அமீரக செய்திகள்

துபாய்: நீங்கள் பயணிக்கும் டாக்ஸி சாலிக் கேட் வழியாக சென்றால் கூடுதல் கட்டணம்..!! தவிர்ப்பது எப்படி..??

துபாயில் நீங்கள் டாக்ஸிகளில் பயணிக்கும் போது, டாக்ஸியானது சாலிக் கேட்டை (Salik gate) கடந்து சென்றால் உங்களிடம் கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படும். இந்த கூடுதல் கட்டணத்தை தவிர்க்க முடியுமா என ஒரு சில பயணிகளுக்கு கேள்வி இருக்கலாம்.

அதாவது துபாயை பொறுத்தவரை ஒரு பயணி என்ற முறையில் டோல் கேட்டைத் தவிர்த்து மாற்று வழியில் டாக்ஸியை செலுத்துமாறு கோருவதற்கு உங்களுக்கு உரிமை உண்டு. அதற்கு பயணத்தின் தொடக்கத்திலேயே நீங்கள் சாலிக் கேட் வழியாக செல்ல விரும்பவில்லை என்பதை டாக்ஸி ஓட்டுநரிடம் தெரிவிப்பது சிறந்தது.

இந்தத் தகவல்கள் குறித்த விவரங்கள் துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையத்தின் (RTA) டாக்ஸிகளில் பயணிப்பவர்களுக்கு தெளிவாகக் கிடைக்கும். ஏனெனில் டாக்ஸிகளின் பின் இருக்கையில் ஜன்னல்களில் சாலிக் கேட் தகவல் உள்ள ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளன. குறிப்பாக, இந்த ஸ்டிக்கரில் பயணிகளுக்கான விதிகள் மற்றும் டாக்ஸி கட்டண விவரங்கள் இருப்பதைக் காணலாம்.

RTAவின் கூற்றுப்படி, நீங்கள் பயணிக்கும் டாக்ஸி சாலிக் டோல் கேட்டின் வழியாகச் சென்றால் பயணக் கட்டணத்துடன் சேர்த்து சாலிக் கட்டணமும் வசூல் செய்யப்படும். அதாவது சாலிக் டோல் கேட்டின் கீழ் ஒரு டாக்ஸி நுழையும்போது, பயணிகள் மொத்த கட்டணத்தில் 4 திர்ஹம் கூடுதலாக செலுத்த வேண்டியிருக்கும்.

எனவே, நீங்கள் இந்தக் கட்டணத்தைச் செலுத்த விரும்பவில்லை எனும் போது, சாலிக் டோல் கேட் உள்ள வழியைத் தவிர்க்குமாறு டாக்ஸி டிரைவரிடம் ஆரம்பத்திலேயே கூறலாம். இந்தக் கூடுதல் கட்டணம் 2013 முதல் நடைமுறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

டாக்ஸி பயணிகளின் உரிமைகளின்படி, ஒரு பயணி தான் சேரவேண்டிய இடத்தை அடைய மிகவும் நடைமுறையான வழியைக் குறிப்பிட உரிமை உண்டு என்று RTA தெரிவித்துள்ளது. சாலிக் கட்டணம் தவிர்த்து, கூடுதலாக பிற டாக்ஸி கட்டணங்கள் விதிக்கப்படுவதையும் நீங்கள் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். அதாவது டாக்ஸி ஷார்ஜாவிற்குள் நுழையும் போது 20 திர்ஹம் கூடுதல் கட்டணம் விதிக்கப்படுவதுடன் பொது டாக்ஸியில் அனைத்து வகையான வாகனங்களுக்கும் நிமிடத்திற்கு 50 ஃபில்ஸ் காத்திருப்பு கட்டணம் வசூலிக்கப்படும்.

அமீரகத்தில் டாக்ஸிகளுக்கான ஆரம்பக் கட்டணம்: ஐக்கிய அரபு அமீரகத்தில் டாக்ஸியில் பயணிக்கும்போது, டாக்ஸி மீட்டரில் கட்டணத்தைக் கண்காணிக்க வேண்டும், இது பெரும்பாலும் டாக்ஸி வகை மற்றும் நேரத்தைப் பொறுத்தது.

RTA வெளியிட்டுள்ள விவரங்களின் படி, ஒரு வழக்கமான டாக்ஸிக்கு, காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை தொடக்கக் கட்டணம் 5 திர்ஹம்கள் ஆகும். இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை 5.50 திர்ஹம் ஆரம்பக் கட்டணமாக வசூலிக்கப்படும். மேலும், S’hail, Dubai Taxi Corporation (DTC) அல்லது Hala மூலம் RTA பொது டாக்ஸியை முன்பதிவு செய்தால், நாள் மற்றும் காலவரையறையை பொருட்படுத்தாமல் தொடக்கக் கட்டணமாக 12 திர்ஹம்கள் வசூலிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!