இதுவரை இல்லாதளவில் 10.9 பில்லியன் திர்ஹம் லாபத்தை ஈட்டிய எமிரேட்ஸ் நிறுவனம்..!! 17,000 பேரை பணியமர்த்தியுள்ளதாகவும் தகவல்…

எமிரேட்ஸ் குழுமம் இதுவரை இல்லாத அளவிற்கு சுமார் 10.9 பில்லியன் திர்ஹம் ($3.0 பில்லியன்) லாபம் ஈட்டியுள்ளதாக தற்பொழுது அறிவித்துள்ளது. அதன் 2022-23 ஆண்டு அறிக்கையை வெளியிட்ட எமிரேட்ஸ் நிறுவனம், கடந்த ஆண்டு நஷ்டம் அடைந்திருந்த நிலையில், தற்போது கிட்டத்தட்ட அனைத்து துறைகளிலும் மிகப்பெரிய வளர்ச்சியைக் கண்டுள்ளது என குறிப்பிட்டுள்ளது. இது குறித்து வெளியான அறிக்கையின் படி, சுமார் 119.8 பில்லியன் திர்ஹம்களுடன் 81% வருவாயை எமிரேட்ஸ் குழுமம் ஈட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், எமிரேட்ஸ் மற்றும் dnata (Dubai National Air Travel Agency) ஆகிய இரண்டும் 2022-23 இல் குறிப்பிடத்தக்க வருவாய் அதிகரிப்பைக் கண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகெங்கிலும் உள்ள அனைத்து தொற்றுநோய் தொடர்பான கட்டுப்பாடுகளையும் நீக்கியதைத் தொடர்ந்து அதன் விமான போக்குவரத்து மற்றும் பயணம் தொடர்பான செயல்பாடுகளை விரிவுபடுத்தியது வருவாய் அதிகரிப்பிற்கு முக்கியக் காரணமாகும் என கூறப்படுகின்றது.
மேலும், எமிரேட்ஸ் குழுமம் கடந்த ஆண்டு 3.8 பில்லியன் திர்ஹம் ($1.0 பில்லியன்) இழப்புடன் ஒப்பிடும்போது, மார்ச் 2023 இல் முடிவடைந்த நிதியாண்டில் 10.9 பில்லியன் திர்ஹம் ($3.0 பில்லியன்) லாபத்தைப் பதிவு செய்து சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதேசமயம், குழுமத்தின் ரொக்க இருப்பு கடந்த ஆண்டை விட 65% அதிகரித்து 42.5 பில்லியன் திர்ஹம்களாக ($11.6 பில்லியன்) உள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் மற்றும் குழுமத்தின் தலைவரும் தலைமை செயல் அதிகாரியுமான ஷேக் அகமது பின் சயீத் அல் மக்தூம் அவர்கள் கூறுகையில், 2022-23 ஆம் ஆண்டுக்கான எங்கள் செயல்திறன் வருவாய் மீட்பு மட்டுமின்றி, சாதனையின் முடிவும் ஆகும் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், எமிரேட்ஸ் சேவை செய்யும் சந்தைகளில் விமானப் போக்குவரத்து மற்றும் சுற்றுலாவை மீட்டெடுப்பதில் மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 172.5 பில்லியன் திர்ஹம் ($47 பில்லியன்) மதிப்பிலான பங்களிப்பை உருவாக்குவதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் அவர் எமிரேட்ஸ் குழுமத்தின் வெற்றிக்காக ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாய் ஆட்சியாளருமான மாண்புமிகு ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் அவர்களுக்கு நன்றி தெரிவித்தத்துடன் அவரது தலைமை இல்லாமல் இந்த சாதனை சாத்தியமில்லை என்று கூறியுள்ளார். அத்துடன் அவரது உந்துதலும் ஆதரவும் இல்லாவிட்டால், எமிரேட்ஸ் இன்று நாம் இருப்பதை விட பாதி அளவு இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
இது பற்றி கிடைத்துள்ள புள்ளிவிவரத் தகவல்களின் படி, எமிரேட்ஸ் நிறுவனம் கொரோனா பரவலின் போது வாங்கிய மொத்த 17.5 பில்லியன் திர்ஹம் கடனில் 3 பில்லியன் திர்ஹம் அதிகமாக திருப்பிச் செலுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து இந்த நிதியாண்டில் 4.5 பில்லியன் திர்ஹம் கடனை மறுவிலை செய்ய அனுமதித்ததுடன் இரண்டு புதிய B777 சரக்கு விமானங்களை வாங்குவதற்கு நிதியளிப்பதற்காக 1.2 பில்லியன் திர்ஹம்களை இஸ்லாமிய நிதி குத்தகை மூலம் உயர்த்தியுள்ளது.
