எமிராட்டி விண்வெளி வீரர் சுல்தான் அல்நெயாடியை பிரம்மாண்டமாக வரவேற்கும் அமீரகம்!! எமிரேட்டின் உயரமான கட்டிடங்களில் ஒளிர்ந்த சுல்தானின் புகைப்படம்…

எமிராட்டி விண்வெளி வீரர் சுல்தான் அல் நெயாடி அவர்கள், ஆறு மாத கால பயணமாக விண்வெளிக்குச் சென்று விட்டு, செப்டம்பர் 4இல் பாதுகாப்பாக பூமிக்கு வந்து சேர்ந்ததையடுத்து, இன்று (செப்டம்பர் 18 திங்கள்கிழமை) அவரது தாயகமான அமீரகத்திற்கு திரும்ப உள்ளார்.
அரபு நாடுகளில் இருந்து விண்வெளிக்குச் சென்று நீண்ட நாட்கள் தங்கிய முதல் நபரான அல் நெயாடி, அவரது சொந்த எமிரேட்டான அபுதாபிக்கு திரும்புவதால், அவரது வருகையைக் கொண்டாடும் வகையில், ஞாயிற்றுக்கிழமை இரவு எமிரேட்டில் உள்ள சின்னச்சின்ன அடையாளமான கட்டிடங்கள் அவரது புகைப்படத்தை ஒளிரச் செய்துள்ளன.
மற்றொரு பக்கம், விண்வெளிப் பயணத்தை வெற்றிகரமாக முடித்த சுல்தான் அவர்களை பிரம்மாண்டமாக நாட்டிற்குள் வரவேற்கும் விழாவிற்கான ஏற்பாடுகளை அமீரகத்தின் தலைநகரம் செய்து வருவதாகக் கூறப்படுகிறது.
மேலும், சாதனையை படைத்து விட்டு தாயகம் திரும்பும் எமிராட்டி விண்வெளி வீரரை வரவேற்கும் வகையில், நகரத்தில் உள்ள சின்னச் சின்ன கட்டிடங்கள் அனைத்தும் அவரது புகைப்படங்கள் மற்றும் சாதனை பற்றிய செய்திகளுடன் ஒளிர்வதைக் காட்டும் வீடியோவை அபுதாபி ஊடக அலுவலகம் பகிர்ந்துள்ளது.