துபாய் ஏர்போர்ட் ஷோ 2023: ஸ்மார்ட்டான வழியில் பயணிகளுக்கு சேவை வழங்க ஐந்து புதிய தொழில்நுட்பங்கள்..!!

உலகிலேயே மிகவும் பரபரப்பான விமான நிலையமான துபாய் சர்வதேச விமான நிலையம் உட்பட ஐக்கிய அரபு அமீரகத்தின் விமானப் போக்குவரத்துத் துறையை மேலும் மேம்படுத்த அதிநவீன புதிய தொழில்நுட்பங்கள் அவ்வப்போது பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், உள்ளூர் மற்றும் அரபு பிராந்திய விமான நிலையங்களில் புதிய தொழில்நுட்பங்களுக்கான அதிக தேவையைப் பெறுவதற்காக, கடந்த செவ்வாய்க்கிழமை துபாய் உலக வர்த்தக மையத்தில் திறக்கப்பட்ட ‘துபாய் ஏர்போர்ட் ஷோ 2023’ ல், உலகெங்கிலும் உள்ள நிறுவனங்கள் தங்களது சமீபத்திய கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தியுள்ளன.
அவ்வாறு ஏர்போர்ட் ஷோ கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த ஐந்து அதிநவீன தொழில்நுட்பங்கள் என்னென்ன என்பது பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது:
1. ஸ்மார்ட் கேட்ஸ்:
துபாயை தளமாகக்கொண்ட எமராடெக் நிறுவனம், ஸ்மார்ட் கேட்டின் அட்வான்ஸ் பதிப்பைக் காட்சிப்படுத்தியுள்ளது, இது பயணிகளின் பாஸ்போர்ட் அல்லது போர்டிங் பாஸ்களின் அவசியமின்றி, முக அடையாளம் மற்றும் IRIS அங்கீகாரத்தைப் பயன்படுத்தி செக்-இன் செய்ய அனுமதிக்கிறது.
குறிப்பாக, டெய்ல் கேட்டிங், பைபாஸ் மற்றும் கேட் குதிப்பதைத் தவிர்க்க இது அதிக தொழில்நுட்பக் குறிப்புகளைக் கொண்டுள்ளது. மிகவும் நம்பகமான மற்றும் சரிசெய்ய குறைந்த நேரம் எடுக்கக்கூடிய இந்த ஸ்மார்ட் கேட், கூடிய விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.
2. ஹாடி (Hadi):
இது ஒரு இன்டோர் நேவிகேஷன் (Indoor Navigation) ஸ்மார்ட் ஆப் ஆகும். எமராடெக் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இந்த ஆப், விமான நிலையங்கள் மற்றும் பிற பெரிய வணிக வளாகங்கள் போன்றவற்றிற்கு செல்ல உதவுகிறது.
அதாவது, இதில் பயணிகளுக்கு விமான அறிவிப்புகள் மற்றும் கேட் எண்கள் உள்ளிட்ட விவரங்கள் வழங்கப்படும், எனவே அவர்கள் விமானத்தை தவறவிட மாட்டார்கள். மேலும், நிறுவனங்களின் தேவைகளுக்கு ஏற்ப பயன்பாட்டை தனிப்பயனாக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
3. ட்ரோன் (Drone):
இந்த வரிசையில் அவசர காலங்களில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் அதிநவீன ட்ரோனை துபாய் காவல்துறை காட்சிப்படுத்தியுள்ளது. இதன் சிறப்பம்சம் என்னவெனில், குற்றம் நடக்கும் இடத்தின் நேரலையை மட்டுமல்லாமல் சந்தேக நபர்களுடன் தொடர்பு கொள்ளவும் அதிகாரிகளை அனுமதிக்கிறது. உதாரணமாக, நகரத்தில் பெரிய விபத்து அல்லது தீ விபத்து ஏற்பட்டால் கூட இது பயன்படுத்தப்படலாம்.
4. சூப்பர் பைக்குகள் மற்றும் ஸ்மார்ட் ஜாக்கெட்டுகள்:
துபாய் காவல்துறை, VIP ப்ரோட்டோகால்களுக்காக பாதுகாப்புத் துறையின் ஆண் மற்றும் பெண் ஊழியர்களால் இயக்கப்படும் மோட்டார் சைக்கிளையும் காட்சிப்படுத்தியுள்ளது. கூடவே, மோட்டார் சைக்கிள் அதிகாரிகளின் பாதுகாப்பிற்காக ஏர்பேக்குகளுடன் பொருத்தப்பட்ட பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஜாக்கெட்டுகளும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த ஜாக்கெட் அணிந்து ஓட்டும்போது, கீழே விழுந்தால் காயங்களிலிருந்து அவரைப் பாதுகாக்க ஏர்பேக்குகள் திறக்கப்படும் என்று கூறப்படுகிறது.
5. சுய போர்டிங் கேட் (Self-boarding gate):
மேக்னடிக் என்ற ஜெர்மன் நிறுவனம், விமானத்தின் இறுதிப் போர்டிங்கில் பயணிகளின் மென்மையான மற்றும் விரைவான பயணத்திற்காக, பயணிகள் சுயமாக ஏறுவதற்கான ஸ்மார்ட் கேட் ஒன்றைக் காட்சிப்படுத்தி உள்ளது, இந்த ஸ்மார்ட் கேட்டில் பயணிகள் தங்கள் இருக்கைகளைக் கண்டறிவதற்கான ரசீதையும் அச்சிட முடியும்.
இந்த தொழில்நுட்பம் ஏற்கனவே உலகின் சில விமான நிலையங்களில் விரிவுபடுத்தப்பட்டுள்ள நிலையில், வரும் ஆண்டுகளில் அரபு பிராந்தியத்தில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது விமான நிலைய ஊழியர்கள், ஊனமுற்றோர் மற்றும் குடும்பமாக செல்லும் பயணிகளுக்கு இறுதி போர்டிங்கில் பெரும் உதவியாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.