அமீரக செய்திகள்

கார், பைக் ஓட்டுநர் வேலைக்கு ஆட்களை தேர்வு செய்யும் துபாய் டாக்ஸி.. சம்பளத்துடன் கமிஷன் மற்றும் தங்குமிடம் வழங்கப்படும் என அறிவிப்பு..!!

துபாய் டாக்ஸி தங்கள் நிறுவனத்தில் ஓட்டுநர் வேலைக்கு ஆட்சேர்க்க உள்ளதால், டாக்ஸி ஓட்டுநர்கள் மற்றும் பைக் ரைடர்களுக்கு நேர்காணலை நடத்துவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நேர்காணலில் 23 முதல் 50 வயதிற்குட்பட்ட அனைத்து நாட்டினரும் கலந்துகொள்ளலாம் என்றும் தெரிய வந்துள்ளது.

குறிப்பாக டாக்ஸி ஓட்டுநர் வேலைக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் UAE மற்றும் GCC உரிமங்களை வைத்திருக்க வேண்டும். மேலும், ஓட்டுநர்களுக்கு மாதம் 2000 திர்ஹம் முதல் 2,500 திர்ஹம் வரை சம்பளத்துடன் கூடுதலாக கமிஷன் வழங்கப்படும் என்று துபாய் டாக்ஸி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் ஓட்டுநர்களுக்கு உடல்நலக் காப்பீடு மற்றும் தங்குமிடம் வழங்கப்படும் என்றும் துபாய் டாக்ஸி கூறியுள்ளது.

எதிர்வரும் மார்ச் 31-ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று துபாய், அபு ஹைல் சென்டரில் உள்ள பிரிவிலேஜ் லேபர் ஆட்சேர்ப்பு அலுவலகம் M-11 இல் இந்த வேலைக்கான நேர்காணல் நடைபெற உள்ளது. எனவே, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் காலை 7 மணி முதல் 11 மணி வரை நடைபெறும் நேர்காணலில் பங்கேற்கலாம்.

மேலும், நேர்காணலுக்கு வரும்போது, தங்களுடைய குடியிருப்பு விசா, UAE எமிரேட்ஸ் ஐடி, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட், CV மற்றும் வெள்ளை பின்னணியுடன் மூன்று புகைப்படங்களின் நகல்களைக் கொண்டு வருமாறு விண்ணப்பதாரர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அதேபோன்று பைக் ரைடர் வேலைக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் மோட்டார் பைக் லைசன்ஸ் வைத்திருக்க வேண்டும். பைக் ரைடர்களுக்கு ஒரு டெலிவரிக்கு 7.5 திர்ஹம் என்ற அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும் என்றும், தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு கூடுதலாக மற்ற சலுகைகளும் வழங்கப்படும் என்றும் துபாய் டாக்ஸி குறிப்பிட்டுள்ளது.

புனித ரமலான் மாதத்தில் பெரும்பாலான குடியிருப்பாளர்கள் தங்கள் வீடுகளில் வசதியாக நோன்பை திறக்க விரும்புவதால் துபாயில் டெலிவரி ரைடர்களுக்கான தேவை தற்போது அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே, பெருகிவரும் உணவு ஆர்டர்களை உணவகங்கள் சரியான நேரத்தில் டெலிவரி செய்ய அதிக ஓட்டுநர்களை நியமிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக மனிதவள ஆலோசனை நிறுவனங்கள் தெரிவித்துள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!