சவூதி அரேபியா: ஒரே வாரத்தில் கைது செய்யப்பட்ட 11,549 வெளிநாட்டவர்கள்.. 6,535 பேரை நாடு கடத்திய அரசு.. சட்டங்களை மீறியவர்களுக்கு எதிராக நடவடிக்கை..!!
![](https://www.khaleejtamil.com/wp-content/uploads/2023/05/5AC22AE5-DC91-4CF0-9543-D066E94A8097.jpeg)
சவுதி அரேபியா நாட்டின் குடியுரிமை, தொழிலாளர் மற்றும் எல்லைப் பாதுகாப்புச் சட்டங்களை மீறிய, வெளிநாடுகளை சேர்ந்த சுமார் 11,549 பேர், ஒரு வாரம் நடத்தப்பட்ட நாடு தழுவிய பிரச்சாரங்களின் போது கைது செய்யப்பட்டதாக சவூதி ராஜ்யத்தின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அமைச்சகத்தின் சமீபத்திய அறிவிப்பின்படி, கடந்த மே 4ம் தேதி முதல் 10ம் தேதி வரையிலான காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட கைதுகளில், ராஜ்யத்தின் ரெசிடென்ஸ் அமைப்பை மீறியதற்காக 6,344 பேரும், 1,464 பேர் தொழிலாளர் சட்டங்களை மீறியதற்காகவும், மேலும் 3,741 பேர் பிற விதிமீறல்களில் ஈடுபட்டதற்காகவும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இத்துடன், சுமார் 4,352 பெண்கள் உட்பட மொத்தம் 25,128 சட்ட விரோதிகள் தற்போது ராஜ்ஜியத்தில் சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. அவர்களில் 18,607 பேர் நாடுகடத்தப்படுவதற்கு முன்பான சட்ட நடவடிக்கைகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் 6,535 பேர் ராஜ்யத்திலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ள நிலையில், 1,376 சட்டவிரோதமானவர்கள் நாடு திரும்புவதற்கான பயண முன்பதிவுகளை முடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
அதே காலகட்டத்தில், சவுதியின் குடியுரிமை, எல்லை மற்றும் பணி விதிமுறைகளை மீறி சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைந்தவர்களுக்கு போக்குவரத்து, தங்குமிடம் மற்றும் பணியமர்த்துதல் ஆகிய வசதிகளை வழங்கியதற்காக 17 பேர் கைது செய்யப்பட்டதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே, அத்துமீறி நாட்டிற்குள் நுழையும் ஊடுருவல்காரர்களுக்கு வசதி செய்பவர்கள் அல்லது அவர்களுக்கு போக்குவரத்து, தங்குமிடம் அல்லது ஏதேனும் உதவிகளை வழங்குபவர்கள் அதிகபட்சமாக 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் 1 மில்லியன் SR வரை அபராதம் விதிக்கப்படுவார்கள் என்று சவுதி அரேபிய உள்துறை அமைச்சகம் பலமுறை எச்சரித்துள்ளது.
அத்துடன் போக்குவரத்து மற்றும் தங்குமிடங்களை பறிமுதல் செய்தல், அவர்களை அவமானப்படுத்தும் வகையில் பொதுவெளியில் அவர்களின் பெயரை வெளியிடுதல் போன்ற தண்டனைகளும் வழங்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
சுமார் 34.8 மில்லியன் மக்கள் வாழும் சவுதி அரேபியாவில், மிகப்பெரிய அளவில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். மேலும், தொடர்ச்சியாக சவூதி அரேபியாவின் சட்டங்களை மீறும் வெளிநாட்டவர்களைக் கைது செய்வது, அவர்களுக்கு தண்டனை வழங்குவது பின்னர் நாடு கடத்தப்படுவது போன்ற செய்திகளும் தொடர்ந்து வெளியாகின்றன.
இதே போன்று, கடந்த வாரம் ஏப்ரல் 27ம் தேதி முதல் மே 3ம் தேதி வரை, நாடு முழுவதும் நடத்தப்பட்ட சோதனைகளில், 11,000 க்கும் மேற்பட்ட சட்ட விரோதிகள் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் அறிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.