அமீரகத்தில் இன்று பரவலான மழை..!! மணிக்கு 50 கிமீ வேகத்தில் காற்று வீச வாய்ப்பு..!! வானிலை மையம் தகவல்…!!

ஐக்கிய அரபு அமீரகத்தின் சில பகுதிகளில் வானிலை மாறியுள்ளதால், ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. மேலும், அபுதாபி, துபாய், ஃபுஜைரா, ராஸ் அல் கைமா மற்றும் ஷார்ஜாவின் சில பகுதிகளில் கனமழை பதிவாகியுள்ளதாக தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) தெரிவித்துள்ளது.
மேலும் அமீரகம் முழுவதும் காலை வானிலை மேகமூட்டத்துடன் காணப்படுவதால், பலத்த மழை பெய்யும் என்று எதிர்பார்ர்க்கப்படுவதாகவும், வெப்பச்சலனம் காரணமாக ஃபுஜைரா மற்றும் ராஸ் அல் கைமா போன்ற கடலோர பகுதி, கிழக்கு மற்றும் வடக்கு நோக்கி மழை பெய்யும் என்று NCM தெரிவித்துள்ளது.
ஆங்காங்கே திடீரென பெய்து வரும் கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவிற்கு வழிவகுக்கும் என்றும் இதன் காரணமாக, வாகன ஓட்டிகள் மற்றும் குடியிருப்பாளர்கள் பள்ளமான பகுதிகளைத் தவிர்க்குமாறும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
அத்துடன் நாட்டின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் பெய்யும் கனமழையின் வீடியோ காட்சிகளை Storm_ae சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளது. மேலும், கனமழை காரணமாக கிழக்கு எமிரேட்ஸில் சில பள்ளத்தாக்குகளில் வெள்ளம் ஏற்பட்ட புகைப்படமும் வெளியாகியுள்ளது.
View this post on Instagram
மேலும், தென்மேற்கு திசையிலிருந்து வடமேற்கு திசை நோக்கி காற்று 15 – 30 கிமீ வேகத்திலும், சில சமயங்களில் மணிக்கு 50 கிமீ வேகத்திலும் காற்று வீசும் என்று எதிர்பார்க்கப்படுவதால், நாடு முழுவதும் தூசி பறக்கும் என்று NCM அதன் தினசரி வானிலை முன்னறிவிப்பில் கணித்துள்ளது.
எனவே, வானிலை மாற்றம் காரணமாக நாட்டில் அதிகபட்ச 27-33 டிகிரி செல்சியஸ் வரையிலும், குறைந்தபட்ச வெப்பநிலை 12-17 டிகிரி செல்சியஸ் வரையிலும் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், கடலோரப்பகுதிகளில் அதிகபட்சமாக 26-32°C வரையிலும், மலைப் பகுதிகளில் 19-24°C வரையிலும் வெப்பநிலை பதிவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுபோல, கடலோரப்பகுதிகளில் காற்றின் ஈரப்பதத்தின் அளவு 65-85 சதவீதமாகவும், மலைப் பகுதிகளில் 55-75 சதவீதமாகவும் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அரேபிய வளைகுடா பகுதியில் கடல் சீற்றத்துடனும் ஓமான் கடலில் சற்று மிதமான சீற்றமும் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.