துபாய் மாலில் திறக்கப்பட்டுள்ள சைனாடவுன்: சீனப் பாரம்பரியம், உணவு, கலாச்சாரம் என பார்வையாளர்கள் பல அனுபவஙகளைப் பெறலாம் என தகவல்…

சீன கலாச்சாரம், மரபுகள் மற்றும் சுவையான உணவுகளை துபாயிலேயே அனுபவிக்கும் வகையில் துபாய் மாலில் சைனாடவுன் அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டுள்ளது.
துபாய் மாலுக்குள் பார்வையாளர்கள் நுழையும்போது சீனாவின் மையப்பகுதிக்கு சென்றது போன்ற உணர்வைத் தரக்கூடிய அளவிற்கு, பிரம்மாண்டமான அலங்காரங்கள், சீனக் கலைஞர்கள், பாரம்பரிய நடனம் மற்றும் சீன கைவினைப்பொருட்கள் என துடிப்பான ஏற்பாடுகளால் சைனாடவுன் திறக்கப்பட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமையன்று (செப்டம்பர் 23) அமீரகத்தின் பொருளாதார அமைச்சர் அப்துல்லா பின் டூக் அல் மர்ரி, ஜியாங்சு மாகாணத்தின் துணை ஆளுநர் மா சின், துபாயில் சீனத் தூதரகத் தூதர் லி சுஹாங், எமாரின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் முகமது அலப்பர் மற்றும் ஜமால் பின் தானியா போன்ற உயரதிகாரிகள் இதைத் திறந்து வைத்துள்ளனர்.
அங்கு சீன கைவினைப்பொருட்கள், ஜவுளிகள் மற்றும் கலைப்பொருட்கள் என சீனாவின் பாரம்பரியத்தைக் குறிக்கும் பல்வேறு தேர்வுகள் கிடைக்கும்.
மேலும், சீனாவின் பாரம்பரிய உணவு வகைகளை பயிற்சி பெற்ற சமையல்காரர்களால் தயாரிக்கும் உணவகங்கள் பார்வையாளர்களுக்கு அற்புதமான அனுபவத்தை வழங்குகின்றன.
இந்நிகழ்வு துபாயில் உள்ள சீன மக்கள் குடியரசின் துணைத் தூதரகத்துடன் இணைந்து, கலாச்சார கொண்டாட்டமான சீன வாரத்தின் தொடக்க விழாவையும் குறிக்கும் வகையில் நடைபெறுவதாகக் கூறப்படுகிறது.
எனவே, துபாய் மாலுக்கு வருபவர்களுக்கு, சீனாவின் பல்வேறு நடவடிக்கைகள், கண்காட்சிகள் மற்றும் நிகழ்ச்சிகளில் தங்களை மூழ்கடிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, பாரம்பரிய சீன கலைக் காட்சிகள் முதல் மெய்சிலிர்க்க வைக்கும் நடன நிகழ்ச்சிகள் வரை, சைனா வீக் அனைவருக்கும் செழுமையான அனுபவமாக இருக்கும் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது.
மாலின் தரை தளத்தில், துபாய் ஐஸ் ரிங்கிற்கு குறுக்கே அமைந்துள்ள சைனாடவுன், கலாச்சார பரிமாற்றத்தை வளர்ப்பதற்கான ஒரு தொலைநோக்கு படி என்றும் கலாச்சார பாலம் என்றும் கூறப்படுகிறது.