இந்திய செய்திகள்

உங்கள் ஆதார் அட்டையை புதுப்பிக்க இதுதான் சரியான நேரம்… இலவசமாக ஆதாரை அப்டேட் செய்யலாம்..!!

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (Unique Identification Authority of India – UIDAI) குடியிருப்பாளர்கள் தங்கள் ஆதார் அட்டை தொடர்பான ஆவணங்களை ஆன்லைனில் இலவசமாக புதுப்பிக்க அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, ஆதார் போர்ட்டலில் தங்களுடைய ஆவண விவரங்களை புதுப்பிக்க குடியிருப்பாளர்களுக்கு ரூ.50 கட்டணம் தள்ளுபடி செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, அடுத்த மூன்று மாதங்களுக்கு, அதாவது மார்ச் 15 முதல் ஜூன் 14, 2023 வரை இந்த இலவசச் சேவை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், ஆதார் மையங்களில் இந்தச் சேவைக்கு தொடர்ந்து ரூ.50 கட்டணமாக வசூலிக்கப்படும் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.

அத்துடன் 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆதார் அட்டை வழங்கப்பட்டு, புதுப்பிக்கப்படாமல் இருந்தால், அவர்களின் மக்கள்தொகை விவரங்களை மறுபரிசீலனை செய்வதற்காக அடையாளச் சான்று மற்றும் முகவரிச் சான்று (PoI/PoA) ஆவணங்களை பதிவேற்றம் செய்ய UIDAI மக்களை ஊக்குவிப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

ஆகவே, மக்கள்தொகை விவரங்களை (பெயர், பிறந்த தேதி, முகவரி, முதலியன) மாற்ற வேண்டிய அவசியம் இருந்தால், குடியிருப்பாளர்கள் வழக்கமான ஆன்லைன் சேவையையோ அல்லது அருகிலுள்ள ஆதார் மையத்தையோ அணுகலாம். மேலும் இதுபோன்ற சந்தர்ப்பங்களில், சாதாரண கட்டணங்கள் வசூலிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

  • நீங்கள் முதலில் https://myaadhaar.uidai.gov.in/ என்ற லிங்க்கை கிளிக் செய்து உங்கள் ஆதார் எண்ணைப் பயன்படுத்தி உள்நுழையவும்.
  • உடனடியாக, பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஒரு முறை கடவுச்சொல் (One Time Password – OTP) அனுப்பப்படும், அடுத்து ‘Document Update’ என்பதை கிளிக் செய்தால் ஆதார் அட்டை உரிமையாளரின் தற்போதைய விவரங்களைக் காட்டும்.
  • திரையில் காண்பிக்கப்படும் உங்களது விவரங்களை சரிபார்க்க வேண்டும். சரியானதாக உறுதி செய்யப்பட்டால், அடுத்த ஹைப்பர்லிங்கைக் கிளிக் செய்யவும்.
  • அடுத்தபடியாக, கீழ்தோன்றும் பட்டியலில் இருந்து அடையாளச் சான்று மற்றும் முகவரிச் சான்று ஆவணத்தைத் தேர்வு செய்து, ஆவணங்களைப் புதுப்பிக்க அதன் நகல்களைப் பதிவேற்ற வேண்டும்.
  • புதுப்பிக்கப்பட்ட மற்றும் ஏற்றுக்கொள்ளக்கூடிய PoA மற்றும் PoI ஆவணங்களின் பட்டியல் UIDAI இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கிடைக்கும்.

கடந்த பத்து ஆண்டுகளில் இந்திய குடியிருப்பாளர்களின் அடையாளச் சான்றாக ஆதார் எண் உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசுகளால் நடத்தப்படும் கிட்டத்தட்ட 1,200 அரசு திட்டங்கள் மற்றும் சேவைகளை வழங்குவதற்கு ஆதார் அடிப்படையிலான அடையாளம் பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.

அதுபோல, வங்கிகள், NBFCகள் போன்ற நிதி நிறுவனங்கள் உட்பட வழங்குநர்களின் பல சேவைகளும் வாடிக்கையாளர்களை தடையின்றி அங்கீகரிக்கவும், உள்வாங்கவும் ஆதாரைப் பயன்படுத்துகின்றன.

Related Articles

Back to top button
error: Content is protected !!