அமீரக செய்திகள்

துபாய்: குடும்பத்துடன் குதூகலிக்க நான்கு சிறந்த பொழுதுபோக்கு இடங்கள்..!! விரைவில் மீண்டும் திறக்கப்படவுள்ளதாக தகவல்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் கோடைகாலம் முடிவுக்கு வருவதால், துபாயின் மிகவும் பிரபலமான வெளிப்புற இடங்கள், வரவிருக்கும் புதிய குளிர்கால சீசனில் பார்வையாளர்களை வரவேற்பதற்காக மீண்டும் திறக்கப்பட உள்ளன. அந்த வகையில், இன்னும் சில வெளிப்புற இடங்கள் சரியான தேதிகளை அறிவிக்கவில்லை என்றாலும், அவை செப்டம்பர் அல்லது அக்டோபர் தொடக்கத்தில் மீண்டும் திறக்க திட்டமிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

1. குளோபல் வில்லேஜ்

துபாயின் மிகவும் பிரபலமான இடங்களில் ஒன்றான குளோபல் வில்லேஜ், இந்தாண்டு வழக்கத்தை விட ஒரு வாரத்திற்கு முன்னதாக அதன் 28வது சீசனில் அடியெடுத்து வைக்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், இந்த பிரபலமான பொழுதுபோக்கு தலமானது வரும் அக்டோபர் 18 அன்று மீண்டும் திறக்கப்படும் என்று அதிகாரப்பூர்வ தேதி வெளியிடப்பட்டுள்ளது மற்றும் இது ஏப்ரல் 28, 2024 வரை திறந்திருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தற்பொழுது, புதிய சீசனுக்கான டிக்கெட் சலுகைகள் பற்றிய விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை என்றாலும், கியோஸ்க் மற்றும் உணவு வண்டிகளுக்கான (food trucks) பதிவுகளை குளோபல் வில்லேஜ் திறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இடம்: முகம்மது பின் சையத் சாலையில் (E311) அரேபியன் ரேஞ்சஸ் ரெசிடென்ஷியல் டெவலெப்மென்ட்டிற்கும் (Arabian Ranches residential development) IMG வேர்ல்ட் ஆப் அட்வென்ச்சர்ஸ் (IMG Worlds of Adventure) தீம் பார்க்கிற்கும் இடையே அமைந்துள்ளது.

நேரங்கள்:

  • திங்கள் முதல் வியாழன் வரை – மாலை 4 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை.
  • வெள்ளி முதல் ஞாயிறு வரை – மாலை 4 மணி முதல் அதிகாலை 1 மணி வரை.

2. துபாய் மிராக்கிள் கார்டன்:

துபாய் மிராக்கிள் கார்டனின் கடந்த 11வது சீசன் ஜூன் மாதம் முடிவடைந்த நிலையில், மீண்டும் அடுத்த மாதமான அக்டோபரில் மீண்டும் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இலட்சக்கணக்கான பூக்கள் பூத்துக் குலுங்கும் 72,000 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட அந்த கார்டனில் ஏறத்தாழ 150 மில்லியனுக்கும் அதிகமான பூக்கள் மற்றும் குறைந்தது 120 வகையான தாவரங்கள் உள்ளன.

அத்துடன் அங்கு எமிரேட்ஸ் ஏர்பஸ் A380 வடிவில் உள்ள மிகப்பெரிய மலர் சிற்பம் மற்றும் 100,000 செடிகள் மற்றும் பூக்களால் செய்யப்பட்ட மிக்கி மவுஸின் 18 மீட்டர் சிற்பம் ஆகிய இரண்டும் இங்கு பிரபலமானதாகும். அவை கின்னஸ் உலக சாதனை படைத்த மலர் சிற்பம் ஆகும்.

இடம்: துபாய் மிராக்கிள் கார்டன் துபாய்லேண்டில் உள்ள அல் பர்ஷா சவுத் ஸ்ட்ரீட் 3 இல் அமைந்துள்ளது.

