UAE: விரைவில் முடியவுள்ள காலக்கெடு..!! வேலையின்மை காப்பீட்டு திட்டத்தில் சேராதவர்கள் கவனம்.. சில நிமிடங்களிலேயே திட்டத்தில் இணைவது எப்படி..??

ஐக்கிய அரபு அமீரகத்தின் மனிதவள அமைச்சகம் கட்டாய வேலையின்மை காப்பீட்டுத் திட்டத்தில் (Unemployment Insurance Scheme) குழு சேருவதற்காக அறிவித்த ஜூன் 30ஆம் தேதி காலக்கெடு நெருங்கி வருகின்ற நிலையில், சில நிமிடங்களிலேயே ஆன்லைனில் குழு சேரவும், அதே நேரத்தில் ஃபோன் கால் மூலம் பதிவு செய்தல் போன்ற வழிமுறைகளின் மூலம் விரைவாக பணியாளர்கள் காப்பீடுத் திட்டத்தில் குழு சேர முடியும்.
காப்பீட்டு நிறுவனத்தின் கால் சென்டரை அணுகுவதன் மூலம் ஊழியர்கள் தன்னிச்சையான வேலைவாய்ப்பு இழப்பு (ILOE) காப்பீட்டிற்கு பதிவு செய்யலாம். துபாய் இன்சூரன்ஸ் நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும் ILOE இன்சூரன்ஸ் திட்டத்தில் சந்தாதாரர்களுக்காக பிரத்யேக கால் சென்டர்கள் உள்ளன. அவற்றை அணுகி காப்பீடு திட்டத்தில் எளிதாக இணைந்து கொள்ளலாம். அதற்கான வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அவை:
படி 1: ILOE கால் சென்டரைத் தொடர்பு கொள்ளுதல்
முதலில் கால் சென்டரைத் தொடர்பு கொள்வதற்கு முன்னதாக, உங்களின் லேபர் கார்டு எண் மற்றும் எமிரேட்ஸ் ஐடி எண் ஆகியவற்றை எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் ILOE கால் சென்டர் – 600 599 555ஐ அழைத்து, ஏஜெண்டுடன் பேசுவதற்கான விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
படி 2: உங்கள் தொடர்பு விவரங்கள் மற்றும் வேலைவாய்ப்பு தகவலை வழங்குதல்
நீங்கள் அழைப்பில் கால் சென்டர் முகவருடன் இணைக்கப்பட்டதும், பின்வரும் விவரங்களை வழங்குமாறு கேட்கப்படுவீர்கள்:
- உங்கள் மொபைல் நம்பர்.
- மின்னஞ்சல் முகவரி.
- எமிரேட்ஸ் ஐடி எண்.
- முழுப் பெயர், எமிரேட்ஸ் ஐடியில் உள்ளவாறு.
- பிறந்த தேதி.
- தொழிலாளர் அட்டை (வேலை அனுமதி) எண். இந்த எண் மனிதவள அமைச்சகம் (MOHRE) அல்லது நீங்கள் பணிபுரியும் இலவச மண்டலத்தால் வழங்கப்படுகிறது. இந்த எண்ணைக் கண்டறிய, நீங்கள் ஆப்பிள் மற்றும் ஆண்ட்ராய்டு சாதனங்களில் கிடைக்கும் MOHRE மொபைல் பயன்பாட்டைப் பதிவிறக்கி, உங்களின் வேலைவாய்ப்பு விவரங்கள் மற்றும் தொழிலாளர் அட்டையைப் பார்க்கலாம்.
