ADVERTISEMENT

துபாய்: மஹ்சூஸ் டிராவில் 1 மில்லியன் திர்ஹம்ஸ் பரிசுத்தொகையை வென்ற இந்தியர்..!!

Published: 15 Mar 2023, 7:15 PM |
Updated: 15 Mar 2023, 7:59 PM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தின் மஹ்சூஸ் டிராவில் நடத்தப்பட்ட சமீபத்திய 119 வது வாராந்திர டிராவில் இந்தியாவைச் சேர்ந்த 38 வயதான திபிஷ் என்பவர் வெற்றி பெற்று 1 மில்லியன் திர்ஹம்ஸ் பரிசுத்தொகையை தட்டிச்சென்றுள்ளார். ஆறு வயது சிறுமிக்கு தந்தையான இவர் கடந்த மார்ச் 11 அன்று மாலை தனது ஈமெயிலின் இன்பாக்ஸை சாதாரணமாகச் சரிபார்த்துக் கொண்டிருகையில், மஹ்ஸூஸிடமிருந்து வந்த மின்னஞ்சலைப் பார்த்து மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கியதாக குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT

இது குறித்து அவர் கூறுகையில், இதனை முதலில் நம்ப முடியவில்லை என்றும், எனவே அவர் தனது மனைவி மற்றும் நண்பர்களிடம் மஹ்சூஸ் வலைத்தளம் மற்றும் அதன் சமூக ஊடக பக்கங்கள் மூலம் வெற்றியை உறுதிப்படுத்தும்படி கேட்டதாகவும் கூறியுள்ளார். அதன்பிறகே அவரது வெற்றியை ஏற்றுக் கொண்டுள்ளார்.

கடந்த 14 ஆண்டுகளாக ஐக்கிய அரபு அமீரகத்தில் வசித்து வரும் திபிஷ் தெரிவிக்கையில், “இதற்கு முன்பு நான் மஹ்சூஸ் மூலம் சிறிய பரிசுகளை வென்றிருந்தாலும், எனக்கு இவ்வளவு மிகப்பெரிய பரிசு கிடைத்ததில்லை. திடீரென கிடைத்த பரிசுத் தொகையை எவ்வாறு பயன்படுத்துவது என்று தெளிவாகத் தெரியவில்லை, இருப்பினும் சில நிதிக் கடமைகளைச் செலுத்த விரும்புகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

அதே டிராவில், மற்ற 25 பங்கேற்பாளர்கள் ஐந்தில் நான்கைப் பொருத்தி, தலா 8,000 திர்ஹம் சம்பாதித்து, இரண்டாவது பரிசான 200,000 திர்ஹம்களை பகிர்ந்து கொண்டதாகத் தகவல்கள் கூறியுள்ளன. அதேசமயம், சுமார் 1,030 வெற்றியாளர்கள் ஐந்து எண்களில் மூன்றைப் பொருத்தி, தலா 250 திர்ஹம் வென்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.