அமீரக செய்திகள்

அமீரகத்தில் ஈத் அல் ஃபித்ருக்கு 9 நாட்கள் விடுமுறை.. யாருக்கெல்லாம் கிடைக்க வாய்ப்பு..??

அமீரகத்தில் ரமலான் மாதம் துவங்கியுள்ள நிலையில் அமீரகத்தில் வசிக்கும் இஸ்லாமியர்கள் அனைவரும் ரமலான் மாத நோன்பினை கடைபிடித்து வருகின்றனர். இந்த ரமலான் மாதம் முடிந்ததற்கு பிறகு கொண்டாடப்படும் ஈத் அல் ஃபித்ரை முன்னிட்டு அமீரக குடியிருப்பாளர்கள் ஏப்ரல் மாதத்தில் ஒன்பது நாட்கள் வரை விடுமுறை பெற வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, அமீரகத்தில் உள்ள தனியார் மற்றும் பொதுத் துறைகளைச் சேர்ந்த ஊழியர்கள் அனைவரும் ஊதியத்துடன் கூடிய இந்த நீண்ட விடுமுறையை அனுபவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை (மார்ச் 10) பிறை தென்பட்டதையடுத்து, (மார்ச் 11) திங்கள்கிழமை ரமலான் மாதத்தின் முதல் நாளாகக் குறிக்கப்பட்டது. இதே போல் ரமலான் மாத இறுதியில் பிறை எப்போது வானில் தோன்றுகிறது என்பதைப் பொறுத்து ரமலான் 29 அல்லது 30 நாட்கள் நீடிக்கும்.

இந்த ரமலான் மாதத்திற்குப் பிறகு வரும் ஷவ்வாலின் முதல் நாளில் ஈத் அல் பித்ர் கொண்டாடப்படுகிறது. அமீரக அரசாங்கம் அறிவித்துள்ள விடுமுறைப் பட்டியலின்படி, குடியிருப்பாளர்கள் ஈத் அல் ஃபித்ரைக் கொண்டாட ரமலான் 29 முதல் ஷவ்வால் 3 வரை விடுமுறை பெறுவார்கள். ரமலான் மாதம் 30 நாட்கள் நீடித்தால், ஏப்ரல் 10 அன்று ஈத் கொண்டாடப்படும், மாறாக ரமலான் மாதம் 29 நாட்கள் நீடித்தால், ஈத் அல் ஃபித்ர் ஏப்ரல் 9 அன்று தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ரமலான் 30 நாட்கள் நீடித்தால்: ஏப்ரல் 8 முதல் (ரமலான் 29), ஏப்ரல் 12, வெள்ளிக்கிழமை வரை (ஷவ்வால் 3) ஈத் அல் ஃபித்ர் விடுமுறை கிடைக்கும். இதனுடன் சனி-ஞாயிறு வார இறுதி விடுமுறையை முன்னும் பின்னும் சேர்த்துக் கொண்டால், மொத்தமாக ஏப்ரல் 6, சனி முதல் ஏப்ரல் 14 ஞாயிறு வரை ஒன்பது நாட்கள் விடுமுறை கிடைக்கிறது.

ரமலான் 29 நாட்கள் நீடித்தால்: ஒருவேளை ரமலான் 29 நாட்கள் நீடித்தால் குடியிருப்பாளர்களுக்கு வார விடுமுறை உட்பட ஆறு நாட்கள் விடுமுறை கிடைக்கும். அதாவது, ஈத் விடுமுறை ஏப்ரல் 8 (ரமலான் 29) முதல் ஏப்ரல் 11, வியாழக்கிழமை (ஷவ்வால் 3) வரை இருக்கும். இதனுடன் சனி-ஞாயிறு வார இறுதி நாட்களை சேர்த்தால், மொத்தம் ஆறு நாட்கள் விடுமுறை வழங்கப்படும்.

இருப்பினும் அரசு துறை போன்றே சனி மற்றும் ஞாயிறு ஆகிய வார இறுதி விடுமுறை நாட்களைப் பெறும் தனியார் துறை ஊழியர்களுக்கே இந்த விடுமுறை காலங்கள் பொருந்தும். சனி அல்லது ஞாயிறு என ஒரு நாள் விடுமுறை உள்ள தனியார் துறை ஊழியர்களுக்கு இந்த விடுமுறை நாட்கள் குறைய வாய்ப்புள்ளது.

ஜனவரி 1 ஆம் தேதி புத்தாண்டு விடுமுறைக்குப் பிறகு ஈத் விடுமுறை இந்த ஆண்டின்  இரண்டாவது பொது விடுமுறை ஆகும். இதையடுத்து , இஸ்லாமிய பண்டிகைகளில் ஒன்றான ஈத் அல் அதாவுக்கு ஜூன் மாதத்தில் விடுமுறை கிடைக்கும்.

அதன்பிறகு, ஜூலை மாதம் இஸ்லாமிய புத்தாண்டான முஹர்ரம் 1 மற்றும் செப்டம்பரில் முஹம்மது நபியின் பிறந்தநாள் போன்றவற்றிற்கும், டிசம்பர் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய தினத்திற்கும் விடுமுறைகளைப் பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!