அமீரக செய்திகள்

கின்னஸ் உலக சாதனையில் இடம் பிடித்த துபாயின் புதிய அடையாளம்.. பிரம்மிப்பூட்டும் கட்டித்தில் அப்படி என்ன ஸ்பெஷல்..?

நவீன கட்டிடக்கலைக்கும் வானளாவிய கட்டிடங்களுக்கும் பெயர் பெற்ற துபாயானது கட்டிடங்களுக்காகவே பல சாதனைகளை படைத்துள்ளது. முக்கியமாக உலகின் மிக உயர்ந்த கட்டிடமான ‘புர்ஜ் கலீஃபா’, தூண்களே இல்லாத கட்டிடமான ‘மியூசியம் ஆஃப் தி ஃப்யூச்சர்’, ‘புர்ஜ் அல் அரப்’ ஆகிய கட்டிடங்களானது உலகளவில் பிரசித்தி பெற்றதாகும். அதன் வரிசையில் சமீபத்தில் இணைந்திருக்கும் ஒரு புதிய கட்டிடம் புகழ் பெற்றதும் அல்லாமல் கின்னஸ் சாதனையும் படைத்துள்ளது.

துபாயின் ‘One Za’abeel’ என அழைக்கப்படும் இரட்டைக் கோபுரமானது இந்த சாதனையை படைத்துள்ளது. உலகின் மிக நீளமான கான்டிலீவர் கட்டிடம் (longest cantilevered building) என்ற பிரிவில் இந்த கின்னஸ் உலக சாதனை பட்டத்தை வென்றுள்ளதாக இது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

துபாய் வேர்ல்ட் டிரேட் சென்டர் ரவுண்டானாவுக்கு அருகில் உள்ள இந்த அதி-சொகுசு இரட்டைக் கோபுரம் ‘The Link’ என்னும் இரண்டு கட்டிடங்களுக்கு நடுவே இணைப்பாக அதன் உட்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பரந்தகன்ற கூடத்திற்காக இந்த சாதனையை முறியடித்துள்ளது. இந்த சாதனை மார்ச் 1 ஆம் தேதி முறையாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

துபாயின் இன்வெஸ்ட்மென்ட் கார்ப்பரேஷனால் (Investment Corporation of Dubai) உருவாக்கப்பட்ட இந்த ’The Link’ அமைப்பானது, ஒன் ஜபீலின் வானளாவிய இரட்டைக் கோபுரங்களுக்கு இடையில் தரையில் இருந்து 100 மீட்டர் உயரத்தில் கட்டப்பட்டுள்ளது. இந்த இணைப்பு மொத்தம் 230 மீட்டர் நீளம் கொண்டது என்றும் கட்டிடத்திற்கு வெளியே 67.277 மீட்டர்கள் நீண்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

குறிப்பாக, இந்த கான்டிலிவர் கட்டிடம் இரண்டு கட்டங்களாக 16 நாட்களில் கீழே உள்ள நேரடி போக்குவரத்தின் 4 பாதைகளுக்கு இடையூறு இல்லாமல் முடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த லிங்க் கட்டுமானத்தின் முதல் கட்டத்தில், பிராந்தியத்திலேயே முதல் முறையாக அதக கனமான அதாவது 8,500 டன் எடையுள்ள எஃகு அமைப்பு 12 நாட்களில் உயர்த்தப்பட்டு, ஸ்லாட் செய்யப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக 110 க்கும் மேற்பட்ட சிறப்பு ஜாக்குகள் (jacks) மற்றும் ஹெவி-டூட்டி ஸ்ட்ராண்ட் ஜாக்குகள் பயன்படுத்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. அதேபோல், இரண்டாம் கட்டத்தில் 900 டன் எடையுள்ள கான்டிலீவர் கட்டமைப்பு நான்கு நாட்களில் உயர்த்தப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கான்டிலிவர் கட்டிடத்தில் உள்ள சிறப்பம்சங்கள்

சுமார் 230 மீட்டருக்கு நீண்டுள்ள இந்த கட்டுமானத்தில் உயர்தரமான எட்டு உணவகங்கள் மற்றும் அமீரகத்தின் மிக நீண்ட இன்ஃபினிட்டி பூல் போன்றவை உள்ளன.

இது குறித்து One Za’abeel Holdings இன் இயக்குனர் இசம் கலதாரி (Issam Galadari) அவர்கள் பேசுகையில், “புதுமை, சிறப்பு மற்றும் லட்சியத்துடன் ‘One Za’abeel’-ஐ வழங்குவதற்கான எங்கள் முயற்சிகள் பலனளித்துள்ளன” என்று தெரிவித்துள்ளார்.

அதே போல் இரண்டு கட்டிடங்களிலும் குடியிருப்புப் பகுதிகளுடன், ஒன்&ஒன்லி ரிசார்ட், முதல் ‘SIRO’ பிராண்டட் ஃபிட்னஸ் அண்ட் ரெக்கவரி ஹோட்டல் மற்றும் ஒன்&ஒன்லி பிரைவேட் ஹோம்ஸ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. அதுமட்டுமில்லாமல், அங்கு கிரேடு A அலுவலக இடங்கள் மற்றும் விற்பனை நிலையங்களும் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!