அமீரக செய்திகள்

அக்டோபர் 11ம் தேதி அமீரகத்தில் இன்டர்நெட் சேவை துண்டிக்கப்படுமா.? இணையத்தில் பரவும் வீடியோ.. பதில் அளித்த TDRA..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் எதிர்வரும் அக்டோபர் 11 ம் தேதி அன்று இன்டர்நெட் சேவையானது துண்டிக்கப்படும் என்று ஒரு வீடியோ தொகுப்புடன் கூடிய செய்தி ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. மேலும் இது அமீரகத்தில் வசிக்கக்கூடிய சில குடியிருப்பாளர்களின் மத்தியில் ஒருவிதமான குழப்பத்தையும் ஏற்படுத்தியது.

இந்நிலையில் இணைய சேவை துண்டிப்பு தொடர்பான குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, அமீரக அரசு இந்த வதந்திகளுக்கு மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும், இதுபோன்ற குளறுபடிகளைத் தவிர்ப்பதற்கு ஆணையத்தின் அதிகாரப்பூர்வ சேனல்களை மட்டுமே பின்தொடருமாறும் அமீரகத்தின் தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் அரசாங்க ஒழுங்குமுறை ஆணையம் (TDRA) குடியிருப்பாளர்களை வலியுறுத்தியுள்ளது.

தற்போது, சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் ஒரு செய்தி தொகுப்பாளர், குறிப்பிட்ட காலத்திற்கு இணைய சேவைகள் துண்டிக்கப்படும் என்று வெளிப்படையாகக் கூறும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதாவது அந்த பிரபலமான செய்தி சேனலில் இணையசேவை துண்டிக்கப்படுவது பற்றிய விவாதம் நடைபெறுவதும் வீடியோவில் காண்பிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தொலைதொடர்பு ஆணையம் X தளத்தில் வெளியிட்ட பதிவில், சமீபத்தில் இன்டர்நெட் சேவை குறுக்கீடு பற்றி வெளியான அறிக்கைகள் தவறானது என்றும், துல்லியமான தகவல்களைப் பெற அதிகாரத்தின் அதிகாரப்பூர்வ சமூக ஊடகக் கணக்குகளை மட்டுமே நம்புமாறும் அறிவுறுத்தியுள்ளது.

அரேபிய ஊடக அறிக்கைகளின்படி, இந்த வீடியோ எடிட் செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. அதாவது 2018 இல் ஒளிபரப்பப்பட்ட அசல் எபிசோடில், வேறு சிக்கல்களைப் பற்றி விவாதிக்கும் செய்தியாளர்களின் காட்சிகள் மங்கலாக்கப்பட்டு, எடிட் செய்யப்பட்டு அதில் இணையசேவை துண்டிப்பு தொடர்பான ஆடியோ செர்க்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையில், சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் மற்ற அறிக்கைகள் அக்டோபர் 11-ம் தேதி ஏற்படும் செயலிழப்புக்கு ‘சூரிய புயல்’ காரணம் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இதற்கு முற்றிலும் மறுப்பு தெரிவித்த TDRA, அன்றைய தினம் அமீரகத்தில் இன்டர்நெட் சேவையில் எந்தவித இடையூறும் ஏற்படாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!