அமீரக சட்டங்கள்

அமீரகத்தில் தனிநபரின் அனுமதியின்றி அவரது வீடு, காரை புகைப்படம் எடுத்தால் குற்றமா..?? அதற்கான தண்டனை என்ன தெரியுமா..??

விரல்நுனியில் உலகைப் பார்வையிடும் அளவிற்கு இன்றைய டிஜிட்டல் உலகத்தில் பல்வேறு நவீன தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்துள்ளது. ஸ்மார்ட் போன்களின் ஆட்சி வந்ததில் இருந்து சமூக வலைத்தளம் மற்றும் செல்ஃபி போன்றவற்றிற்கு அடிமையானவர்கள் அதிகம் என்பதில் சந்தேகமில்லை.

இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் பிறரது அனுமதியின்றி அவர்களின் புகைப்படங்கள், வீடியோ மற்றும் ஆடியோ போன்றவற்றை பதிவு செய்வது, வெளியிடுவது போன்ற நடத்தைகளுக்கு சட்டப்படி தண்டனை வழங்கப்படும் என்பது ஒருபுறம் இருந்தாலும் பிறரது உடைமைகள், சொத்துகள் போன்றவற்றை படம் எடுத்தாலும் தண்டிக்கப்படுவார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? எனவே, ஒரு நபரின் சொத்தின் புகைப்படங்களை அது அவர்களுடையது என எளிதில் அடையாளம் காண முடியும் என்ற நிலையில், அவர்களிடம் இருந்து அனுமதி பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

வீட்டின் வெளிப்பகுதி, காரின் நம்பர் பிளேட், வீட்டின் பெயர் போன்ற சொத்து விவரங்களை அதன் உரிமையாளர்களின் அனுமதியின்றி புகைப்படம் எடுப்பது சட்டத்திற்கு புறம்பானது என்று துபாயைச் சேர்ந்த சட்ட வல்லுநரான ஜிஹேன் அர்ஃபௌய் தெரிவித்துள்ளர்.

தனிநபரின் தனிப்பட்ட சொத்துக்கள் சட்டத்தால் பாதுகாக்கப்படும் தனிநபர்களின் தனியுரிமையின் ஒரு பகுதியாகும். அதன் உரிமையாளர்களின் அனுமதியின்றி அதை உடல் ரீதியாகவோ அல்லது தார்மீக ரீதியாகவோ தாக்குவது அல்லது எந்த நோக்கத்திற்காகவும் பயன்படுத்துவது சட்டத்தில் அனுமதிக்கப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

அதாவது கம்ப்யூட்டர் நெட்வொர்க் மற்றும் தகவல் தொழில்நுட்பம் மூலம் ஒரு நபரின் தனியுரிமை அல்லது குடும்ப வாழ்க்கையின் புனிதத்தன்மையை கெடுக்கும் நோக்கத்தில் அவர்களின் அனுமதியின்றி நடைபெறும் செயல்களுக்கு ஆறு மாதங்களுக்குக் குறையாத சிறைத்தண்டனை மற்றும் 150,000 திர்ஹம் முதல் 500,000 திர்ஹம்களுக்கு மிகாமல் அபராதம் அல்லது இந்த இரண்டு தண்டனைகளில் ஏதேனும் ஒன்று விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமீரகத்தில் தனியுரிமை மீறல்கள் :

  • ஒரு நபர் பேசுவதை ஒட்டுக் கேட்பது, பதிவு செய்வது மற்றும் ஆடியோ அல்லது வீடியோ பகிர்தல் அல்லது வெளிப்படுத்துதல் போன்றவை தனியுரிமை மீறல்களாகும்.
  • பொது மற்றும் தனிப்பட்ட இடங்களில் பிறரது புகைப்படங்களை எடுத்தல், நகலெடுத்தல், பகிர்தல் மற்றும் வைத்திருப்பது.
  • புகைப்படங்கள், எலெக்ட்ரானிக் படங்கள், செய்திகள், காட்சிகள், கருத்துகள், தரவுகள் மற்றும் தகவல்கள் போன்றவற்றை உண்மையாகவும் சரியானதாகவும் இருந்தாலும், அத்தகைய நபருக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் பரப்புதல்.
  • விபத்து அல்லது பேரிடர்களில் உயிரிழந்தவர்கள் அல்லது பாதிக்கப்பட்டவர்களின் புகைப்படங்களை சம்பந்தப்பட்ட நபர்களின் அனுமதி அல்லது அனுமதியின்றி எடுத்தல் அல்லது வெளியிடுவது.
  • பிறரது லொக்கேஷன் அதாவது புவியியல் தளங்களின் தரவைக் கண்காணித்தல், கண்டறிதல், வெளிப்படுத்துதல், பதிவு செய்தல்.

இது போன்ற தனியுரிமை அத்துமீறல் செயல்களில் ஈடுபடுவோர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இவையனைத்திற்கும் சிறைத்தண்டனை அல்லது 50,000 க்கு குறையாத மற்றும் 500,000 க்கு மிகாமல் அபராதம் விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

OGH லீகலின் அசோசியேட் ஹரி வாத்வானாவின் கூற்றுப்படி, இந்த விதியின் 1 முதல் 3 வரையிலான பிரிவுகள் தனிப்பட்ட தனியுரிமையை மீறும் கண்ணோட்டத்தில் பொருத்தமானதாக இருக்கலாம், அதேசமயம் பின்வரும் தனிநபர்களின் தனியுரிமை மற்றும் குடும்ப வாழ்க்கைக்கான உரிமையில் தலையிடும் எந்தவொரு நபருக்கும் சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும்.

  • தனிப்பட்ட முறையில் அல்லது ஃபோன் மூலமாகவோ அல்லது வேறு எந்த சாதனம் மூலமாகவோ செய்யப்படும் உரையாடல்களை, எந்தவொரு சாதனத்தின் மூலமும், ஒட்டுக்கேட்டல், அல்லது பதிவு செய்தல் அல்லது பகிர்தல்.
  • தனிப்பட்ட முறையில் எந்தவொரு நபரின் படங்களையும் எந்த வகையான சாதனத்தின் மூலமாகவும் எடுத்தல் அல்லது பகிர்தல்.

அதுமட்டுமின்றி மேற்கூறிய மீறலுக்கு விதிவிலக்குகள் உள்ளன. பெரும்பாலும் பொது நிகழ்வுகளுக்கு விதிவிலக்குகள் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!