அமீரக செய்திகள்

அமீரகத்தில் அதிகரிக்கும் 90 நாள் விசாவிற்கான விண்ணப்பங்கள்: விசாவுக்கான தகுதி மற்றும் செலவு எவ்வளவு…??

கொரோனா தொற்றுநோய் பரவலின் போது, அமீரகம் சுற்றுலாவாசிகளுக்கு வழங்கி வந்த 90 நாள் விசா சேவையை நிறுத்தி விட்டு, அதற்குப் பதிலாக 60 நாள் விசாவை அறிமுகப்படுத்தியது. தொற்றுநோய் முடிவுக்கு வந்ததையடுத்து, கடந்த மே 2023இல் மீண்டும் மூன்று மாத விசாவை அமீரகம் அறிமுகம் செய்தது. இதனைத் தொடர்ந்து, நாட்டில் தற்போது, 30, 60 மற்றும் 90 நாட்கள் விசா என மூன்று வகையான ஒற்றை நுழைவு விசாக்கள் உள்ளன.

சுற்றுலாவாசிகளைப் பொறுத்தவரை அமீரகத்தில் 30 நாள் அல்லது 60 நாள் தங்கியிருந்து சுற்றிப்பார்ப்பது என்பது பல குடும்பங்கள் மற்றும் சுற்றுலாவாசிகளுக்கு மிகவும் குறுகிய காலமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில், 90 நாள் விசா, நாட்டில் நீண்ட காலம் தங்கி நிதானமாக நாட்களை கழிக்க உதவுவதாகத் தெரிவித்துள்ளனர்.

இதனால் இந்த 90 நாட்கள் விசிட் விசாவிற்கான தேவை அமீரகத்திற்கு வரும் சுற்றுலாவாசிகளிடையே அதிகரித்துக் காணப்படுகிறது. அமீரகத்தில் உள்ள டிராவல் ஏஜென்டுகளும் ஒரு நாளைக்கு 20 வரை இந்த 3 மாத விசாவை விண்ணப்பிப்பதாகக் கூறுகின்றனர்.

இருப்பினும், பெரும்பாலான பயணிகள் இன்னும் 30 அல்லது 60 நாள் விசாவை விரும்புகிறார்கள் எனவும் கூறப்படுகின்றது. ஏனெனில், 60 நாள்  விசிட் விசா 650 திர்ஹம்களுக்கு கிடைக்கும் என்று தொழில் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். எனவே குறைந்தளவு அல்லது தங்களின் பட்ஜெட்டிற்கு ஏற்றாற் போன்று விசா விண்ணப்பிக்க நினைப்பவர்கள் இந்த 60 நாட்கள் விசிட் விசாக்களை தேர்ந்தெடுப்பதாக கூறப்படுகின்றது.

அந்த வகையில், நீண்ட கால விசாவிற்கு பின்வரும் சுற்றுலாவாசிகளே அதிகம் விண்ணப்பிப்பதாகக் கூறப்படுகிறது:

  • அமீரகத்தில் நீண்ட விடுமுறையைக் கழிக்க விரும்பும் சுற்றுலாப்பயணிகள்
  • அமீரக குடியிருப்பாளர்களின் பெற்றோர் மற்றும் குழந்தைகள்
  • அவர்களின் குடும்ப உறுப்பினர்கள்
  • நாட்டை ஆராய்ந்து பின்னர் அமீரகத்தில் குடியேற விரும்பும் சுற்றுலாவாசிகள்

தகுதி மற்றும் விசா செலவு:

நிபுணர்களின் கூற்றுப்படி, மூன்று மாத விசாக்கள் இரண்டு வகைகளாக உள்ளன. முதல் வகைக்கு, ஒரு குடியிருப்பாளர் 1,000 திர்ஹம்கள் வைப்புத் தொகையை (deposit) வைத்து குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுக்கு ஸ்பான்சர் செய்வார். மேலும், அவரின் குறைந்தபட்ச சம்பளம் 6,000 முதல் 8,000 வரை இருக்க வேண்டும். விசாவின் விலை 1,000 திர்ஹம் திரும்பப்பெறக்கூடிய வைப்புத்தொகையுடன் சுமார் 800 திர்ஹம் செலவழித்து அதிகாரப்பூர்வ குடியேற்ற இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம்.

இரண்டாம் வகை விசாவைப் பொறுத்தவரை, விசா பெற விரும்புபவர்கள் அவர்களின் ஸ்பான்சராக இருக்கும் டிராவல் ஏஜென்ட் மூலம் விண்ணப்பிக்கலாம். அவர்களுக்கு பாஸ்போர்ட் நகல் மற்றும் புகைப்படங்கள் மட்டுமே தேவை. சுற்றுலாவாசிகள் தங்கள் பயண முகவர் மூலம் 1,200 முதல் 1,400 திர்ஹம் வரையிலான கட்டணத்தில் விண்ணப்பிக்கலாம்.

ஆகையால், வெறும் 30 மற்றும் 60 நாட்களுக்கான விசாவை எடுத்து அமீரகம் வந்த பின்னர் தொடர்ந்து தங்க விரும்புபவர்கள் தங்களின் விசா நீட்டிப்புக்காக நாட்டை விட்டு வெளியேறி மீண்டும் உள்நுழைகின்றனர். இது மிகவும் கடினமாக இருக்கும் மக்களுக்கு 90 நாள் விசாக்களை மீண்டும் வழங்கி வருவது ஒரு வரப்பிரசாதமாக வந்துள்ளது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

Related Articles

Back to top button
error: Content is protected !!