இந்திய வெங்காய ஏற்றுமதி தடையின் எதிரொலி: அமீரகத்தில் உச்சத்தைத் தொட்ட வெங்காய விலை…
இந்திய அரசாங்கம் சமீபத்தில் உள்நாட்டில் வெங்காய விலையைக் கட்டுப்படுத்தவும், போதுமான இருப்பை உறுதி செய்யவும் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதிப்பதாக அறிவித்ததன் எதிரொலியாக இப்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் வெங்காய விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
வெங்காயத்தின் தேவையை பூர்த்தி செய்ய ஆறு மடங்கு விலைகள் உயர்ந்துள்ளதால், பொருட்களை வாங்குவதற்கு மாற்று ஆதாரங்களைத் தேடுவதாக நாட்டில் உள்ள சில்லறை வணிக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக, அல் மாயா குழுமத்தின் பங்குதாரரும் குழு இயக்குனருமான கமல் வச்சானி என்பவர் கூறுகையில், இந்தியா விதித்துள்ள தடையால், ஐக்கிய அரபு அமீரகத்தில் வெங்காய தேவையை பூர்த்தி செய்ய மாற்று நாடுகளை ஆய்வு செய்து, பல சாத்தியமான நாடுகளை அடையாளம் கண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், அமீரகத்தில் உள்ள நுகர்வோருக்கு சீரான வெங்காய விநியோகத்திற்கு உத்தரவாதம் அளிக்க அதற்கான நெட்வொர்க்குகளை தீவிரமாக விரிவுபடுத்துவதாகவும் கமல் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக, வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டதன் விளைவாக சில்லறை விலையானது குறைந்தது ஆறு மடங்கு உயர்ந்துள்ளது என்பதை அல் சஃபீரின் குழும FMCG இயக்குனர் அசோக் துல்சியானி என்பவரும் உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்தியாவிற்கு மாற்றாக துருக்கி, ஈரான் மற்றும் சீனா ஆகிய நாடுகளில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்யலாம் என்றாலும், அளவு, தரம் மற்றும் விலை ஆகியவற்றின் அடிப்படையில், இந்திய வெங்காயம் இன்னும் சிறந்தது மற்றும் பெரும்பாலான வாடிக்கையாளர்களின் விருப்பம் என்றும் வேறு எந்த நாடும் இந்திய வெங்காயத்திற்கான தேவையை முழுமையாக நியாயப்படுத்தவில்லை என்றும் துல்சியாணி தெரிவித்துள்ளார்.
துணைக்கண்டம் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள மற்ற அண்டை நாடுகளுக்கும் இந்தியா வெங்காயத்தின் முக்கிய ஏற்றுமதியாளராக இருப்பதால், இந்த தடையின் விளைவாக அமீரகம் மட்டுமின்றி அண்டை நாடுகளும் விலை உயர்வை சந்தித்துள்ளது.
தற்போது, ஐக்கிய அரபு அமீரகச் சந்தைக்கு வெங்காயத்தை வழங்குவதற்கான மற்றொரு சாத்தியமான சப்ளையராக எகிப்து கருதப்படுகிறது, மேலும் துருக்கியில் இருந்தும் வெங்காயம் இறக்குமதி செய்யப்படுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel