வளைகுடா செய்திகள்

எவ்ளோ நேரம் தான் இப்படி காத்திருக்கிறது? கிங் ஃபஹத் சாலையில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால் கடுப்பான பயணிகள்…

சவூதி அரேபியாவின் கிழக்கு பிராந்தியத்தில் அமைந்துள்ள தாஹ்ரான் நகரின் கிங் ஃபஹத் சாலையில் உள்ள காஸ்வேயில் (King Fahd Causeway) விரிவாக்கம் மற்றும் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், கடந்த திங்கள்கிழமை அன்று சுமார் ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து நெரிசலில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சவூதியில் உள்ள இந்த சாலையி்ல் கடந்து செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகளின் திறனையும் அனுபவத்தையும் மேம்படுத்தும் நோக்கில், கிங் ஃபஹத் காஸ்வே ஆணையம் (King Fahd Causeway Authority-KFCA) பயண நடைமுறைகளுக்கான பகுதிகளின் விரிவாக்கம் மற்றும் பராமரிப்பு பணிகளை தற்போது தொடங்கியுள்ளது.

இதன் காரணமாக ஏற்பட்ட நீண்டநேர போக்குவரத்து தாமதத்தினால் வாகன ஓட்டிகளும் பயணிகளும் எதிர்கொண்ட சிரமங்கள் குறித்து பலராலும் புகார் அளிக்கப்பட்டதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அத்துடன் பெரும்பாலான பள்ளிகளில் இரண்டாவது செமஸ்டர் தேர்வு முடிந்து குறுகிய விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்த காலத்தில் அதாவது போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள நேரங்களில் இதுபோன்ற சாலை பராமரிப்புப் பணிகளை தொடங்கியது குறித்து பலரும் வியப்பை வெளிப்படுத்தியுள்ளனர். மேலும் பராமரிப்பு பணிகளை பிற்காலத்தில் ஒத்திவைக்க வேண்டும் என்றும், பாதையை உடனடியாக திறக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில், தற்போது நடைபெற்று வரும் பராமரிப்புப் பணிகள் பல கட்டங்களாக செயல்படுத்தப்படும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் முதல் கட்டப் பணிகள் 3 மாதங்களுக்குள் முடிக்கப்படும் என்றும், மீதமுள்ள பணிகள் அனைத்தும் ஓராண்டுக்குள் அடுத்தடுத்த கட்டங்களாக முடிக்கப்படும் என்றும் ஆணையம் தெரிவித்துள்ளது.

கடந்த மார்ச் 4 அன்று சுமார் 136,000 க்கும் மேற்பட்ட பயணிகள் சவூதி அரேபியாவையும் பஹ்ரைனையும் இணைக்கும் இந்த தரைப்பாலத்தின் வழியாக பயணம் செய்துள்ளனர். இந்த பாலம் திறக்கப்பட்ட நாளிலிருந்து அதன் வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவிற்கு அதிக எண்ணிக்கையிலான பயணிகள் கடந்து புதிய சாதனையையும் படைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த எண்ணிக்கை ஜனவரி 11, 2020 அன்று பயணம் செய்த 131,000 க்கும் அதிகமான பயணிகளை விட அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!