நேரங்கள்:

  • வார நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை): காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை
  • வார இறுதி நாட்கள் (சனி மற்றும் ஞாயிறு): காலை 9 மணி முதல் இரவு 11 மணி வரை

3. துபாய் கார்டன் க்ளோ (Dubai Garden Glow):

துபாய் கார்டன் க்ளோ, கண்களைக் கவரும் ஏராளமான விளக்குகள் மற்றும் அவற்றின் பிராகச ஒளிகளுடன் அசர வைக்கும் காட்சி மாயைகளின் (visual illusions) வழியாக நடந்து செல்லும் அனுபவத்தை உங்களுக்கு தரும். இந்த செப்டம்பர் மாதம் அதன் ஒன்பதாவது சீசனில் மீண்டும் கார்டன் க்ளோ திறக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து கிடக்கும் இந்த ஒளிரும் பூங்காவில் மில்லியன் கணக்கான விளக்குகள் ஜொலித்துக் கொண்டிருக்கும். சூரியன் மறைந்து வானில் இருள் சூழ்ந்ததும், துபாய் கார்டன் க்ளோவில் உள்ள 10 மில்லியன் LED விளக்குகள், 500 ஒளிரும் வடிவமைப்புகள் மற்றும் 120 அனிமேட்ரானிக் டைனோசர்கள் வந்து உங்களை வரவேற்கின்றன.

இடம்: இது ஜபீல் பூங்காவில் அமைந்துள்ளது மற்றும் நீங்கள் கேட் எண்.6 வழியாக நுழைய வேண்டும்.

நேரங்கள்:

  • ஞாயிறு முதல் வெள்ளி வரை: மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை
  • சனிக்கிழமை மற்றும் பொது விடுமுறை நாட்கள்: மாலை 5 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை

துபாய் சஃபாரி பார்க்:

கடைசியாக, மே 31, 2023 அன்று மூடப்பட்ட திறந்தவெளி உயிரியல் பூங்கா தற்போது, இந்த மாத இறுதியில் அல்லது அடுத்த மாதத் தொடக்கத்தில் மீண்டும் திறக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது 3,000 விலங்குகளுக்கு தாயகமாக உள்ளது. சுமார் 119 ஹெக்டேர் அதாவது 166 கால்பந்து மைதானங்களுக்குச் சமமான பரப்பளவைக் கொண்டுள்ள இந்த பூங்காவில் 10 வெவ்வேறு மாமிச உண்ணிகள், 50 வகையான ஊர்வன, 111 வகையான பறவைகள் மற்றும் 78 வகையான பாலூட்டிகள் உள்ளன.

ஆனால் இப்போதைக்கு, பார்வையாளர்கள் பிரத்யேக கோடைகால பேக்கேஜுக்கு தனிப்பட்ட முன்பதிவு செய்யலாம், இது பூங்காவிற்கு இரண்டு மணிநேர தனிப்பட்ட சுற்றுப்பயணத்தை வழங்குகிறது.

துபாய் சஃபாரி பூங்காவிற்கான வழக்கமான டிக்கெட்டுகள் இன்னும் விற்பனைக்கு வரவில்லை, இருப்பினும் அது செப்டம்பர் இறுதியில் அல்லது அக்டோபர் தொடக்கத்தில் மீண்டும் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சம்மர் பேக்கேஜ்களின் விலை:

முழு தனிப்பட்ட சுற்றுப்பயணத்திற்கும் 1,000 திர்ஹம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஒரு பேக்கேஜில் ஆறு பேர் வரை அனுமதிக்கப்படுகிறார்கள். எனவே,  https://ticketingsales.dubaisafari.ae/ என்ற அதிகாரப்பூர்வ வலைதளத்தின் மூலம் உங்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்.

சம்மர் பேக்கேஜ் நேரம்:

  • காலை 8 மணி முதல் 10 மணி வரை.
  • மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை.

இடம்: அல் வர்கா 4 டிஸ்ட்ரிக்ட், E44,

Related Articles

Back to top button
error: Content is protected !!