UAE: ஷார்ஜாவை ஒளியூட்ட வருகிறது ஷார்ஜா லைட் ஃபெஸ்டிவல்!! 12 இடங்களில் வண்ணமயமான ஒளிக் காட்சிகள் இடம்பெறும் எனத் தகவல்….

ஐக்கிய அரபு அமீரகக் குடியிருப்பாளர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஷார்ஜா லைட் ஃபெஸ்டிவல், பிப்ரவரி 7 முதல் 18 வரை 12 இடங்களில் நடைபெற உள்ளது. ஷார்ஜா எமிரேட்டை ஒளி வெள்ளத்தில் ஜொலிக்கச் செய்யும் இந்த ஃபெஸ்டிவலில் ஸ்வான் ட்ரோன் ஷோ (swan drone show) உட்பட பார்வையாளர்கள் தனித்துவமான தொழில்நுட்பங்கள் மற்றும் அனுபவங்களை ரசிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கியமாக, ஷார்ஜா மசூதி, திப்பா மசூதி, ஹம்ரியா சூக் மற்றும் ரஃபிசா டேம் ஆகிய நான்கு இடங்களை மேப்பிங் செய்வதிலும், கட்டிடங்களின் மீது அதிவேக வண்ணமயமான ப்ரோஜெக்சன்களை உருவாக்குவதிலும் கவனம் செலுத்தி வருவதாக Artabesk நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மௌனிர் ஹர்பௌய் கூறியுள்ளார்.
மேலும், வண்ணமயமான ப்ரோஜெக்சன்களை உருவாக்குவதற்கு நிறுவனம் ஷார்ஜா அரசாங்கத்திடம் ஒரு சில இடங்களை முன்மொழிந்ததாகவும், வேலை செய்யத் தொடங்குவதற்கு முன்பு அரசாங்கம் இடங்களைத் தேர்ந்தெடுத்ததாகவும் கூறிய அவர், இந்த பிரச்சாரத்தில் செர்பியா, ரஷ்யா, இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த சர்வதேச கலைஞர்கள் மற்றும் வடிவமைப்பாளர்கள் பங்கேற்பதாகத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய மௌனிர் ஹர்பௌய், ரஃபிசா டேம் இந்த முறை வித்தியாசமாக இருக்கும் என்றும், ரஃபிசா அணையின் நீரில் ஒரு ட்ரோன் ஸ்வான் ஷோ நடத்தப்படும் என்றும் கூறினார், மேலும் 12 ஸ்வான்களும் பெல்லி நடனமாடுவதையும், தண்ணீரில் ஒத்திசைவதையும் பார்வையாளர்கள் விரும்புவார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இந்த ஆண்டு, ஷார்ஜா மசூதி உள்ளடக்க உருவாக்கத்தின் அடிப்படையில் பாரம்பரிய மற்றும் நவீன கலவையாக இருக்கும் என்றும், பார்வையாளர்கள் நிறைய சுருக்க விளைவுகளைக் (abstract effects) காணலாம் என்றும் கூறப்படுகிறது.
அவர்கள் இந்த திட்டத்தில் ஆறு மாதங்களுக்கு முன்பே வேலை செய்யத் தொடங்கிவிட்டதாகவும், நான்கு தளங்களில் 37,000 ஒளிரும் புரொஜெக்டர்களைப் பயன்படுத்தியிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேற்கூறிய நான்கு இடங்களைத் தவிர அல் ஹம்ரியா, கோர்பக்கான், திப்பா ஹிசான், கல்பா மற்றும் பிற இடங்களில் லைட் ஃபெஸ்டிவல் காட்சிப்படுத்தப்படும் என்று ஷார்ஜா மீடியா சிட்டியின் தலைவர் டாக்டர் காலித் அல் மிட்ஃபா வெளிப்படுத்தியுள்ளார்.
ஷார்ஜாவில் உள்ள சின்னச் சின்ன கட்டிடங்களின் வீடியோ மேப்பிங்கை உருவாக்குவதில் 15 சர்வதேச கலைஞர்கள் கலந்து கொண்டதாகக் கூறிய அவர், அமீரகம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் அனைத்து பார்வையாளர்களும் தங்கள் நேரத்தை மகிழ்ச்சியுடன் அனுபவிப்பார்கள் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், 55 சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பங்கேற்கும் ஷார்ஜா லைட் வில்லேஜ், பிப்ரவரி 1 முதல் 18 வரை பார்வையாளர்களுக்கு திறந்திருக்கும். பல அற்புதமான அனுபவங்களை வழங்கும் இந்த ஃபெஸ்டிவலில் சில அனுபவங்கள் கட்டணம் என்றாலும், சில இலவசமாகும் மற்றும் அனைத்து வயதினருக்கும் பொருந்தும் என்று அவர் கூறியுள்ளார்.
லைட் வில்லேஜுக்கு இந்தாண்டு அதிக பார்வையாளர்கள் வருவார்கள் என்று எதிர்பார்ப்பதாகத் தெரிவித்த அவர், கடந்த ஆண்டு, 18 நாட்களுக்கு 190,000 பேர் யுனிவர்சிட்டி சிட்டிக்கு அருகில் அமைந்துள்ள லைட் வில்லேஜை பார்வையிட்டதாகவும், வெவ்வேறு இடங்களில் 1.3 மில்லியன் மக்கள் லைட் ஃபெஸ்டிவலை பார்வையிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel