அமீரகத்தில் இன்று பகல் நேரங்களில் மழை பெய்யும் என NCM அறிக்கை!! நாட்டில் மழையின் அளவு குறைந்துள்ளதாகவும் தகவல்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்றைய தினம் மேகமூட்டமான வானிலை நிலவும், குறிப்பாக கடலோர மற்றும் வடக்குப் பகுதிகளில் பகல்நேரங்களில் மழை பெய்யும் என்று தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) அறிவித்துள்ளது.
தொடர்ந்து இன்றிரவு மற்றும் வெள்ளிக்கிழமை காலை சில உள் பகுதிகளில் குடியிருப்பாளர்கள் ஈரப்பதமான வானிலையை அனுபவிப்பார்கள். மேலும், அவ்வப்போது லேசானது முதல் மிதமான காற்று வீசும் என்பதால், தூசி நிறைந்த சூழலை எதிர்பார்க்கலாம்.
NCM வெளியிட்ட முன்னறிவிப்பின் படி, நாட்டில் இன்று வெப்பநிலை 8 டிகிரி செல்சியஸ் வரை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், அபுதாபியில் 16°C முதல் 25°C வரையிலும், துபாயில் 18°C முதல் 26°C வரையிலும் வெப்பநிலை பதிவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, அரேபிய வளைகுடாவில் கடல் கொந்தளிப்பாகவும், ஓமன் கடலில் மிதமானது முதல் கொந்தளிப்பாகவும் இருக்கும் என்று மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், சமீபத்தில் குளிர்காலம் குறைவாகவே காணப்பட்டது என்று தேசிய வானிலை ஆய்வு மையத்தின் (NCM) நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
NCM-ஐச் சேர்ந்த டாக்டர் அஹ்மத் ஹபீப் ஊடகங்களிடம் பேசுகையில், டிசம்பரைப் போலவே, இந்த ஆண்டு ஜனவரியிலும் ஒட்டுமொத்த வெப்பநிலை அதிகரித்தது மற்றும் முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது மழை அளவு குறைந்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel