அமீரக செய்திகள்

அமீரகத்தில் சாலைப் பாதுகாப்பை அதிகரிக்க புதிய விதிமீறல் அபராதங்கள் அறிவிப்பு!! – Dh2,000 வரை அபராதம்.. உள்துறை அமைச்சகம் ட்வீட்…

ஐக்கிய அரபு அமீரகத்தில் சாலைப் பாதுகாப்பை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டு, குறிப்பாக மழை மற்றும் நிலையற்ற வானிலை தொடர்பான அவசரகாலங்களில் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் 2,000 திர்ஹம் வரையிலான புதிய போக்குவரத்து அபராதங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் ட்விட்டரில் தெரிவித்துள்ளது.

புதிய அபராதங்கள்:

1. மழை நேரங்களில் பள்ளத்தாக்குகள், வெள்ளம் சூழ்ந்த பகுதிகள் மற்றும் அணைகளுக்கு அருகில் கூடினால், 1,000 திர்ஹம் அபராதமும் ஆறு பிளாக் பாயிண்டுகளும் விதிக்கப்படும்.

2. வெள்ளம் சூழ்ந்த பள்ளத்தாக்கு பகுதிகளில் அவற்றின் ஆபத்தை பொருட்படுத்தாமல் அப்பகுதிகளில் நுழைபவர்களுக்கு 2,000 திர்ஹம் அபராதம் மற்றும் 23 பிளாக் பாயிண்டுகள் விதிக்கப்படுவதுடன் அவர்களின் வாகனம் அறுபது நாட்களுக்குப் பறிமுதல் செய்யப்படும்.

3. போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் அதிகாரிகளைத் தடுப்பது அல்லது அவசர காலங்கள், பேரிடர்கள், நெருக்கடிகள் மற்றும் மழையின் போது வெள்ளம் சூழ்ந்த பள்ளத்தாக்குகளில் ஆம்புலன்ஸ் மற்றும் மீட்பு வாகனங்கள் போன்றவற்றை தடுத்து நிறுத்துவது போன்றவற்றிற்கு 1,000 திர்ஹம் அபராதம் விதிக்கப்படுவதுடன் நான்கு பிளாக் பாயிண்டுகளும் 60 நாட்களுக்கு வாகன பறிமுதலும் செய்யப்படும்.

நாட்டில் பரவலாக மழை பெய்யும் போது, பெரும்பாலான குடியிருப்பாளர்கள் இனிமையான வானிலையை அனுபவிக்க மலைப்பாங்கான பகுதிகளை நோக்கிச் செல்வது இயல்பானது. இருப்பினும், மழை வெள்ளம் தாழ்வான பகுதிகளை நோக்கி பாய்ந்து வருவதால் ஏற்படும் அபாயம் குறித்து கடந்த காலங்களில் பல எச்சரிக்கைகள் வழங்கப்பட்டுள்ளன.

பொதுவாக, ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அதிகாரிகள் மோசமான வானிலையின் போது குடியிருப்பாளர்கள் பள்ளத்தாக்குகள் மற்றும் அணைகளிலிருந்து விலகி இருக்க எச்சரிக்கைகளை வெளியிடுகின்றனர். இதற்கு காரணம் கனமழையின் போது மலைகளில் கொட்டுகின்ற தண்ணீரால் பள்ளத்தாக்குகளில் ஏற்படுகின்ற வெள்ளப்பெருக்கே ஆகும்.

இந்நிலையில், சட்டங்கள் மற்றும் அபராதங்கள் மூலம், மழைக்காலங்களில் வெள்ளம் ஏற்படும் பகுதிகளுக்கு குடியிருப்போர் மற்றும் சுற்றுலாப் பயணிகள் தனியாகவோ அல்லது கூட்டமாகவோ செல்வது இப்போது அமீரக அரசின் புதிய உத்தரவின்படி சட்டவிரோதமாக்கப்பட்டுள்ளது.

அமீரகத்தில் கனமழையின் போது வெளியே செல்லும் மக்கள், வெள்ளத்தில் சிக்கித் தவித்த சம்பவங்கள் ஏராளமாக நடந்துள்ளன. மேலும் கடந்த ஆண்டு நாட்டின் கிழக்கில் கனமழை பெய்தபோது, அதில் சிக்கிக்கொண்ட நூற்றுக்கணக்கான மக்களைக் காப்பாற்ற பல அவசரகால மீட்பு குழுக்கள் 24 மணிநேரமும் வேலை செய்ய வேண்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. இவ்வாறான அசம்பாவிதங்களை தடுக்கும் விதமாகவே புதிய அபராதங்களை உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளதாக தெரிகிறது.

இது குறித்து ஃபெடரல் டிராஃபிக் கவுன்சிலின் தலைவரான பிரிக்-ஜெனரல் இன்ஜினியர் ஹுசைன் அல் ஹர்தி அவர்கள் பேசுகையில், மழையின் போது பள்ளத்தாக்குகளில் அபாயம் இருப்பதால் அப்பகுதிகளுக்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், புதிய சட்ட திருத்தங்கள் சாலைப் பயனர்கள், ஓட்டுநர்கள் மற்றும் பாதசாரிகள் என அனைத்து தரப்பினரும் நிலையற்ற வானிலையின் போது, எச்சரிக்கையுடன் செயல்பட வழிவகுக்கும் என்று கூறியுள்ளார்.

அதுபோல, அவர்கள் போக்குவரத்து விதிமுறைகள், அடையாளங்கள் மற்றும் சிக்னல்களை கடைபிடித்து, காவல்துறை அதிகாரிகளின் அறிவுறுத்தல்களுக்கு இணங்குவதுடன் போக்குவரத்து, சிவில் பாதுகாப்பு, அவசரநிலை, பேரிடர் மற்றும் நெருக்கடி மேலாண்மை பணியாளர்களின் வழிகாட்டுதலைப் பின்பற்ற வேண்டும் என்றும், வாகன ஓட்டிகள் தங்கள் உயிருக்கோ அல்லது பிறர் உயிருக்கோ ஆபத்தை ஏற்படுத்தக் கூடாது என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

Related Articles

Back to top button
error: Content is protected !!