துபாய் ஏர்போர்ட்டில் 14 நாட்கள் காரை பார்க்கிங் செய்ய இவ்வளவுதானா.? குறுகியகால விடுமுறையில் செல்பவர்களுக்கு DXB-யின் அதிரடி சலுகை..!!

குறுகியகால விடுமுறையாக சொந்த நாட்டிற்கு அல்லது வெளிநாடுகளுக்கு பயணம் செய்யும் அமீரக குடியிருப்பாளர்கள், துபாய் சர்வதேச விமான நிலையத்தில் (DXB) தங்களின் வாகனங்களை ஏழு முதல் பதினான்கு நாட்கள் பார்க்கிங் செய்வதற்கு மிகக்குறைந்த கட்டணம் மட்டும் செலுத்தினால் போதும் என்பது உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்? இந்த புதிய அறிவிப்பு குறித்து தகவல் தெரிந்த அனைவரும் மகிழ்ச்சியில் திளைப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.
ஐக்கிய அரபு அமீரகம் உட்பட உலகின் பல்வேறு நாடுகளில் கோடை விடுமுறை நெருங்கி வருவதால், பள்ளி விடுமுறை காரணமாக ஏராளமான வெளிநாட்டவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் சொந்த நாடுகளுக்கு பயணம் செய்ய தயாராகி வருகின்றனர். இந்நிலையில் துபாய் ஏர்போர்ட்ஸ் குடியிருப்பாளர்களுக்கு டெர்மினல் பார்க்கிங் ஏரியாவில் பார்க்கிங் செய்வதற்கான கட்டணம் குறித்த தகவல்களை வழங்கியுள்ளது.
இது குறித்து DXB அதன் ட்விட்டர் பக்கத்தில், “உங்கள் விடுமுறையை நீங்கள் முழுமையாக அனுபவிக்கும்போது உங்கள் காரை நாங்கள் கவனித்துகொள்வோம். அதாவது, 3 நாட்களுக்கு வெறும் 100 திர்ஹம்கள், 7 நாட்களுக்கு 200 திர்ஹம்கள் மற்றும் மே 15 முதல் ஜூன் 30 2023 வரை 14 நாட்களுக்கு 300 என்ற முறையில் கட்டணம் வசூலிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக விமான நிலையம் வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளது, அதில் துபாய் சர்வதேச விமான நிலையத்தின் கார் பார்க்கிங் பகுதியில் பார்க்கிங் கட்டணங்கள் குறித்து உங்களுக்கு தெரியுமா என்றும், வாராந்திர கட்டணம் எவ்வளவு என்று நீங்கள் மதிப்பிடுவீர்கள் என்றும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களிடம் கேட்கப்படுகிறது.
அதற்கு வெவ்வேறு நாட்டைச் சேர்ந்த பலரும் மற்றும் வெவ்வேறு வயதினர்களும் அவர்களது யூகங்களை பதிலாக தெரிவிக்கின்றனர். அவர்களில் சிலர் இதற்கு 3,000 திர்ஹம்கள் செலவாகும் என்றும், மற்றவர்கள் 4,800 திர்ஹம்கள் என்றும் தோராயமாக மதிப்பிட்டும் கூறுகின்றனர்.
மேலும், சிலர் சுமார் 1,000 முதல் 1,500 வரை இருக்கும் என மதிப்பிடுகின்றனர். ஆனால், துபாய் சர்வதேச விமான நிலையத்தில் பார்க்கிங்கின் உண்மையான விலையைக் கேட்டு வீடியோவில் பலரும் வியப்படைகின்றனர். அதுமட்டுமின்றி, இந்த சிக்கனமான விலையானது DXB விமான நிலையத்தில் தங்கள் வாகனங்களை பார்க்கிங் செய்வதற்கும், பயணத்தைத் தொடங்குவதற்கும் அதிகமான மக்களை ஊக்குவிக்கும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும், துபாய் விமான நிலையம் அறிவித்துள்ள இந்த சலுகை ஜூன் மாதம் 30 ம் தேதி வரை என்ற குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே கிடைக்கும் என்பதையும் பயணிகள் அறிந்திருப்பது அவசியமாகும்.