UAE: எலெக்ட்ரிக் கார்களுக்கு வேட்டு வைத்த கனமழை.. வாகனங்களால் நிரம்பி வழியும் அமீரக கேரேஜ்கள்..!!
அமீரகம் முழுவதும் ஏற்பட்ட மழைவெள்ளத்தால் வாகன உரிமையாளர்கள் கடுமையான பாதிப்பைச் சந்தித்ததைத் தொடர்ந்து, நாட்டில் உள்ள கேரேஜ்கள் மற்றும் மெக்கானிக்குகளிடம் பழுதுபார்க்க வேண்டிய எக்கச்சக்கமான வாகனங்கள் தற்போது நிரம்பி வழிகின்றன.
குறிப்பாக, சில துரதிர்ஷ்டவசமான வாகன உரிமையாளர்களின் காப்பீடு கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டுள்ளதால், அவர்கள் தங்கள் கார்களை பழுதுபார்க்க 40,000 திர்ஹம் வரை செலவு செய்ய வேண்டியிருக்கும் என்று மதிப்பீடுகள் தெரிவிப்பதால் வாகன உரிமையாளர்கள் கலக்கத்தில் உள்ளனர்.
கடந்த வாரம் பெய்த பெருமழை ஒட்டுமொத்த அமீரகத்தையும் புரட்டிப்போட்டது, மேலும் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் ஏராளமான கார்கள் சிக்கித் தவித்தன. இதனால் வாகனங்களில் சிறியது முதல் பெரியது வரையிலான சேதங்கள் ஏற்பட்டன. இதன் விளைவாக வாகன ஓட்டிகள் தற்போது குறிப்பிடத்தக்க பழுதுபார்ப்பு கட்டணங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
மேலும், ஆயிரக்கணக்கான வாகனங்களுக்கு விரிவான பழுதுபார்ப்பு தேவைப்படுவதால், வெள்ள நீரில் சேதமடைந்த வாகனங்களுக்கு காப்பீட்டுத் தொகையைப் பெற பலர் போராடக்கூடும் என்ற கவலைகளும் வாகன உரிமையாளர்கள் மத்தியில் எழுந்துள்ளன.
குறிப்பாக, மழை வெள்ளம் காரில் உள்ள எலெக்ட்ரிக்கல் சர்க்யூட் மற்றும் என்ஜின் போன்ற முக்கியமான கூறுகளை சேதப்படுத்தியிருக்கலாம் அல்லது என்ஜின்களில் தண்ணீர் நுழைந்திருக்கலாம், இது ஹைட்ரோலாக், டிரான்ஸ்மிஷன் செயலிழப்பு மற்றும் என்ஜின் செயலிழப்புக்கு வழிவகுக்கும் கார் பழுதுபார்க்கும் நிறுவனத்தின் உரிமையாளர்கள் கூறியுள்ளனர்.
பழுதுபார்ப்புச் செலவு:
முழுமையான சோதனைகளுக்குப் பிறகுதான் காரின் பழுதுபார்க்கும் செலவை மதிப்பிட முடியும் என்று ஆட்டோமொபைல் நிபுணர்கள் எடுத்துரைகின்றனர். அவர்களின் கூற்றுப்படி, பழுதுபார்ப்புக்கான மதிப்பீடுகள் வாகனத்தின் தயாரிப்பு, சேதமடைந்த கூறுகள், உதிரி பாகங்களை மாற்றுதல் மற்றும் அதை சரிசெய்ய எடுக்கும் நாட்களின் எண்ணிக்கை ஆகியவற்றைப் பொறுத்து மாறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது.
சிலருக்கு, பழுதுபார்க்கும் கட்டணம் அவரின் அதிர்ஷ்டத்தைப் பொருத்து 500 திர்ஹம்ஸாக இருக்கலாம், மற்றும் சிலருக்கு குறிப்பாக இத்தாலிய மற்றும் ஜெர்மனியில் தயாரிக்கப்பட்ட கார்களுக்கு செலவுகள் 30,000 திர்ஹம்ஸ்க்கு மேல் அதிகமாக இருக்கலாம் என்றும் ஆட்டோமொபைல் வல்லுநர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.
எலெக்ட்ரிக் கார்களில் ஏற்படும் சவால்கள்:
எலெக்ட்ரிக் கார்களில் ஏற்பட்டுள்ள பழுது கூடுதல் சவால்களை அளிப்பதாகவும், அவற்றை பழுதுபார்ப்பதற்கு சிறப்பு நிபுணத்துவம் மற்றும் வசதிகள் தேவைப்படுகின்றன என்றும் மெக்கானிக்குகள் தெரிவிக்கின்றனர். அதாவது, எலெக்ட்ரிக் கார்களின் ஸ்டீயரிங் உட்பட டிஜிட்டல் மற்றும் மெக்கானிக்கல் அமைப்புகள் இரண்டும் கனமழையால் பாதிக்கப்பட்டிருக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், எலெக்ட்ரிக் கார்களின் பேட்டரியானது காரின் அடியில் இருக்கும் என்பதால் வெள்ளத்தில் மூழ்கிய கார்களின் பேட்டரி பெரிய பாதிப்புக்கு உள்ளாகியிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, அமீரகத்தில் தற்போது அங்கீகரிக்கப்பட்ட மையங்களில் மட்டுமே எலெக்ட்ரிக் வாகனங்கள் பழுதுபார்க்கப்படுவதால், பாதிக்கப்பட்ட எலெக்ட்ரிக் கார்களின் வாகன உரிமையாளர்கள் கூடுதல் சிரமங்களை எதிர்கொள்வார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
காப்பீட்டு கோரிக்கை ஏன் நிராகரிக்கப்படலாம்?
உரிமையாளர் காரை தண்ணீர் தேங்கும் இடத்தில் அல்லது பகுதியளவு நீரில் மூழ்கிய இடத்தில் நிறுத்திவிட்டு, பின்னர் வாகனத்தை இயக்க முற்படும்போது இன்ஜின் சேதமடைந்திருந்தாலும் கூட, காப்பீட்டு நிறுவனம் அவர்களின் கோரிக்கையை நிராகரிக்கப்படலாம். மேலும், மழையில் வெள்ளம் சூழ்ந்த சாலையில் வாகன ஓட்டிகள் வேண்டுமென்றே வாகனம் ஓட்டினால், அந்த காரணத்திற்காகவும் காப்பீட்டு நிறுவனம் கோரிக்கையை நிராகரிக்கப்படலாம்.
ஆனால், ஒரு வாகனமானது நியமிக்கப்பட்ட கார் பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டு, கனமழைக்குப் பிறகு அது வெள்ளத்தில் மூழ்கி, வாகன உரிமையாளர் அதை பராமரிப்புக்காக கேரேஜுக்கு இழுத்துச் சென்றால், பராமரிப்பு செலவானது காப்பீட்டின் மூலம் செலுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel