அமீரக செய்திகள்

எமிரேட்ஸ் ஏர்லைன் நிறுவனத்தில் வேலை!! நெட்வொர்க்கை விரிவுபடுத்தியதால் அதிக ஊழியர்கள் தேவைப்படுவதாக குழுமம் அறிவிப்பு…

துபாயை தலைமையிடமாக கொண்டு இயங்கும் எமிரேட்ஸ் குழுமம் அதன் முக்கிய துணை நிறுவனங்களான எமிரேட்ஸ் ஏர்லைன் மற்றும் விமான நிலைய சேவைகள் வழங்குநரான dnata ஆகியவற்றில் உள்ள நூற்றுக்கணக்கான காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக நேற்று செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.

எமிரேட்ஸ் குழுமம் வெளியிட்டுள்ள தகவல்களின் படி, அதன் விமான நிறுவனத்திற்கு விமானிகள், பொறியாளர்கள், தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் வாடிக்கையாளர் சேவை முகவர்கள் போன்ற துறைகளுக்கு ஆட்சேர்ப்பு நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து எமிரேட்ஸ் குழுமத்தின் மனித வளங்களுக்கான மூத்த துணைத் தலைவர் ஆலிவர் க்ரோஹ்மான் என்பவர் கூறுகையில், தற்போது காலிப்பணியிடங்களுக்கு மிகவும் பொருத்தமானவர்களைத் தேர்ந்தெடுப்பதில் கவனம் செலுத்தி வருவதாகவும், டிஜிட்டல் மதிப்பீடுகள், AI போன்ற புதிய தொழில்நுட்பங்கள் மூலம் மிகவும் திறமையான விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

கடந்த நிதியாண்டில் மட்டும் நிறுவனத்தில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு சுமார் 2.7 மில்லியன் விண்ணப்பங்களைப் பெற்றதாக எமிரேட்ஸ் குழுமம் தெரிவித்துள்ளது. மேலும், 2022-23 நிதியாண்டின் இறுதியில் எமிரேட்ஸ் குழுமத்தில் பணிபுரிந்த பணியாளர்களின் எண்ணிக்கை 102,379 ஆக இருந்ததாகவும் புள்ளி விபரங்கள் கூறுகின்றன.

மேலும், இந்த எண்ணிக்கையானது முந்தைய ஆண்டை விட 20 சதவீதம் அதிகம் என்றும் கூறப்படுகிறது. இது தவிர, கடந்த நிதியாண்டில் எமிரேட்ஸ் குழுமம் இதுவரையிலும் இல்லாத அளவிற்கு 10.9 பில்லியன் திர்ஹம் நிகர லாபத்தை அடைந்ததாகவும் அறிவித்தது. அதனை தொடர்ந்து தனது நெட்வொர்க்கை மேலும் விரிவுபடுத்தும் பணிகளில் எமிரேட்ஸ் குழுமம் ஈடுபட்டுள்ளது.

எனவே, தற்போது அதன் தேவைகளைப் பூர்த்தி செய்ய அதிக ஊழியர்கள் தேவைப்படுவதால் எமிரேட்ஸ் ஆண்டு முழுவதும் நூற்றுக்கணக்கான நகரங்களில் ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிவு செய்துள்ளது. மேலும், இந்த ஆட்சேர்ப்பு செயல்முறையானது ஒரு நாளுக்குள் முடிக்கப்பட்டு, மதிப்பீட்டின் அடிப்படையில் 48 மணி நேரத்திற்குள் விண்ணப்பதாரர்கள் தொடர்பு கொள்ளப்படுவர்கள் என்றும் எமிரேட்ஸ் குழும அதிகாரிகள் கூறியுள்ளனர்.

எமிரேட்ஸ் குழுமமானது விமானிகள் தவிர்த்து எமிரேட்ஸ் இன்ஜினியரிங் துறையில் ஆஸ்திரேலியா, கனடா, பிரேசில், தென்னாப்பிரிக்கா மற்றும் UK ஆகிய நாடுகளில் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் ஏர்கிராப்ட் மெயிண்டனன்ஸ் இன்ஜினியரிங் மற்றும் இன்ஜினியரிங் சப்போர்ட் பணிகளில் 400 க்கும் மேற்பட்ட பதவிகளில் பணியாளர்களை நியமிக்க உள்ளது.

அத்துடன், DevOps, ஹைப்ரிட் கிளவுட், சைபர் செக்யூரிட்டி போன்ற பலவிதமான வேலைகளுக்கும் சரியான திறன்களைக் கொண்ட 400 க்கும் மேற்பட்ட IT நிபுணர்களையும் எமிரேட்ஸ் குழுமம் பணியமர்த்த உள்ளது.

அதுபோல, வாடிக்கையாளர் சேவைப் பணிகளுக்காக Emirates Airport Services, dnata, marhaba அல்லது தொடர்பு மையங்களில் பயிற்சி பெற்ற நபர்களை பணியமர்த்த இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், இந்த வாடிக்கையாளர் சேவையில் இருக்கும் ஊழியர்கள் முழுநேர அல்லது பகுதி நேர பதவிகளில் வேலை செய்யலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!