எமிரேட்ஸ் குழுமத்தைப் போலவே, dnata தனது லாபத்தை 201% அதிகரித்து 331 மில்லியனாக ($90 மில்லியன்) உயர்த்தியுள்ளது. மேலும், உலகம் முழுவதும் விமானம் மற்றும் பயண நடவடிக்கைகள் வளர்ந்து வரும் நிலையில், dnata இன் மொத்த வருவாய் 74% அதிகரித்து 14.9 பில்லியன் திர்ஹம்களாக உள்ளது, அவற்றில் dnata இன் சர்வதேச வணிகங்கள் அதன் வருவாயில் 72% ஆகும், இது முந்தைய ஆண்டை விட 10% அதிகமாகும்.
எமிரேட்ஸ் மற்றும் dnata தரும் வேலைவாய்ப்பு:
எமிரேட்ஸ் அதன் அதிக லாபம் தரும் ஆண்டை அறிவித்துள்ள நிலையில், சுமார் 15,000க்கும் அதிகமான பணியாளர்களை கடந்த ஆண்டில் மட்டும் பணியமர்த்தியுள்ளதாக தெரிவித்துள்ளது. நுகர்வோர் தேவை அதிகரித்து வருவதன் விளைவாக எமிரேட்ஸ் மற்றும் dnata ஆகியவை 2022-23 ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை அதிகரித்துள்ளன. இறுதியாக குழுவின் மொத்த பணியாளர்கள் 20% அதிகரித்து 102,379 பணியாளர்களாக உள்ளனர், இது 160க்கும் மேற்பட்ட வெவ்வேறு தேசங்களை பிரதிநிதித்துவப்படுத்துகிறது.
ஏற்கனவே கடந்த ஆண்டு பல முறை, நிறுவனம் ஆட்சேர்ப்புக்கான நேர்காணல்களை நடத்தியது மற்றும் ஆட்சேர்ப்பதற்காக தொழில் கண்காட்சிகளில் (Career Fair) பங்கேற்ற நிலையில், மீண்டும் செப்டம்பரில் மென்பொருள் பொறியியல், DevOps, ஹைப்ரிட் கிளவுட், Agile டெலிவரி, தொழில்நுட்ப தயாரிப்பு மேலாண்மை, டிஜிட்டல் ஒர்க் பிளேஸ், சைபர் செக்யூரிட்டி, IT கட்டிடக்கலை, கண்டுபிடிப்பு மற்றும் சேவை மேலாண்மை உட்பட பல துறைகளில் 800 க்கும் மேற்பட்டவர்களை பணியமர்த்துவதாக அறிவித்திருந்தது.
இதனையடுத்து டிசம்பரில், ஆண்ட்வெர்ப், சரஜெவோ, மிலன், பார்சிலோனா, நைஸ், மாண்ட்பெல்லியர் மற்றும் போட்ரம் ஆகிய இடங்களில் கேபின் பணியாளர்களை பணியமர்த்த நேர்காணல்களை நடத்தியது. குழுவின் இணையதளத்தில் உள்ள 200 திறந்த காலியிடங்களில் அமீரகத்தில் பாதிக்கும் மேற்பட்ட பணியிடங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.