அமீரக செய்திகள்

UAE: மழை, பனிமூட்டமான வானிலையில் வாகனம் ஓட்டும்போது கவனிக்க வேண்டியவை..!! விதிமீறல்களுக்கான அபராத பட்டியல்…

ஐக்கிய அரபு அமீரகத்தின் நிலையற்ற வானிலை காரணமாக சாலைகளில் மூடுபனிகள் அல்லது தூசியானது தெரிவுநிலையைக் குறைக்கலாம். இதனால், அமீரகத்தில் உள்ள தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM), சாலைகளில் கவனமாக செல்லவும், பாதுகாப்பான இடைவெளியை கடைபிடிக்கவும் வாகன ஓட்டிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது. அதே போல் மழையின் போது கவனக் குறைவாக வாகனம் ஓட்டுதல், போக்குவரத்து விதிகளை மீறுதல் போன்றவற்றிற்கு அபராதம் மற்றும் பிளாக் பாயிண்டுகள் விதிக்கப்படுவதுடன் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

எனவே, வாகன ஓட்டிகளுக்கு பல்வேறு எமிரேட்களில் உள்ள அதிகாரிகள் முறையான விதிகளை கடைபிடிக்குமாறு எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் கடுமையாக மாறிவரும் வானிலையின் போது வாகன ஓட்டிகள் கவனத்தில் கொள்ள வேண்டிய போக்குவரத்து விதிமீறல்களின் பட்டியல் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது. அவை:

>> பிறரது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் வாகனம் ஓட்டினால் 2000 திர்ஹம் அபராதம் மற்றும் 23 பிளாக் பாயிண்டுகள் விதிக்கப்படுவதுடன் 60 நாட்களுக்கு வாகனம் பறிமுதல் செய்யப்படும்.

>> சாலைகளில் கடுமையான விபத்து அல்லது காயங்களை ஏற்படுத்தினால் நீதிமன்றத்தால் அபராதம் விதிக்கப்படுவதுடன் 23 பிளாக் பாயிண்டுகள் வழங்கப்படும், மேலும் 30 நாட்களுக்கு வாகனம் பறிமுதல் செய்யப்படும்.

>> வாகனம் ஓட்டும்போது புகைப்படம் எடுத்தால் 800 திர்ஹம் அபராதமும் 4 பிளாக் பாயிண்டுகளும் விதிக்கப்படும்.

>> சிறிய காயங்களை ஏற்படுத்திய பிறகு இலகுரக வாகன ஓட்டுநர் வாகனத்தை நிறுத்தத் தவறினால் 500 திர்ஹம் அபராதம் மற்றும் 8 பிளாக் பாயிண்டுகள் விதிக்கப்படும். மேலும் 7 நாட்களுக்கு வாகனம் பறிமுதல் செய்யப்படும்.

>> அபாய விளக்குகளுடன் (hazard lights) வாகனம் ஓட்டினால் 500 திர்ஹம் அபராதமும் 4 பிளாக் பாயிண்டுகளும் விதிக்கப்படும்.

>> பனிமூட்டமான வானிலையில் விளக்குகள் இன்றி வாகனம் ஓட்டினால் 500 திர்ஹம் அபராதமும் 4 பிளாக் பாயிண்டுகளும் விதிக்கப்படும்.

>> அதிகாரிகளின் அறிவுறுத்தல்களை மீறி பனிமூட்டமான காலநிலையில் வாகனம் ஓட்டினாலும் 500 திர்ஹம் அபராதமும் 4 பிளாக் பாயிண்டுகளும் விதிக்கப்படும்.

>> சாலைகளில் செல்லும்போது திடீரென பாதைகளை மாற்றுகையில் இண்டிகேட்டர்களை பயன்படுத்தத் தவறினால் 400 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும்.

>> மோசமான வானிலையின் போது சரியில்லாத கார் விளக்குகளுடன் வாகனத்தை ஓட்டினால் 400 திர்ஹம் அபராதம் மற்றும் 6 பிளாக் பாயிண்டுகள் விதிக்கப்படும்.

>> பாதுகாப்பான இடத்தை விட்டு வெளியேறத் தவறினால் 400 திர்ஹம் அபராதம் விதிக்கப்படுவதுடன் 4 பிளாக் பாயிண்டுகள் வழங்கப்படும்.

>> மோசமான நிலையில் வாகனத்தின் பின் விளக்குகள் அல்லது இண்டிகேட்டர் விளக்குகள் சரியில்லாத நிலையில் வாகனம் ஓட்டினால் 400 திர்ஹம் அபராதம் விதிக்கப்படுவதுடன் 2 பிளாக் பாயிண்டுகள் வழங்கப்படும்.

>> இவற்றுடன் போக்குவரத்துக் காவலரின் வழிகாட்டுதல்களைக் கடைபிடிக்கத் தவறினால் 400 திர்ஹம் அபராதம் விதிக்கப்படுவதுடன் 4 பிளாக் பாயிண்டுகள் வழங்கப்படும்.

இதேபோன்று, அபுதாபியில் கனமழை, மூடுபனி அல்லது புழுதிப்புயல் காரணமாக சாலைகளில் பார்வைத் திறன் குறையும்போது, வேக வரம்புகள் மாறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாறிக் கொண்டிருக்கும் வேக வரம்புகள் குறித்து வாகன ஓட்டிகளின் தொலைபேசிகளில் அதிகாரிகள் அடிக்கடி அறிவிப்புகளை அனுப்பி வருவதாகக் கூறப்படுகிறது. அத்துடன் நெடுஞ்சாலைகளில் உள்ள எலெக்ட்ரானிக் போர்டுகளில் அனுமதிக்கப்பட்ட வேக வரம்புகள் ஒளிரச் செய்யப்படுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!