தாயகத்திற்கு திரும்பினார் எமிராட்டி விண்வெளி வீரர்!! மாலை அணிவித்து சுல்தான் அல்நெயாடியை வரவேற்ற அமீரகம்!!

சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) சுமார் 186 நாட்களை செலவழித்த பிறகு, கடந்த செப்டம்பர் 4ஆம் தேதி பாதுகாப்பாக பூமியில் தரையிறங்கிய எமிராட்டி விண்வெளி வீரர் சுல்தான் அல்நெயாடி அவர்கள், இன்று (செப்டம்பர் 18, திங்கள்கிழமை) மாலை 5:22 மணியளவில் ஜனாதிபதி விமானத்தில் அபுதாபி சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கியுள்ளார்.
அமீரகத்திற்கு பெருமை சேர்த்த எமிராட்டி வீரர் தாயகம் திரும்பும் நாளை வெகு சிறப்பாகக் கொண்டாட பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில், சுல்தான் அல்நெயாடியின் விமானம் அபுதாபி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியதும் போர் விமானங்கள் அபுதாபியின் வானத்தில் அமீரக தேசியக் கொடியின் வண்ணங்களில் வட்டமிட்டு அவரை வரவேற்றன.
மேலும், அல்நெயாடியுடன் அமீரக விண்வெளி வீரர் திட்டத்தின் இரண்டாவது குழுவின் ஒரு பகுதியாக இருக்கும் விண்வெளி வீரர் ஹஸ்ஸா அல் மன்சூரி, நோரா அல் மத்ரூஷி மற்றும் முகமது அல் முல்லா ஆகியோரும் விமானத்தில் இருந்து வெளியேறினர். அமீரகத்திற்கு விமானத்தில் ஏறுவதற்கு முன்னதாகவே அல்நேயாடி, விமானம் மற்றும் அவர் பயணம் செய்த குழுவின் படத்தை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், கேமராக்களுடன் ஊடகங்கள் மற்றும் நாட்டின் முக்கியப் பிரதிநிதிகள் உட்பட நூற்றுக்கணக்கானோர் எதிர்பார்ப்புடன் திரண்டிருந்த நிலையில், அவர் விமானத்தில் இருந்து வெளியே வந்தவுடன் அவரது தந்தை மற்றும் மூன்று குழந்தைகள் ஆகிய நால்வரும் அவர்களின் அன்பான அரவணைப்பை அவருடன் பாரிமாறிக் கொண்டனர். பின்னர், நான்கு பேரும் சுல்தானுடன் சேர்ந்து விமான நிலையத்திற்கு நடந்து சென்றனர்.
மேலும், விண்வெளி வரை சென்று வந்த அல் நெயாடி, ஒரு தந்தையாக அவரது மகன்களில் ஒருவருக்கு தான் விண்வெளிக்கு எடுத்துச் சென்ற சுஹைல் ப்ளூஷியை பரிசாக வழங்கி உற்சாகமூட்டிய காட்சிகளையும் பார்க்கலாம்.
வெற்றிகரமாக விண்வெளிப் பயணத்தை முடித்த ஹீரோவை எதிர்நோக்கி அபுதாபி சர்வதேச விமான நிலையத்தில் காத்திருந்த குழந்தைகள் சுவரொட்டிகளை ஏந்தி, விண்வெளி வீரர்கள் போல் உடையணிந்து, அல்நெயாடியுடன் மற்ற மூன்று அமீரக விண்வெளி வீரர்களையும் வரவேற்ற காட்சிகள் பரவசமளிக்கும். பாரம்பரிய ஆடைகளை அணிந்த குழந்தைகள் அல்நெயாடியுடன் கைகுலுக்கி, மாலை அணிவித்து வரவேற்றது அவரது மனநிலையை கூடுதலாக உற்சாகப்படுத்தியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இதனையடுத்து, அமீரக ஜனாதிபதி மாண்புமிகு ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் அவர்களும், அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாய் ஆட்சியாளருமான மாண்புமிகு ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் அவர்களும் விண்வெளி வீரரை வரவேற்றனர். அப்போது, அல்நேயாடி தான் விண்வெளிக்கு எடுத்துச் சென்ற அமீரகக் கொடியை ஷேக் முகமது பின் சயீத்துக்கு பரிசாக வழங்கினார்.
விண்வெளி வீரரை வரவேற்ற பிறகு, இரு தலைவர்கள், அல்நெயாடி மற்றும் அவரது குடும்பத்தினர் இருக்கையில் அமர்ந்து உரையாடத் தொடங்கியுள்ளனர். 42 வயதான அல் நெயாடி அமீரக ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதிக்கு இடையில் அமர்ந்து, சிரித்துக்கொண்டே உரையாடுவதையும் புகைப்படங்களில் காணலாம்.
இதற்கிடையில், விமான நிலையத்தின் புதிய டெர்மினலில் சுல்தான் அல்நெயாடியை வரவேற்க ஊடகங்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தன.
தலைவர்களுடனான உரையாடலுக்குப் பிறகு, அல்நெயாடி, ஹஸ்ஸா அல் மன்சூரி மற்றும் முகமது பின் ரஷித் விண்வெளி மையத்தின் (MBRSC) இயக்குனர் ஜெனரல் சலீம் அல் மர்ரி ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினர்.