படி 3: உங்கள் பேமெண்ட் கால இடைவெளியை தேர்ந்தெடுத்தல்:
நீங்கள் கால் சென்டர் ஏஜெண்டிடம் தகவல்களை வழங்கியவுடன், நீங்கள் பணிபுரியும் நிறுவனம், சம்பளம் மற்றும் வேலைப் பெயர் போன்ற உங்கள் வேலைத் தகவலை கணினியில் அவர்களால் பார்க்க முடியும். உங்கள் அடிப்படை சம்பளத்தைப் பொறுத்து, A அல்லது B என்ற இரண்டு பிரிவுகளின் கீழ் நீங்கள் வருவீர்கள். திட்டத்தில் சேர்வதற்கான இரண்டு வகைகள் குறித்த விவரம் பின்வருமாறு:
வகை A:
- 16,000 திர்ஹம் அல்லது அதற்கும் குறைவான அடிப்படை சம்பளம் பெறும் ஊழியர்கள்.
- காப்பீட்டு செலவு: மாதம் ஒன்றுக்கு 5 திர்ஹம் அல்லது ஆண்டுக்கு 60 திர்ஹம்
- மாதாந்திர இழப்பீடு: உங்கள் அடிப்படை சம்பளத்தில் 60 சதவீதம், 10,000 திர்ஹம் வரை வழங்கப்படும்.
வகை B:
- 16,000 மற்றும் அதற்கு மேல் சம்பாதிக்கும் ஊழியர்கள்
- காப்பீட்டு செலவு: 10 திர்ஹம் அல்லது ஆண்டுக்கு 120 திர்ஹம்
- மாதாந்திர இழப்பீடு: உங்கள் அடிப்படை சம்பளத்தில் 60 சதவீதம், 20,000 திர்ஹம் வரை வழங்கப்படும்.
இவற்றில் உங்கள் வகையைப் பொறுத்து நீங்கள் செலுத்த வேண்டிய காப்பீட்டு பிரீமியத்தைப் பற்றி முகவர் உங்களுக்குத் தெரிவிப்பார். அதன் பிறகு, உங்கள் கட்டணத்திற்கான பிரிவை தேர்ந்தெடுக்கும்படி கேட்கப்படுவீர்கள்:
- மாதாந்திர கட்டணம்
- காலாண்டு கட்டணம்
- அரையாண்டு கட்டணம் (இருமுறை செலுத்துதல்)
- முழுஆண்டிற்கான கட்டணம் (ஒருமுறை செலுத்துதல்)
பின்னர், உங்கள் கட்டண விருப்பத்தைத் தேர்ந்தெடுத்ததும் உங்கள் காப்பீட்டு விவரங்கள் மற்றும் கட்டண விவரங்களுடன் ILOE முகவர் உங்களுக்கு மின்னஞ்சலை அனுப்புவார். மின்னஞ்சலில், கீழே ஸ்க்ரோல் செய்து பச்சை நிறத்தில் உள்ள ‘Pay Now’ பட்டனைக் கிளிக் செய்யவும்.
படி 4: ILOE திட்டத்திற்கு பணம் செலுத்துதல்
இறுதியாக, இந்த லிங்க் உங்களை ILOE பேமெண்ட் போர்ட்டலுக்கு மாற்றும், அங்கு உங்கள் கிரெடிட் அல்லது டெபிட் கார்டு விவரங்களை உள்ளிட்டதும், ILOE காப்பீட்டிலிருந்து உறுதிப்படுத்தல் மின்னஞ்சலைப் பெறுவீர்கள், மேலும் உங்கள் காப்பீட்டுச் சான்றிதழ் இணைக்கப்படும்.
குறிப்பாக, சான்றிதழைப் பதிவிறக்கம் செய்து உங்களுடன் வைத்திருப்பது முக்கியம், ஏனெனில் இந்தத் திட்டத்தில் நீங்கள் குழுசேர்ந்துள்ளீர்கள் என்பதற்கான சான்றே அந்த சான்றிதழாகும். காப்பீட்டு தவணைகள் சரியான நேரத்தில் செலுத்தப்படுவதை உறுதி செய்வது பணியாளரின் பொறுப்பு என்றும் சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆகவே, தேவையான அனைத்து விவரங்களும் வைத்திருக்கும் பட்சத்தில், வேலையின்மை காப்பீட்டில் இணைந்து பணம் செலுத்துவதற்கு 10 முதல் 15 நிமிடங்கள் வரை மட்டுமே ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.