அமீரக செய்திகள்

துபாய்: பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக திறக்கப்பட்ட குளோபல் வில்லேஜ்!! இந்த சீசனில் என்னவெல்லாம் இருக்கும்..??

உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் துபாய்க்கு வரும் சுற்றுலாவாசிகளுக்கும் அமீரகத்தில் வசிப்பவர்களுக்கும் முக்கிய பொழுதுபோக்கு தலமாக விளங்கும் துபாய் குளோபல் வில்லேஜின் 28வது சீசன் நேற்று (அக்டோபர் 18) கோலாகலமாகத் தொடங்கியது. ஒவ்வொரு வருடமும் பார்வையாளர்களைக் குஷிப்படுத்த திறக்கப்படும் இந்த பன்முகக் கலாச்சார இலக்கு, இந்த ஆண்டு ஒரு வாரத்திற்கு முன்னதாக திறக்கப்பட்டிருக்கின்றது.

துபாயின் பிரபல பொழுதுபோக்கு இடமான இந்த குளோபல் வில்லேஜில் இந்த வருட சீசனுக்கான டிக்கெட் விலை, நேரம், வானவேடிக்கை, இசை மற்றும் நடனக் கச்சேரிகள் மற்றும் பல்வேறு சாகச நிகழ்வுகள் என நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முழு விபரங்களும் பின்வருமாறு தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

டிக்கெட் விவரங்கள்: 

இந்த சீசனில் டிக்கெட் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இருப்பினும், ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பார்வையாளர்கள் 10 சதவீதம் தள்ளுபடியைப் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, பார்வையாளர்கள் தங்களுக்கான என்ட்ரி டிக்கெட்டுகளை ஆப் மற்றும் இணையதளம் வழியாக முன்பதிவு செய்யலாம்.

மேலும், ‘Value ticket’ மற்றும் ‘Any day ticket’ என்ற இரண்டு வகையான டிக்கெட்டுகள் விநியோகிக்கப்படுகின்றன. ‘Value ticket’ என்பது பொது விடுமுறை நாட்களைத் தவிர வார நாட்களில் (ஞாயிறு முதல் வியாழன் வரை) செல்லுபடியாகும். இந்த டிக்கெட்டின் விலை 25 திர்ஹம்களாகும், நீங்கள் ஆன்லைனில் வாங்கினால் 22.5 திர்ஹம்களுக்குப் பெறலாம்.

அடுத்ததாக, ‘Any day ticket’ குளோபல் வில்லேஜ் வாயிலில் வாங்கும் போது, 30 திர்ஹம்களுக்கும், ஆன்லைனில் 27 திர்ஹம்களுக்கும் கிடைக்கிறது. இந்த டிக்கெட்டுகள் வார இறுதி நாட்கள் மற்றும் பொது விடுமுறை நாட்கள் உட்பட வாரத்தின் எந்த நாளிலும் அவற்றைப் பயன்படுத்துவதற்கான நெகிழ்வுத்தன்மையை பார்வையாளர்களுக்கு வழங்குகிறது.

இருப்பினும், மூத்த குடிமக்கள், மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் போன்றோரும் அவர்களுடன் துணையாக வரும் ஒரு நபரும் இலவசமாக நுழைய அனுமதிக்கப்படுவார்கள்.

நிகழ்ச்சிகளுக்கான டிக்கெட்:

குளோபல் வில்லேஜுக்கான என்ட்ரி டிக்கெட்டைப் பெறுபவர்கள், அனைத்து பெவிலியன்களுக்கும் இலவச அணுகலைப் பெறுகிறார்கள் மற்றும் குளோபல் வில்லேஜ் மேடைகளில் நிகழ்ச்சிகளையும் பொழுதுபோக்கையும் இலவசமாக கண்டுகளிக்கலாம். ஆனால், பின்வரும் சில ஈர்ப்புகள் மற்றும் நிகழ்ச்சிகளுக்கு பிரீமியம் செலவாகும்:

  • ஸ்டண்ட் ஷோ: 20 திர்ஹம்
  • ரிப்லேஸ் பிலீவ் இட் ஆர் நாட் (Ripley’s Believe It Or Not) : 45 திர்ஹம்

செயல்படும் நேரம்:

  • ஞாயிறு முதல் புதன் வரை: மாலை 4 மணி முதல் 12 மணி வரை
  • வியாழன் முதல் சனிக்கிழமை வரை மற்றும் பொது விடுமுறை நாட்கள்: மாலை 4 மணி முதல் அதிகாலை 1 மணி வரை.
  • செவ்வாய்க் கிழமைகளில், பொது விடுமுறை தினங்கள் தவிர, குடும்பங்கள் மற்றும் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

பெவிலியன்கள்:

துபாயின் குளோபல் வில்லேஜ் நாடுகளின் தீம் செய்யப்பட்ட பெவிலியன்களுக்கு (country-themed pavilions) புகழ்பெற்றது. இந்த பெவிலியன்களில் அந்தந்த நாடுகளின் கலாச்சாரம், உணவு, உடைகள் மற்றும் நிகழ்ச்சிகளை காட்சிப்படுத்தப்படும். அந்த வகையில், இந்த ஆண்டு, குளோபல் வில்லேஜ் அதன் இணையதளத்தில் 27 பெவிலியன்களை பட்டியலிட்டுள்ளது. அவற்றில் துருக்கி, ஜப்பான், ஐரோப்பா, எகிப்து, இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஆப்பிரிக்கா ஆகியவை பிரபலமானவை.

