அமீரக செய்திகள்

UAE: 67,000 ஆய்வுகளில் 59 நிறுவனங்கள் மட்டுமே மதிய வேலை தடையை மீறியதாக பதிவு!! அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல்….!!

அமீரகத்தின் மனிதவளங்கள் மற்றும் குடியேற்ற அமைச்சகம் (MoHRE) விதித்துள்ள மதிய வேலைத் தடையின் படி, பெரும்பாலான நிறுவனங்கள் மதியம் 12.30 மணி முதல் 3 மணி வரை நேரடி சூரிய ஒளியில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மதிய வேலைத் தடையை நடைமுறைப்படுத்துவதாக உறுதியளித்து செயல்படுத்தி வருகின்றன.

கோடைகாலங்களில் வெளிப்புறங்களில் வேலை செய்யும் ஊழியர்களின் உடல் நலன் மற்றும் ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டு, கடந்த ஜூன் 15ஆம் தேதி அமைச்சகத்தின் மதிய நேர இடைவேளை அமலுக்கு வந்தது. மேலும், இது அடுத்த மாதம் செப்டம்பர் 15ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்றும் அமைச்சகம் அறிவித்துள்ளது. வெப்ப நோய்களில் இருந்து தொழிலாளர்களைப் பாதுகாக்கும் பொருட்டு, நாட்டில் தொடர்ந்து 19வது ஆண்டாக இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ஜூன் 15 முதல் ஆகஸ்ட் 17 வரை சுமார் 67,000 க்கும் மேற்பட்ட ஆய்வு வருகைகளை பல்வேறு நிறுவனங்களில் மேற்கொண்ட அமைச்சகம் இதுவரை 59 விதிமீறல்களை மட்டுமே கண்டறிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மொத்தம் 130 தொழிலாளர்கள் அந்தந்த நிறுவனங்களால் மதிய வேலைத் தடையை மீறி வேலை செய்துள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது.

அமைச்சகத்தின் வழிகாட்டுதலின் படி, நிறுவனங்கள் தொழிலாளர்களுக்கு ஓய்வு நேரத்தில் நிழல் தரும் பகுதிகள் மற்றும் மின்விசிறிகள் போன்ற குளிரூட்டும் கருவிகளை வழங்க வேண்டும். இதற்கு இணங்க மறுக்கும் நிறுவனங்கள் மற்றும் முதலாளிகளுக்கு ஒரு தொழிலாளிக்கு 5,000 திர்ஹம்கள் வீதம் அதிகபட்சமாக 50,000 திர்ஹம் வரை அபராதம் விதிக்கப்படும்.

இது குறித்து அமைச்சகத்தின் ஆய்வு விவகாரங்களுக்கான உதவி துணைச் செயலர் மொஹ்சென் அல் நாசி என்பவர் கூறுகையில், தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதுடன் அவர்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகள் மற்றும் கூறுகளை வழங்குவதற்கும் MoHRE எடுத்த தொடர்ச்சியான உறுதியான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக மதிய இடைவேளை இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அமீரகத்தின் தொழிலாளர் சந்தையின் போட்டித்திறன் மற்றும் நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்தக்கூடிய மனிதாபிமான மற்றும் சமூகத் தரங்களை தொழிலாளர்களுக்கு நிறுவனங்கள் வழங்குவதையும், விதிமுறைகளை கடைபிடிப்பதையும் உறுதிசெய்வதற்கான அமைச்சகத்தின் உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாக இந்த ஆய்வுகள் மற்றும் விழிப்புணர்வு சுற்றுகள் மேற்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற மீறல்கள் ஏதேனும் இருந்தால், உடனடியாக 600590000 என்ற எண்ணில் கால் சென்டரை தொடர்பு கொள்வதன் மூலமோ அல்லது அதன் பயன்பாடு மற்றும் இணையதளம் மூலமாகவோ புகாரளிக்குமாறு குடியிருப்பாளர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் MoHRE அழைப்பு விடுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!