அமீரகத்தின் சில பகுதிகளில் மழைக்கான வாய்ப்பு..! தூசி மற்றும் மணல் காற்று வீசக்கூடும் என வானிலை மையம் தகவல்…!!

ஐக்கிய அரபு அமீரகத்தின் குடியிருப்பாளர்கள் இன்று (மே.18) ஓரளவு மேகமூட்டமான வானிலை அனுபவிப்பார்கள் என்று தேசிய வானிலை ஆய்வு மையத்தின் (NCM) அறிவித்துள்ளது. அதேசமயம், நாட்டின் மேற்குத் திசைகளில் லேசான மழை பெய்யும் மற்றும் சில நேரங்களில் தூசி நிறைந்த சூழல் உருவாகும் என்று கூறியுள்ளது.
மேலும், பகல் நேரங்களில் புத்துணர்ச்சியான காற்று தூசி மற்றும் மணலை வீசும் என்றும் அரேபிய வளைகுடாவில் பகல்நேரத்தில் கடல் சீற்றமாகவும், ஓமன் கடல் சற்று கொந்தளிப்பாகவும் காணப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
அமீரக வானிலை குறித்து தேசிய வானிலை ஆய்வு மையத்திலிருந்து (NCM) டாக்டர் அகமது ஹபீப் என்பவர் செய்தி ஊடகங்களிடம் கூறுகையில், இந்த வார இறுதியில் நாட்டின் சில பகுதிகளில் லேசான மழை எதிர்பார்க்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், அபுதாபி மற்றும் துபாயில் அதிகபட்ச வெப்பநிலையாக 45ºC வரை பதிவாகும், அதே நேரத்தில் ஈரப்பதம் 10% முதல் 75% வரை இருக்கும் என்று கூறியுள்ளார்.
இதற்கிடையில், நேற்று (மே.17) ஐக்கிய அரபு அமீரகத்தின் உள்ளூர் நேரப்படி 14:00 மணிக்கு அல் அய்னில் உள்ள உம் அசிமுல் நாட்டிலேயே அதிகபட்ச வெப்பநிலையாக 44.7 டிகிரி செல்சியஸை பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.