) இயக்குனர் கர்னல் சயீத் அல் கெம்சி, புனித மாதத்தில் மக்களின் தொண்டு உணர்வுகளைப் பயன்படுத்தி பிச்சைக்காரர்கள் மோசடி செய்வதாகவும், இது போன்று ஏமாற்றி பிச்சை எடுப்பது, கொள்ளையடித்தல் மற்றும் சட்ட விரோதமாக நிதி திரட்டுதல் போன்ற குற்றங்களுக்கும் வழிவகுக்கும் என்றும் கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசுகையில், 2020 முதல் 2023 வரை சுமார் 1,700 பிச்சைக்காரர்களை பிடித்து தண்டித்துள்ளதாகவும், அவர்களில் 487 பெண்கள் மற்றும் 1,238 ஆண்கள் என்றும் கர்னல் அல் கெம்சி எடுத்துரைத்துள்ளார்.

சில மர்ம கும்பல்கள் வெளிநாட்டில் இருந்து தனி நபர்களை அழைத்து வந்து பிச்சை எடுக்கும் நடவடிக்கையில் ஈடுபடுத்துகிறது, இவ்வாறு ஏற்பாடு செய்பவர்களுக்கும் அதில் ஈடுபடுபவர்களுக்கும் குறைந்தது ஆறு மாதங்களுக்குச் சிறைத்தண்டனையும் 100,000 திர்ஹம்களுக்குக் குறையாத அபராதமும் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இது தவிர, தேவைப்படுபவர்களுக்கு உதவுவதாக பொய்யாகக் கூறி, பிச்சை எடுப்பதை ஊக்குவிக்க சமூக ஊடக தளங்களை பயன்படுத்திக் கொள்ளும் போக்கு அதிகரித்து வருவதாகவும், இதுபோன்ற செயல்களை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அமீரக தகவல் தொழில்நுட்ப குற்றச் சட்டம், கட்டுரை 5இன் படி, தகுதிவாய்ந்த அதிகாரத்தின் அங்கீகரிக்கப்பட்ட உரிமம் இல்லாமல் நிதி திரட்டுதல் அல்லது ஊக்குவித்தல் போன்றவற்றிற்கு தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் எவருக்கும் 250,000 திர்ஹம்ஸ்க்கும் குறையாத மற்றும் 500,000 திர்ஹம்ஸ்க்கு மிகாமல் அபராதம் விதிக்கப்படும் அல்லது இந்த அபராதங்களில் ஏதேனும் ஒன்று விதிக்கப்படும்.

மேலும், பிச்சை எடுப்பவர்களில் 99 சதவீதம் பேர் பிச்சை எடுப்பதை தொழிலாக கருதுவதாகவும், பல தனிநபர்களும் குழுக்களும் பிச்சை எடுத்து பெருந்தொகை பணத்தை குவிப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆகவே, குடியிருப்பாளர்கள் பிச்சைக்காரர்களுக்கு பணம் கொடுக்க வேண்டாம் என்றும், அங்கீகரிக்கப்பட்ட தொண்டு நிறுவனங்கள் மூலம் நன்கொடைகளை வழங்குமாறும் அறிவுறுத்தியுள்ளனர். குடியிருப்புப் பகுதிகளிலோ அல்லது கடைகளின் முன்போ பிச்சை எடுப்பவர்களை யாரேனும் கண்டால் தங்களுக்குத் தகவல் தெரிவித்து ஒத்துழைக்குமாறு துபாய் காவல்துறை வலியுறுத்தியுள்ளது. கர்னல் அல் கெம்சியின் கூற்றுப்படி, குடியிருப்பாளர்கள் துபாய் போலீஸ் ஆப் மூலமாகவோ அல்லது 901 ஐ அழைப்பதன் மூலமாகவோ இது குறித்து புகார் செய்யலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!