அமீரக செய்திகள்

உலகளவில் சமூக ஊடக தலைநகரமாக உருவெடுத்த அமீரகம்..!! ஒரு நாளில் 7 மணி நேரத்திற்கும் மேல் மக்கள் சமூக ஊடகத்தில் செலவிடுவதாக தகவல்..

ஐக்கிய அரபு அமீரகமானது உலகளவில் ஏராளமான சமூக ஊடக பிரபலங்கள் மற்றும் அதிகமான வணிகங்கள் தங்கள் தயாரிப்புகளை விற்பனை செய்யவும் விளம்பரப்படுத்தவும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதன் காரணமாக உலகின் சமூக ஊடக தலைநகரம் என்று பெயரிடப்பட்டுள்ளது.

மேலும், இங்கு மக்கள் சராசரியாக ஒரு நாளைக்கு ஏழு மணி நேரம் 29 நிமிடங்கள் இணையத்தில் செலவிடுகிறார்கள் என்றும், இதனடிப்படையில் உலகளவில் 13 வது இடத்தை அமீரகம் பிடித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அதேசமயம், ஒரு நாளைக்கு சராசரியாக மக்கள் ஒன்பது மணிநேரம் 38 நிமிடங்களை சமூக ஊடகங்களில் செலவிடுவதன் அடிப்படையில் தென்னாப்பிரிக்கா முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

பெரும்பாலான அமீரக குடியிருப்பாளர்கள் ஃபேஸ்புக், டிக்டோக் போன்றவற்றை அதிகம் பயன்படுத்துவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் நூறு சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் ஃபேஸ்புக்கில் உள்ளதாக VPN சேவைகளை வழங்கும் Proxyrack தெரிவித்துள்ளது. அதாவது உலக மக்கள் தொகை தரவுகளின் அடிப்படையில், நாட்டில் உள்ள மக்கள்தொகையை விட அமீரகத்தில் பதிவுசெய்யப்பட்ட ஃபேஸ்புக் பயனர்கள் அதிகம் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. எனவே, 10க்கு 9.55 மதிப்பெண்களுடன், அமீரகம் உலகின் சமூக ஊடக தலைநகராக முதலிடத்தைப் பிடித்துள்ளது.

இது குறித்து சமூக ஊடக பயனாளிகள் கூறுகையில், அமீரகம் குறிப்பாக துபாய் எப்போதும் நாகரீகமான இடம் என்றும், பெரும்பாலானவர்கள் சொந்தமாக ஸ்மார்ட்போன்கள் வைத்திருப்பதாகவும், இணைய அணுகலைக் கொண்டிருப்பதாகவும், எனவே அவர்கள் புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவேற்றி பகிர்ந்து கொள்வார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளனர். அதேவேளை, பல தொழில்முனைவோர் மற்றும் டிஜிட்டல் பிரபலங்கள் சமூக ஊடகங்களை பிராண்டிங் செய்வதற்கும், மினி மீடியாவாகவும் பயன்படுத்துகின்றனர் என்றும் கூறியுள்ளனர்.

இதற்கிடையில், நாட்டில் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றப்படும் அனைத்து புகைப்படம், வீடியோ மற்றும் செய்திகள் போன்றவற்றை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர், எனவே மக்கள் தவறான வழியில் பாதிக்கப்பட மாட்டார்கள் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Proxyrack அறிக்கையின்படி, அமீரகத்திற்கு அடுத்தபடியாக மலேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் 8.75, சவூதி அரேபியா (8.41), சிங்கப்பூர் (7.96), வியட்நாம் (7.62), பிரேசில் (7.62), தாய்லாந்து (7.61), இந்தோனேசியா (7.5) மதிப்பெண்களைப் பெற்றுள்ளன. இருப்பினும், சிறந்த இணைய அணுகலைப் பொறுத்தவரை, தென் கொரியா, ஹாங்காங் மற்றும் டென்மார்க்கிற்கு அடுத்தபடியாக ஐக்கிய அரபு அமீரகம் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!