ஜொலிக்கும் அபுதாபி.. 52வது தேசிய தினத்திற்காக நிறுவப்பட்டுள்ள 4,800 ஒளி விளக்குகள்..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஒவ்வொரு ஆண்டும் வரும் தேசிய தினத்தை முன்னிட்டு அமீரகத்தின் தலைநகரான அபுதாபியின் முக்கிய சாலைகள் மற்ற எமிரேட்டுகளை விடவும் சிறப்பாக வண்ணமயமான விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். அதே போல் இந்த வருடமும் நாட்டின் 52வது தேசிய தினத்தை முன்னிட்டு முக்கிய சாலைகள் சுமார் 4,800 லைட் நிறுவல்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்த முன்முயற்சி அமீரகக் குடிமக்களின் ஒற்றுமையைக் குறிப்பதுடன் வண்ணமயமான விளக்குகள் குடியிருப்பாளர்களுக்கு ஒரு பண்டிகை சூழ்நிலையை உருவாக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அபுதாபி ஐலேண்ட் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிறுவப்பட்டுள்ள இந்த லைட் செட்டிங்க்ஸ், அபுதாபி கார்னிச் ஸ்ட்ரீட் மற்றும் அல் கலீஜ் அல் அரபி ஸ்ட்ரீட், ஷேக் சையத் ஸ்ட்ரீட் மற்றும் ஏர்போர்ட் ஸ்ட்ரீட் உள்ளிட்ட முக்கிய நெடுஞ்சாலைகளில் ஒளிர்வதை இந்த சாலைகளில் பயணிப்பவர்கள் பார்க்கலாம்.
இந்த லைட் நிறுவல்களில் 120 3D தரை-நிலை வடிவங்கள், 120 ஏறுவரிசை 3D வடிவங்கள், யூனியனின் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் ’52’ என்ற எண்ணை உருவாக்கும் 1,500 வடிவங்கள் மற்றும் 320 ஒளிரும் சரங்கள் போன்றவை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நாட்டின் சின்னம், கொடி, குதிரைகள், நினைவுச்சின்ன கட்டிடங்கள் மற்றும் பழைய அரண்மனைகள் போன்ற பாரம்பரிய எமிராட்டி கூறுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் வடிவங்களும் இந்த நிறுவல்களில் இடம்பெற்றுள்ளன.
அதுமட்டுமில்லாமல், “எங்கள் எமிரேட்ஸின் ஒற்றுமை வாழ்க” “எனது நாடு வாழ்க”, “எங்கள் சக்தி எங்கள் மரியாதை,” “எங்கள் பாதுகாப்பான நிலம்” போன்ற சொற்றொடர்கள் அடங்கிய லைட் நிறுவல்கள் ஆங்காங்கே ஒளிரும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இத்தனை அலங்கார விளக்குகளும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும், பல்வேறு வானிலை நிலைகளைத் தாங்கும் வகையிலும், உயர்தர இன்சுலேடிங் பொருட்களால் கட்டப்பட்டுள்ளதாக அபுதாபி சிட்டி முனிசிபாலிட்டி தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel