அமீரகத்தில் விற்றுத் தீர்ந்த புதிய ஐபோன் 15 மாடல்கள்!! இந்தியாவை விடவும் மலிவான விலையில் விற்பனை..!!

உலகின் பிரபல தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள் அண்மையில் அதன் புதிய ஐபோன் 15 மாடல்களை UAE உட்பட உலகெங்கும் உள்ள பல்வேறு நாடுகளில் அறிமுகப்படுத்தியிருந்தது. அமீரகத்தில் கடந்த செப்டம்பர் 22 அன்று, மால் ஆஃப் தி எமிரேட்ஸ் மற்றும் துபாய் மாலில் உள்ள விற்பனை நிலையங்களில் புதிய மாடல் ஐபோன்கள் விற்பனைக்கு வந்தன.
அப்போது, ஆயிரக்கணக்கான ஐபோன் ஆர்வலர்கள் புதிய சாதனங்களை வாங்குவதற்காக ஒரு நாளுக்கு முன்னதாகவே ஆப்பிள் ஸ்டோர் முன்பு குவிந்தனர். இந்நிலையில், அமீரகத்தில் ஐபோன் 15 அறிமுகப்படுத்தப்பட்ட சில நாட்களிலேயே எதிர்பார்த்ததை விட படுவேகத்தில் விற்றுத் தீர்ந்துவிட்டதாக அமீரகத்தின் முக்கிய எலக்ட்ரானிக்ஸ் சில்லறை விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், ஆப்பிளின் முந்தைய விலையுயர்ந்த சாதனங்களுடன் ஒப்பிடும்போது அமீரகத்தில் ஐபோன் 15க்கான தேவை இரட்டிப்பாகும் என்றும் சில சில்லறை விற்பனையாளர்கள் கூறியுள்ளனர்.
அமோக விற்பனை:
ஐபோன் விற்பனை பற்றி ஜம்போ(Jumbo) குழுமத்தின் CEO கூறுகையில், கடந்த ஆண்டில் ஐபோன்களின் முன்கூட்டிய ஆர்டர் எண்ணிக்கையில் அதிவேக இரட்டை இலக்க மேம்பாட்டைக் கண்டதாகவும், தற்போதைய வெளியீடு இந்த காலாண்டில் விற்பனையை அதிகரிக்கும் என்று கூறியுள்ளார்.
அதேசமயம், ஏரோஸ்பேஸ்-கிரேட் டைட்டானியம் இருப்பதால், iPhone 15 Pro Max க்கு அதிக தேவை இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், ஐபோன் 15 மாடல் சப்ளையின் முதல் பகுதி விற்றுத் தீர்ந்துவிட்டதாகவும், ஆப்பிள் ஸ்மார்ட்போன் அறிமுகங்களின் போது வாடிக்கையாளர்களிடமிருந்து அதிக ஆர்வத்தைக் காண்பதாகவும் கூறியுள்ளார்.
இந்தியாவை விட அமீரகத்தில் ஐபோன்கள் மலிவானவை:
ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கான விலையானது, இந்தியா உட்பட பல சந்தைகளுடன் ஒப்பிடும்போது அமீரகத்தில் மிகக் குறைவு என்பது வலுவான காரணியாகும் என்று சில்லறை விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். அதாவது, இந்தியாவுடன் ஒப்பிடும்போது அமீரகத்தில் ஐபோன் 15 ப்ரோ மொபைலின் விலையில் ரூ.38,000 வித்தியாசம் உள்ளது குறிப்பிடத்தக்கது.