அமீரக சட்டங்கள்

நோட்டீஸ் பீரியட் கொடுக்காமல் அமீரகத்தை விட்டு வெளியேறினால் ஒரு வருட தொழிலாளர் தடை.. புரொபேஷேன் காலத்தில் வேறு வேலைக்கு மாற ஒரு மாத நோட்டீஸ் பீரியட்.. MoHRE ட்வீட்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தின் மனித வளங்கள் மற்றும் குடியேற்ற அமைச்சகம் (MOHRE), ப்ரோபேஷன் காலத்தில் (probation period) பணிபுரியும் ஊழியர் வேலையை விட்டுவிட திட்டமிட்டாலோ அல்லது அமீரகத்தில் இருந்து வெளியேறி சொந்த நாட்டுக்கு திரும்ப விரும்பினாலோ குறைந்தபட்சம் ஒரு மாதகால நோட்டீஸ் பீரியட் அவசியம் என்று X தளத்தில் அறிவித்துள்ளது.

மேலும் அமீரக தொழிலாளர் சட்டத்தின் படி, ஒரு நிறுவனத்தில் சோதனைக் காலத்தில் (probation period) பணிபுரியும் ஊழியர் நிர்ணயிக்கப்பட்ட அறிவிப்பு காலத் தேவைகளுக்கு இணங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

அதாவது, நீங்கள் தற்போதைய வேலையை விட்டுவிட்டு வேறொரு நிறுவனத்தில் வேலை செய்யப் போகிறீர்கள் என்றால், அதை குறைந்தபட்சம் ஒரு மாத காலத்திற்கு முன்னதாகவே உங்கள் முதலாளியிடம் தெரிவிக்க வேண்டும். மேலும், உங்களின் நோட்டீஸ் பீரியட் பற்றி நீங்கள் அறிந்துகொள்வதன் மூலம், பின்னாளில் எந்தவொரு நிதிச் சிக்கல்களையோ அல்லது தொழிலாளர் தடையையோ எதிர்கொள்ளாமல் இருக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

உங்கள் ராஜினாமா முடிவைப் பற்றி உங்கள் முதலாளியிடம் எவ்வளவு விரைவில் முன் அறிவிப்பை தெரிவிக்க வேண்டும் என்பது நீங்கள் அமீரகத்தில் உள்ள வேறொரு நிறுவனத்தில் சேருகிறீர்களா அல்லது நாட்டை விட்டு வெளியேறத் திட்டமிட்டுள்ளீர்களா என்பதைப் பொறுத்தது ஆகும்.

வேலையை விட்டுவிட்டு வேறொரு நிறுவனத்தில் சேருவதற்கான அறிவிப்பு காலம்:

புரோபேஷன் காலத்தில் பணிபுரியும் ஒரு ஊழியர் தற்போதைய வேலையை விட்டுவிட்டு, அமீரகத்தில் உள்ள வேறொரு நிறுவனத்தில் வேலை செய்ய விரும்பும் பட்சத்தில், அவர் விலக விரும்பும் தேதியிலிருந்து குறைந்தது ஒரு மாதத்திற்கு முன்னதாகவே, மின்னஞ்சல் மூலமாகவும் அல்லது எழுத்துப்பூர்வமாகவும் தெரிவிக்க வேண்டும்.

அதேசமயம், புதிய முதலாளி அந்த நபரை பணியமர்த்தல் அல்லது பணியாளருடன் ஒப்பந்தம் செய்வதற்கான செலவுகளுக்கு தற்போதைய முதலாளிக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்பதையும் அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.

அமீரகத்தை விட்டு வெளியேறுவதற்கான அறிவிப்பு காலம்:

அதுவே நீங்கள் பரோபேஷன் காலத்தில் இருக்கும் போது அமீரகத்தை விட்டு சொந்த ஊருக்கு செல்ல விரும்பினால், நீங்கள் வேலையை விட்டு வெளியேறுவதற்கு 14 நாட்களுக்கு முன்னதாகவே எழுத்துப்பூர்வமாக உங்கள் முதலாளிக்குத் தெரிவிக்க வேண்டும்.

அதேபோல், அந்த நபர் அமீரகத்திலிருந்து  புறப்பட்ட தேதியிலிருந்து மூன்று மாதங்களுக்குள் மீண்டும் அமீரகத்தில் பணிபுரிய பணி அனுமதி பெற விரும்பினால், இருவருக்கும் ஒப்பந்தம் ஏதும் இல்லாதபட்சத்தில் புதிய முதலாளியே அவரது ஆட்சேர்ப்பு செலவுகளுக்கான இழப்பீட்டை செலுத்த வேண்டும் என்றும் அமைச்சகம் சுட்டிக் காட்டியுள்ளது. ஒருவேளை அதற்கான செலவை அந்த ஊழியரே செலுத்த வேண்டும் என புதிய முதலாளியுடன் ஒப்பந்தம் போட்டிருந்தால் அந்த இழப்பீடை ஊழியரே செலுத்த வேண்டும்.

அறிவிப்பு காலத் தேவைகளுக்கு இணங்கவில்லை என்றால் என்ன நடக்கும்?

மேற்கூறப்பட்ட சட்டத் தேவைகளுக்கு இணங்காமல் ஊழியரோ அல்லது முதலாளியோ பணி ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டால், அவர்கள் மற்ற தரப்பினருக்கு நோட்டீஸ் காலம் அல்லது நோட்டீஸ் காலத்தின் மீதமுள்ள காலத்திற்கான பணியாளரின் சம்பளத்திற்கு சமமான தொகையை இழப்பீடாக வழங்க வேண்டும்.

அதேபோல், அமீரக தொழிலாளர் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அறிவிப்புக் காலத்தைக் கடைப்பிடிக்காமல் நீங்கள் நாட்டை விட்டு வெளியேறினால், உங்களுக்கு ஐக்கிய அரபு அமீரக அரசால் ஒரு வருட தொழிலாளர் தடை விதிக்கப்படும்.

அதுமட்டுமின்றி, முதலாளியும் தொழிலாளியின் ஒப்பந்தத்தை நிறுத்த திட்டமிட்டால் குறைந்தபட்சம் 14 நாட்களுக்கு முன் தொழிலாளருக்கு அறிவிப்பை வழங்க வேண்டும். ஆனால், சில நெருக்கடியான சூழ்நிலைகளில், ஒரு பணியாளரின் ஒப்பந்தத்தை உடனடியாக நிறுத்துவதற்கான உரிமையை சட்டம் முதலாளிகளுக்கு வழங்குகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

உடனடி செய்திகளை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

 

Related Articles

Back to top button
error: Content is protected !!