அமீரகத்தில் உள்ள முஸ்லிம் அல்லாத வழிபாட்டுத் தலங்களை ஒழுங்குபடுத்த புதிய சட்டம்!! – விதிகளை மீறினால் 3 மில்லியன் திர்ஹம்கள் அபராதம்…

ஐக்கிய அரபு அமீரகத்தின் பாராளுமன்ற அமைப்பான ஃபெடரல் நேஷனல் கவுன்சில் (FNC) நாட்டில் உள்ள முஸ்லிம் அல்லாதவர்களுக்கான வழிபாட்டுத் தலங்களை ஒழுங்குபடுத்துவதற்கான புதிய வரைவு கூட்டாட்சி சட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. சகிப்புத்தன்மை மற்றும் சகவாழ்வின் மதிப்புகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட இந்த சட்டம், ஃபிரீஸோன்ஸ் பகுதிகளில் இருக்கும் வழிபாட்டு தலங்கள் உட்பட, நாடு முழுவதும் உள்ள அனைத்து இடங்களுக்கும் இது பொருந்தும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அபுதாபியில் உள்ள நாடாளுமன்ற தலைமையகத்தில் FNC சபாநாயகர் தலைமையில் நடைபெற்ற அமர்வின் போது, நாட்டில் உள்ள முஸ்லீம் அல்லாத மத நடவடிக்கைகள், சடங்குகள் மற்றும் பழக்கவழக்கங்களை ஆராயவும், வகைப்படுத்தவும் ஒரு குழுவை உருவாக்க முன்மொழியப்பட்டுள்ளது. மேலும், அமைச்சகங்களின் பரிந்துரைகளின் அடிப்படையில், இக்குழுவின் அமைப்பு, பணி அமைப்பு மற்றும் பிற பொறுப்புகள் அமீரக அமைச்சரவை முடிவு செய்யும் எனவும் தெரிகிறது.
அதுமட்டுமின்றி, ஒரு தகுதிவாய்ந்த நிறுவனம் உரிமம் பெற்ற அல்லது நியமிக்கப்பட்ட பாத்திரங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களின் பதிவை கொண்டிருக்க வேண்டும் என்றும், மேலும் இந்தப் பதிவேட்டில் உள்ள தரவு, வரைவுச் சட்டத்தின் நிர்வாக விதிமுறைகளில் வழங்கப்பட்ட தகவல்களைக் கொண்டிருக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் சில குறிப்பிட்ட நிபந்தனைகளையும் ஃபெடரல் நேஷனல் கவுன்சில் அறிவித்துள்ளது. அவை,
1. புதிய வரைவுச் சட்டத்தின் நிர்வாக விதிமுறைகள், தகுதிவாய்ந்த அதிகாரத்தால் வழிபாட்டிற்காக அறைகளை ஒதுக்குவதற்கான நிபந்தனைகள், தேவைகள் மற்றும் நடைமுறைகளை தீர்மானிக்கிறது.
2. முன்மொழியப்பட்ட சட்டத்தின்படி, ஒவ்வொரு வழிபாட்டுத் தலமும் சட்டத்தின் நிறைவேற்று விதிமுறைகளால் நிர்ணயிக்கப்பட்ட விதிகள் மற்றும் அளவுகோல்களுக்கு இணங்க உள்ளூர் வங்கியில் வங்கிக் கணக்கைத் திறக்க வேண்டும்.
3. வரைவுச் சட்டத்தின்படி, சட்டத்தின் எந்தவொரு விதியையும் மீறும் நபர் 100,000 திர்ஹம் முதல் 3 மில்லியன் திர்ஹம் வரை அபராதம் விதிக்கப்படுவார்.
மேலும் இந்த சட்டத்தில் பரிந்துரைக்கப்பட்ட தண்டனைகள், வேறு சட்டத்தால் நிர்ணயிக்கப்பட்ட கடுமையான தண்டனைக்கும் பாரபட்சமின்றி பயன்படுத்தப்படும். குறிப்பாக, நாட்டிற்குள் தற்போதுள்ள வழிபாட்டுத் தலங்கள், விதிமுறைகள் அமல்படுத்தப்பட்ட ஆறு மாதங்களுக்குள் முன்மொழியப்பட்ட சட்ட விதிகளுக்கு இணங்க வேண்டும். அதேசமயம் இதற்கான காலக்கெடுவை இரண்டு ஆண்டுகள் வரை நீட்டிக்கவும் முடியும். ஒவ்வொரு கால நீட்டிப்பும் ஆறு மாதங்கள் வரை நீடிக்கும் என்பதும் இந்த புதிய சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய அம்சங்களாகும். .