அமீரக செய்திகள்

எமிரேட்ஸ் பயணிகள் அனைவரும் இனி இலவச Wi-Fi ஐ அனுபவிக்கலாம்!! – எமிரேட்ஸ் நிறுவனம் அறிவிப்பு..

எமிரேட்ஸ் விமானத்தில் பயணிக்கும் பயணிகள் அனைவரும் இனி ஏதேனும் ஒரு வகையான இலவச வைஃபை (Wi-Fi) இணைப்பை அனுபவிக்க முடியும் என்று விமான நிறுவனம் கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது. விமான நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, பயணிகள் எமிரேட்ஸ் ஸ்கைவார்ட்ஸில் (Emirates Skywards) பதிவு செய்தவுடன் இலவச Wi-Fi ஐ அணுகலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

எமிரேட்ஸின் புதிய அறிவிப்பின்படி, ஒவ்வொரு வகுப்பிலும் பயணம் செய்யும் அனைத்து எமிரேட்ஸ் ஸ்கைவார்ட்ஸ் உறுப்பினர்களும் இப்போது சில வகையான இலவச இணைப்பை அனுபவிக்க முடியும். அதாவது நீலம் (Blue), வெள்ளி (Silver), தங்கம் (Gold) அல்லது பிளாட்டினம் (Platinum) போன்ற எந்த வரிசை ஸ்கைவார்ட்ஸ் உறுப்பினர்களாக இருந்தாலும், மற்றும் எகனாமி, ப்ரீமியம் எகனாமி, பிசினஸ் அல்லது முதல் வகுப்பு போன்ற எந்த வகுப்பில் பயணம் செய்தாலும் இனி அனைவரும் இலவச வைஃபை இணைப்பைப் பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதலாக, முதல் வகுப்பு பயணிகள் ஸ்கைவார்ட்ஸ் உறுப்பினர்களாக இருக்கும் பட்சத்தில் அன்லிமிட்டெட் இலவச இணையத்தைப் பெறுவார்கள். இந்த வரம்பற்ற இணைப்பு அவர்கள் விமானத்தில் இருக்கும்போது ஆன்லைனில் ஷாப்பிங் செய்யவோ அல்லது வேலை செய்யவோ உதவும். அதே போல் பிசினஸ் வகுப்பில் பயணிக்கும் வெள்ளி, தங்கம் மற்றும் பிளாட்டினம் ஸ்கைவார்ட்ஸ் உறுப்பினர்களும் இதே இலவச வைஃபை இணைப்பைப் பெறலாம். அதிலும் பிளாட்டினம் ஸ்கைவர்ட்ஸ் உறுப்பினர்களுக்கு அனைத்து வகுப்புகளிலும் இலவச வைஃபை வசதியும் உள்ளது.

மேலும், 2024 இல் எமிரேட்ஸ் விமான சேவையில் இணையவிருக்கும் 50 புதிய ஏர்பஸ் A350 விமானங்களில், இன்மார்சாட்டின் GX Aviation மூலம் இயக்கப்படும் புதிய அதிவேக, இன்ஃப்லைட் பிராட்பேண்டை வழங்குவதாகவும் எமிரேட்ஸ் அறிவித்துள்ளது. இந்த புதிய ஒப்பந்தமானது ஆர்க்டிக் கடல் மேலே விமானம் பறக்கும் போதிலும், மேம்பட்ட இணைப்பு மற்றும் அதிக உலகளாவிய கவரேஜ் மூலம் பயணிகளின் அனுபவத்தை கணிசமாக மேம்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.

இதன் மூலம் உலகின் முதல் மற்றும் ஒரே உலகளாவிய பிராட்பேண்ட் நெட்வொர்க்கை இயக்கும் இன்மார்சாட்டின் குளோபல் எக்ஸ்பிரஸ் (GX) செயற்கைக்கோள் வலையமைப்பைப் பயன்படுத்திக் கொள்ளும் முதல் எமிரேட்ஸ் விமானமாக ஏர்பஸ் A350கள் இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆகவே, இலவச வைஃபையை பெற விருப்பமுள்ளவர்கள் https://emirates.com/ மற்றும் https://flydubai.com/ வழியாக அல்லது அதிகாரப்பூர்வ Emirates மொபைல் ஆப் அல்லது flydubai ஆப் மூலமாகவும் பதிவு செய்யலாம். விமான நிறுவனங்கள், ஹோட்டல்கள், கார் வாடகை, வங்கிகள் மற்றும் பல சில்லறை மற்றும் வாழ்க்கை முறை விருப்பங்கள் உட்பட வானிலும் தரையிலும் ஒப்பிடமுடியாத பல வெகுமதிகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கிவரும் எமிரேட்ஸ் ஸ்கைவர்ட்ஸ், உலகளவில் 30 மில்லியனுக்கும் அதிகமான உறுப்பினர்களைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

Related Articles

Back to top button
error: Content is protected !!