அமீரக செய்திகள்

UAE: பிரம்மிக்க வைக்கும் ஸ்னோ அபுதாபி திறப்பு !! சாகச ரைடுகள், பல வித உணவுகள் என காத்திருக்கும் ஆச்சரிய அனுபவங்கள்..!! டிக்கெட் எவ்வளவு தெரியுமா..??

உலகின் மிகப்பெரிய உட்புற பனி பூங்காவான ஸ்னோ அபுதாபி (snow abu dhabi) கடந்த ஜூன் 8 முதல் பார்வையாளர்களுக்காக அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டுள்ளது. அபுதாபியில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் தற்பொழுது நிலவி வரும் கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து விலகி குளிர்ந்த சூழலை அனுபவிக்க அபுதாபி ரீம் மாலில் திறக்கப்பட்டுள்ள ஸ்னோ அபுதாபிக்குச் செல்லலாம்.

சுமார் 100,000 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த பனி பூங்கா Majid Al Futtaim என்டர்டெயின்மென்ட் மூலம் இயக்கப்படுகிறது. அத்துடன் 2ºC வெப்பநிலையில் பராமரிக்கப்படும் ஸ்னோ அபுதாபியில், 20 க்கும் மேற்பட்ட சவாரிகள் மற்றும் ஈர்ப்புகளை பார்வையாளர்கள் அனுபவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

இதன் பிரம்மாண்ட திறப்பு விழாவில் பங்கேற்ற மஜீத் அல் ஃபுத்தைம் என்டர்டெயின்மென்ட்டின் CEO இக்னேஸ் லாஹவுட் அவர்கள், எதிர்காலத்தில் பெங்குயின்களை பூங்காவிற்கு கொண்டு வரும் திட்டங்கள் இருப்பதாகவும், அபுதாபி ஒரு உலகளாவிய குடும்ப பொழுதுபோக்கு மற்றும் ஓய்வு இடமாக வேகமாக மாறி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். அவருடன் அபுதாபியின் கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத் துறையின் சுற்றுலா இயக்குநர் ஜெனரல் சலே முகமது அல் கெசிரி மற்றும் மஜீத் அல் ஃபுத்தைமின் துணைத்தலைவர் எல் எட்ரி ஆகியோரும் விழாவில் கலந்து கொண்டனர்.

மேலும், பனிக்கு ஏற்றவாறு கனமான ஆடைகள் மற்றும் ஜாக்கெட்டுகளை பார்வையாளர்கள் வீட்டில் இருந்து கொண்டுவர வேண்டிய அவசியமில்லை என்றும் அங்குள்ள பணியாளர்களிடம் இருந்து ஜாக்கெட், பூட்ஸ், கையுறைகள், தொப்பி மற்றும் சாக்ஸ் போன்றவற்றை அனைத்து வயதினருக்கும் ஏற்றவாறு அனைத்து அளவுகளிலும் பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து குளோபல் ஸ்னோ மற்றும் மஜீத் அல் ஃபுத்தைம் என்டர்டெயின்மென்ட்டின் துணைத் தலைவரான முகமது எல் எட்ரி என்பவர் கூறுகையில், இது குடும்பங்களுக்கான சிறந்த அனுபவங்களை வழங்கும் இடமாகும் என்றும், இங்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினருக்கும் ஏற்ற அனுபவங்களை வழங்கும் இடங்கள் உள்ளன என்றும் தெரிவித்துள்ளார். மேலும், பூங்காவில் குளிரை அனுபவிக்கும் அதேவேளையில், சுவையான மற்றும் சூடான உணவுகளையும் இங்கே ருசிக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

புதுமையான ரைடுகள்:

பனி பூங்காவில் பார்வையாளர்களுக்கு  கிரிஸ்டல் காரோசெல் (Crystal Carousel), போலார் எக்ஸ்பிரஸ் ரயில் (Polar Express Train), Flight of the Snowy Owl ஸ்னோஃப்ளேக் கார்டன் (Snowflake Garden) மற்றும் என்சாண்டட் ட்ரீ (Enchanted Tree) போன்ற 20க்கும் மேற்பட்ட ரைடுகள் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்வுகள் உள்ளன.

அதுமட்டுமின்றி, ஸ்லெட்ஜிங் (sledging), காரோசெல் (carousels), சார்பிங் (zorbing) மற்றும் ஜிப் லைன் (zip line) போன்ற பனி சாகச அனுபவங்களை ஆண்டுமுழுவதும் பார்வையாளர்கள் அனுபவித்து மகிழலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

டிக்கெட் விலை:

ஸ்னோ அபுதாபியானது அபுதாபி ரீம் ஐலேண்டில் உள்ள ரீம் மாலின் லெவல் 2 இல் அமைந்துள்ளது. மேலும், ஞாயிறு முதல் வியாழன் வரை காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரையிலும், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் காலை 10 மணி முதல் நள்ளிரவு வரையிலும் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அனைத்து சவாரிகளுக்கான வரம்பற்ற அணுகலை பெறுவதற்கான ஸ்னோ பார்க் பாஸிற்கான விலைகள் 215 திர்ஹம்ஸ் முதல் ஆரம்பிப்பதாக கூறப்பட்டுள்ளது. அத்துடன் குடும்பங்கள் 860 திர்ஹம் என்ற சிறப்பு விலையில் குடும்ப பாஸைப் பெறலாம், இதில் நான்கு டிக்கெட் கட்டணத்திற்கான விலையில் ஐந்து நபர்களுக்கான பாஸ்களைப் பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!