அமீரக செய்திகள்

ஆறு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு UAE – கத்தார் இடையே மீண்டும் தொடங்கிய இராஜதந்திர உறவு..!!

ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் கத்தார் ஆகிய இரு நாடுகளின் தூதரகங்களும் ஆறு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் திறப்பதாக அறிவித்துள்ளன. அதன்படி, கடந்த திங்கள்கிழமை (ஜூன் 19) முதல் அபுதாபி மற்றும் துபாயில் உள்ள கத்தார் தூதரகம், தோஹாவில் உள்ள அமீரக தூதரகம் ஆகியவை மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளது.

இராஜதந்திர உறவுகள் மீண்டும் தொடங்கப்பட்டதற்கு, இரு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களும் தொலைபேசியில் பேசி ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொண்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கிடையில், இரு நாடுகளின் தூதரகங்களை மீண்டும் திறப்பதை அமெரிக்கா வரவேற்றுள்ளது.

ஆறு வருட இடைவெளி ஏன்?

பயங்கரவாத குழுக்களுக்கு தோஹாவின் ஆதரவு, துருக்கி மற்றும் ஈரானுடன் மிக நெருக்கமாக இருப்பது போன்ற காரணங்களால் ஐக்கிய அரபு அமீரகம், எகிப்து, சவூதி அரேபியா மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகள் 2017 ஆம் ஆண்டு கத்தாரைப் புறக்கணித்து அதனுடனான உறவைத் துண்டித்தன. அதேசமயம், கத்தாரில் உள்ள எரிவாயு வளமும் பிற நாடுகளின் புறக்கணிப்பிற்கும் இராஜதந்திர நெருக்கடிகளுக்கும் முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது.

அதன்பிறகு, ஜனவரி 2021 இல் GCC உச்சிமாநாட்டின் முடிவில் இந்த நாடுகளுக்கிடையேயான மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க, அல்-உலா பிரகடனத்தில் நாடுகள் கையெழுத்திடப்பட்டன. இதனையடுத்து கடந்த ஆண்டு இறுதியில் FIFA உலகக் கோப்பையை நடத்திய கத்தார், சவுதி அரேபியா, எகிப்து மற்றும் UAEயில் இருந்து வந்திருந்த தலைவர்களை வரவேற்று இந்த நாடுகளுடனான உறவை மீண்டும் தொடங்கியது.

முதன் முதலில் சவூதி அரேபியாவும், எகிப்தும் தோஹாவிற்கு தங்களின் தூதரக அதிகாரிகளை நியமித்ததை தொடர்ந்து, பயண இணைப்புகள் உட்பட அனைத்து உறவுகளையும் மீட்டெடுப்பதாக ஏப்ரல் மாதம் பஹ்ரைன் நாடு அறிவித்தது. இந்த நாடுகளை தொடர்ந்து தற்போது ஐக்கிய அரபு அமீரகமும் கத்தாருடனான தங்களின் இராஜதந்திர உறவுகளை மீட்டெடுப்பதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!