புதிய சீசனில் என்ன எதிர்பார்க்கலாம்?

இந்த ஆண்டு சீசனில், உலகம் முழுவதும் இருந்து 400 கலைஞர்கள் பங்கேற்க உள்ளார்கள் மற்றும் அவர்கள் 40,000 நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவார்கள். அத்துடன் ஒவ்வொரு வெள்ளி மற்றும் சனிக்கிழமையும் இரவு 9 மணிக்கு வானம் வண்ணமயமாக ஒளிரும்.

குளோபல் வில்லேஜ் நிர்வாகம் வெளியிட்டுள்ள தகவல்களின் படி, ‘Toy Shop’ நிகழ்ச்சி மற்றும் முற்றிலும் புதிய சைபர் சிட்டி ஸ்டண்ட் ஷோ (Cyber City Stunt Show) போன்றவை இடம்பெற உள்ளன. இந்த சீசனில் புதிதாக சர்க்கஸ் குழு அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

கேட் ஆஃப் தி வேர்ல்டில் உள்ள சின்னமான டல்லா (Dallah) இந்த புதிய சீசனில் 3டி ப்ரொஜெக்ஷன் நிகழ்ச்சிகள் இடம்பெறும் என கூறப்பட்டுள்ளது. கூடுதலாக, கார்னிவலில் 195க்கும் மேற்பட்ட சவாரிகள் மற்றும் கேம்கள் இருக்கும் என்றும், Odditorium, மற்றும் பிராந்தியத்தின் மிகப்பெரிய ‘ஹவுஸ் ஆஃப் ஃபியர் (House of Fear)’.

அத்துடன் இந்த ஆண்டு, குளோபல் வில்லேஜ் மினி வேர்ல்டை (mini world) அறிமுகப்படுத்துகிறது. இது ஒரு புத்தம் புதிய இடமாகும், இது உலகெங்கிலும் உள்ள பிரபல இடங்களின் மினியேச்சர் அடையாளங்கள், தெரு உணவுகள், புதிய விளையாட்டு மற்றும் சாகச மண்டலங்கள் மற்றும் ஒரு மினி கோல்ஃப் மண்டலம் உள்ளவற்றைக் கொண்டிருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

AAINJAA டிரம்மர் குழுவின் கச்சேரி, ‘Philippine troupe’ மற்றும் ‘America’s Got Talent’இன் முன்னாள் மாணவர்களான அர்பன் க்ரூவின் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், மும்பை நைட்ஸ் நடனம் என பெரியவர்களும், தி வொண்டரர்ஸ், பிஜே மாஸ்க்ஸ் மற்றும் பீட்டர் ராபிட் என குழந்தைகளும் பல்வேறு நிகழ்சிகளைக் கண்டுகளிக்கலாம்.

அதேபோல், அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் ஃப்யூஷன் ஜப்பான் குழுவின் சாகசம், பிப்ரவரியில், UKயைச் சேர்ந்த ‘Dhol Foundation’ வழங்கும் இசை நிகழ்ச்சியும் இந்த சீசனில் இடம்பெற உள்ளதாக குளோபல் வில்லேஜ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பார்க்கிங் வசதி மற்றும் பிரத்யேக பேருந்து சேவை:

இந்த ஆண்டு, VIP பார்க்கிங் மண்டலம் கலாச்சார நுழைவாயிலுக்கு (Cultural Gate) மாற்றப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, அதிக கார்கள் மற்றும் வாகனங்கள் சுமூகமாக வந்து செல்வதற்கு புதிய பாதைகள் அமைத்து எக்ஸிட் பாதைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன.

அதேபோல், துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) குளோபல் வில்லேஜுக்கு போக்குவரத்து சேவையை வழங்க அல் நஹ்தா பேருந்து நிலையத்திலிருந்து ரூட் 107 என்ற கூடுதல் பேருந்து வழித்தடத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது பல்வேறு இடங்களிலிருந்து தற்போதுள்ள நான்கு பிரத்யேக பேருந்து வழித்தடங்களை பூர்த்தி செய்கிறது.

உலகளாவிய பார்வையாளர்களை ஈர்க்கும் பிரபல குளோபல் வில்லேஜ் முதன் முதலாக 1997 இல் தொடங்கப்பட்டதில் இருந்து இப்போது வரை 100 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை வரவேற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!