அமீரக செய்திகள்

பசித்தவர்களுக்கு இலவச உணவை அளிக்கும் புதிய ஸ்மார்ட் இயந்திரம்..!! துபாயில் அறிமுகம்..!!

அமீரகத்தில் இருக்கும் ஆதரவற்ற குடும்பங்கள் மற்றும் தொழிலாளர்களின் பசியைப் போக்குவதற்காக புதிய திட்டம் ஒன்று துபாயில் துவங்கப்பட்டுள்ளது. அதாவது அமீரகத்தில் இயங்கி வரும் அவ்காஃப் அண்ட் மைனர்ஸ் அஃபைர்ஸ் ஃபவுண்டேஷன் (Awqaf and Minors Affairs Foundation, AMAF)ன் கீழ் உள்ள முகம்மது பின் ரஷீத் குளோபல் சென்டர் ஃபார் எண்டோமெண்ட் கன்சல்டன்ஸியானது (Mohammed bin Rashid Global Centre for Endowment Consultancy, MBRGCEC), ஆதரவற்ற குடும்பங்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு நாளின் பல்வேறு நேரங்களில் அவர்களின் பசியைப் போக்குவதற்காக இலவசமாக பிரட் வழங்குவதனை நோக்கமாக கொண்டு அனைவருக்கும் ப்ரட் (Bread for All) திட்டத்தை அறிமுகப்படுத்துவதாக தெரிவித்துள்ளது.

இந்த டிஜிட்டல் முன்முயற்சியானது பல விற்பனை நிலையங்களில் பயன்படுத்தப்பட்டுள்ள ஸ்மார்ட் இயந்திரங்கள் மூலம் தேவைப்படுபவர்களுக்கு ஃப்ரஷ்ஷான புதிய ப்ரட்டினை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இதில் இருக்கும் முன்-திட்டமிடப்பட்ட இயந்திரங்கள் தொண்டுப் பணியின் ஒரு பகுதியாக ப்ரட்டினை தயாரித்து இலவசமாக வழங்குகின்றன என கூறப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாயின் ஆட்சியாளருமான மாண்புமிகு ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் அவர்களின் கொரோனா காலத்தின் போது கூறிய “ஐக்கிய அரபு அமீரகத்தில், பசியுடன் யாரும் தூங்குவதில்லை” என்று வலியுறுத்தியதன் நோக்கத்தை இந்த திட்டம் உணர்த்துகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது. .

ஒழுங்கமைக்கப்பட்ட செயல்பாடுகள்

Bread for All எனும் இந்த திட்டத்தின் ஸ்மார்ட் மெஷின்கள் அல் மிசார், அல் வர்கா, மிர்திஃப், நாத் அல்ஷேபா, நாத் அல் ஹமர், அல் கூஸ் மற்றும் அல் பதா ஆகிய பகுதிகளில் உள்ள சூப்பர் மார்க்கெட்டுகளில் அமைக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது. அத்துடன் இயந்திரங்கள் பயனாளர்களுக்கு ஏற்றவையாகவும், பயனாளிகளுக்காக எளிதான செயல்பாடுகளையும் கொண்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


உணவு தேவைப்படும் எந்தவொரு நபரும் இந்த இயந்திரத்தில் “ஆர்டர்” பட்டனை அழுத்தினால் சிறிது நேர காத்திருப்புக்குப் பிறகு, ப்ரட் தயார் செய்யப்பட்டு, அது இயந்திரத்திலிருந்து விநியோகிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.


நன்கொடை விருப்பங்கள்

இந்த முன்முயற்சி, ஆதரவற்ற குடும்பங்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு உணவளிப்பதை நோக்கமாக கொண்டுள்ளது. அதே நேரத்தில் நன்கொடை அளிக்க விரும்புபவர்கள் எங்கிருந்தாலும் பிரட் தயாரித்து வழங்கும் இயந்திரத்தின் மூலம் நேரடியாக நன்கொடை அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதலாக Dubai Now ஆப் மூலமாகவோ அல்லது 10 திர்ஹம் நன்கொடைக்கு 3656, 50 திர்ஹம் நன்கொடைக்கு 3658, 100 திர்ஹம் நன்கொடைக்கு 3659, 500 திர்ஹம் நன்கொடைக்கு 3679 என்ற எண்களுக்கு SMS அனுப்பவதன் மூலமாகவோ நன்கொடை அளிக்கலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் www.mbrgcec.ae என்ற இணையதளம் மூலம் இந்த முயற்சிக்கு பங்களிக்க விரும்புபவர்கள் அங்கு அவர்கள் நன்கொடைத் தொகையைக் குறிப்பிட்டு நன்கொடை அளிக்கலாம் என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் இது பற்றிய கூடுதல் தகவலுக்கு, முயற்சியின் அமைப்பாளர்களை [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது 0097147183222 என்ற தொலைபேசி மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Related Articles

Back to top button
error: Content is protected !!