அமீரக செய்திகள்

துபாய்: இந்த பார்க்கிங் விதிகளை மீறினால் 1,000 திர்ஹம் அபராதம்..!! எச்சரித்த RTA..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆங்காங்கே பொறுப்பற்ற முறையில் வாகனங்களை பார்க்கிங் செய்வது ஆபத்தான விதிமீறல்களாகும். குறிப்பாக, நடைபாதையில் அல்லது குடியிருப்புப் பகுதிகளின் நுழைவாயில் போன்ற பார்க்கிங்கிற்கான இடமல்லாமல் மற்ற இடத்தில் வாகனத்தை நிறுத்துவது போன்ற நடைமுறைகள் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்துகின்றன.

மேலும், அமீரகத்தில் இதுபோன்ற பார்க்கிங் விதிமீறல்களுக்கு 1,000 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும். ஆகவே, துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) சமீபத்தில் வீடியோ ஒன்றினை ஆன்லைனில் வெளியிட்டு, சீரற்ற இடங்களில் வாகனங்களை நிறுத்த வேண்டாம் என்றும், வாகனம் நிறுத்தும் போது மூன்று விதிகளை மனதில் கொள்ளுமாறும் வாகன ஓட்டிகளை அறிவுறுத்தியுள்ளது.

RTA குறிப்பிட்டுள்ள மூன்று பார்க்கிங் விதிகள்:

  • வில்லாக்கள் முன் வாகனத்தை நிறுத்த வேண்டாம்.
  • நடைபாதையில் நிறுத்த வேண்டாம்.
  • பப்ளிக் பார்க்கிங்கில் வாகனத்தை நிறுத்துங்கள் – துபாயில் இந்த பப்ளிக் பார்க்கிங் நுழைவாயிலில் ஒரு பெரிய பலகை மூலம் பார்க்கிங் இடங்கள் தெளிவாக அடையாளம் காணப்படுகின்றன. இது அந்த பகுதி கட்டணம் செலுத்தும் பார்க்கிங் மண்டலம் என்பதைக் குறிக்கிறது.

அதன்படி, நீலம் மற்றும் ஆரஞ்சு நிறத்தில் உள்ள சைன்போர்டுகள் கட்டணம் செலுத்தும் பப்ளிக் பார்க்கிங் மண்டலம் என்பதை அடையாளப்படுத்துகின்றன. இதில் மண்டல எண் மற்றும் எழுத்துக்கள் குறியீடு மற்றும் சில சமயங்களில் கட்டணம் செலுத்திய பார்க்கிங் நேரம் ஆகிய விபரங்கள் இடம்பெற்றிருக்கும்.

அத்துடன் 1,000 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும் பார்க்கிங் மீறல்களை துபாய் RTA பட்டியலிட்டுள்ளது. அவை

  1. நம்பர் பிளேட் இல்லாத காரை பார்க்கிங் செய்தல்.
  2. மாற்றுத் திறனாளிகளுக்காக ஒதுக்கப்பட்ட பார்க்கிங் பகுதியில் அங்கீகரிக்கப்படாத பயன்பாடு, அல்லது காலாவதியான அனுமதியைப் பயன்படுத்துதல் அல்லது அனுமதி தெளிவாக தெரியாத இடத்தில் பார்க்கிங் செய்தல். ஐக்கிய அரபு அமீரகத்தின் ஃபெடரல் ட்ராஃபிக் சட்டத்தின்படி, இந்த மீறலுக்காக ஆறு பிளாக் பாயிண்டுகளுடன் அபராதமும் விதிக்கப்படும்.
  3. உங்கள் காரை மற்றொருவர் முன்பதிவு செய்யப்பட்ட பார்க்கிங் இடத்தில் நிறுத்துவது.
  4. தடைசெய்யப்பட்ட பகுதியில் விற்பனைக்கு அல்லது வாடகைக்கு என்று உங்கள் காரில் ஒரு பலகை வைத்திருப்பது.
  5. கூடுதலாக, ஃபெடரல் ட்ராஃபிக் சட்டத்தின்படி, நீங்கள் உங்கள் காரை ஃபயர் ஹைட்ரண்ட் (fire hydrant) முன் நிறுத்தினால், உங்களுக்கு 1,000 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும்.

Related Articles

Back to top button
error: Content is protected !!