UAE: கனமழையால் சரிந்து விழுந்த பாறைகள்..!! சாலைகள் மூடப்படுவதால் மாற்று வழிகளைப் பயன்படுத்த வேண்டுகோள்..

ஐக்கிய அரபு அமீரகத்தின் பரவலான பகுதிகளில் இன்று செவ்வாய்க்கிழமை (மார்ச் 28) பெய்த கனமழையின் காரணமாக பாறைகள் சரிந்து கிடப்பதால் விபத்துகளைத் தவிர்க்க குறிப்பிட்ட சாலைகள் மூடப்படுவதாக ஷார்ஜா மற்றும் ராஸ் அல் கைமா காவல்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர். குறிப்பாக ராஸ் அல் கைமாவில் உள்ள கோர்ஃபக்கான் மற்றும் டஃப்தா இடையேயான சாலை இரு திசைகளிலும் மூடப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், பாறைகள் சரிந்து பாதிக்கப்பட்ட சாலைகளை தற்போது திறமையான குழுக்கள் ஆய்வு செய்து மதிப்பிட்டு வருவதால், பொதுமக்கள் அனைவரும் சாலை மூடுதல் நடவடிக்கைகளுக்கு கீழ்படிந்து மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுவதாகவும் ராஸ் அல் கைமா காவல்துறை ஆணையம் கூறியுள்ளது.
அத்துடன் டஃப்தா பாலம் முதல் வாஷா சதுக்கம் வரை நீண்டு செல்லும் கோர்ஃபக்கான் சாலையின் ஒரு பகுதி மூடப்பட்டுள்ளதாக ஷார்ஜாவின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள ஒரு ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளது.
எனவே, அல் தைத் சாலை மற்றும் மலிஹா சாலை வழியாக மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் ஷார்ஜா போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது. கோர்ஃபக்கான் சாலையில் சரிந்து கிடந்த பாறைகளின் வீடியோ கிளிப் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டும் வருகிறது.
அமீரகத்தில் இன்று காலை 6 மணி முதல் 7 மணி வரை துபாய், அபுதாபி, ஃபுஜைரா மற்றும் ஷார்ஜாவின் சில பகுதிகளில் மிதமான முதல் கனமழை பெய்து வந்தது. இதனால் சில பகுதிகளில் இன்று தேசிய வானிலை ஆணையம் ஆரஞ்சு எச்சரிக்கை விதித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.