அமீரக செய்திகள்

துபாய் முழுவதும் பார்க்கிங் பகுதிகளில் சோதனை நடத்திய RTA!! – கட்டணம் செலுத்தாமல் பிடிபட்ட 1,100க்கும் மேற்பட்ட பயணிகள்..

துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) சமீபத்தில் நடத்திய ஆய்வுப் பிரச்சாரத்தில், குடியிருப்பாளர்கள் செய்யும் விதிமீறல்களைப் பதிவு செய்துள்ளது. அவற்றில் மிகவும் பொதுவான குற்றங்களின் பட்டியலில் பேருந்துகளில் நோல் கார்டுகளைப் பயண்படுத்த தவறியது மற்றும் பார்க்கிங் கட்டணத்தைச் செலுத்தாதது போன்றவை முதலிடத்தில் உள்ளன.

RTA ஆறு நாட்களில் நடத்திய 40,000 சோதனைகளில் சுமார் 1,193 விதிமீறல்களைக் கண்டுபிடித்துள்ளது. அவற்றில் பெரும்பாலானவை பொதுப் போக்குவரத்து வசதிகள் மற்றும் சேவைகளைப் பயன்படுத்துதல், குறிப்பிட்ட கட்டணத்தைச் செலுத்தாமல் கட்டண பார்க்கிங் மண்டலத்திற்குள் வாகனத்தை நிறுத்துதல், கோரிக்கையின் பேரில் நோல் கார்டைக் காட்டத் தவறுதல் மற்றும் RTA இன் அறிவுறுத்தல்களுக்கு மாறாக சேவைகள் மற்றும் வசதிகளைப் பயன்படுத்துதல் போன்றவையாகும்.

மேலும், துபாய் அமெரிக்கன் அகாடமி, அல் கைல் கேட், அல் குஸ், மஜ்லிஸ் அல் கரிஃபா, புர்ஜ் அல் அரப் ஹோட்டல் மற்றும் அல் வாஸல் ஸ்ட்ரீட் உள்ளிட்ட துபாய் எமிரேட்டின் பல்வேறு பார்க்கிங் பகுதிகளை குறிவைத்து இந்த சோதனை பிரச்சாரம் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து RTA இன் பொது போக்குவரத்து ஏஜென்சியின் பயணிகள் போக்குவரத்து நடவடிக்கை கண்காணிப்பு இயக்குனர் சையத் அல் பலுஷி என்பவர் கூறுகையில், இந்த ஆய்வுப் பிரச்சாரங்களானது, துபாய் காவல்துறை மற்றும் துபாயில் உள்ள வதிவிட மற்றும் வெளிநாட்டினர் விவகாரங்களுக்கான பொது இயக்குநரகம் உட்பட பல சம்பந்தப்பட்ட அமைப்புகளின் ஒருங்கிணைப்பில் நடத்தப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், துபாயில் பொதுப் பேருந்து வசதிகளை பயண்படுத்தும் பயணிகளால் செய்யப்படும் கட்டண ஏய்ப்பைக் குறைக்கவும், அங்கீகரிக்கப்படாத செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தவும் எமிரேட்டில் உள்ள பார்க்கிங் மண்டலங்களை அவர்கள் ஆய்வு செய்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இந்த பிரச்சாரங்களின் போது, ​​சில விதி மீறல்கள் பதிவாகியுள்ளன, எனவே சுற்றுலாவின் நன்மதிப்பைக் கெடுக்கும் விதிமீறல்கள், சட்டவிரோத நடவடிக்கைகள் மற்றும் தவறான நடத்தைகளைக் கண்டறிய, பயணிகள் போக்குவரத்து நடவடிக்கைகள் கண்காணிப்புத் துறை துபாய் முழுவதும் பல இடங்களில் ஆய்வு பிரச்சாரங்களை மேற்கொள்ளும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஆகவே, பொதுப் பேருந்துகளைப் பயன்படுத்துவோர் உரிய கட்டணத்தை நோல் கார்டு மூலம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், அமீரக குடியிருப்பாளர்கள் மற்றும் உலகம் முழுவதிலுமிருந்து துபாய்க்கு வரும் பார்வையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் சேவைகளை வழங்குவதற்கான RTA இன் முயற்சிகளுக்கு இது ஆதரவளிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button
error: Content is protected !!