அமீரக செய்திகள்

இரு தினங்களுக்கு பிறகும் ஷார்ஜாவில் தேங்கியுள்ள மழை நீர்.. லிஃப்ட் இயங்காததால் அவதிப்படும் மக்கள்..!!

கடந்த வார இறுதியில் ஷார்ஜாவில் கொட்டித் தீர்த்த கனமழையால், சாலைகள், வீதிகள் மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்புகளின் அடித்தளங்கள் என எமிரேட் முழுவதும் பல பகுதிகளில் மழை வெள்ளம் குளம் போல் தேங்கியுள்ளது. இதனால் குடியிருப்பாளர்களும் வாகன ஓட்டிகளும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

குறிப்பாக, ஷார்ஜாவில் கிங் பைசல் தெருவில் (King Faisal Street) உள்ள நியூ ஜுபைடி(New Zubaidi) கட்டிடத்தில் வசிக்கும் இந்திய வெளிநாட்டவர், ஷார்ஜாவில் பெய்த கனமழையைத் தொடர்ந்து லிஃப்ட் வேலை செய்யாததால் ஒவ்வொரு நாளும் தனது அடுக்குமாடி கட்டிடத்தின் 2,000 க்கும் மேற்பட்ட படிக்கட்டுகளில் ஏறி இறங்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

61 வயதான அவர் இது குறித்து ஊடகங்களிடம் பேசுகையில், “நான் தினசரி காலையில் அலுவலகத்திற்குச் சென்று மதியம் திரும்பி வருகிறேன். பிறகு, சில மணி நேரம் கழித்து மீண்டும் சென்று மாலையில் வீடு திரும்புகிறேன். எனது பணியின் தன்மை காரணமாக ஒரு நாளில் பலமுறை தனது வீட்டிற்கும் அலுவலகத்திற்கும் இடையே பயணம் செய்ய வேண்டியுள்ளது. லிஃப்ட் இயங்காததால் ஒவ்வொரு முறையும் 300 படிக்கட்டுகளுக்கும் மேல் நான் நடக்க வேண்டும்” என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

கிட்டத்தட்ட 35 ஆண்டுகளாக ஐக்கிய அரபு அமீரகத்தில் வசித்து வரும் இவர், நீர்த் தேக்கம் மற்றும் லிஃப்ட் செயலிழப்பு கட்டிடத்தில் குடியிருப்பவர்களுக்கு குறிப்பாக உடல் நலக்குறைவு உள்ளவர்களுக்கு ஒரு பெரிய தொந்தரவாக இருப்பதால், கட்டிடத்தை நிர்வகிக்கும் நிறுவனம் விரைவில் சிக்கலை தீர்க்கும் என்று நம்புவதாகவும் கூறியுள்ளார்.

அத்துடன், அக்கட்டிடத்தில் வசிக்கும் முழங்கால் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ள 40 வயதான உள்ள எமிராட்டி பெண் ஒருவரும், அடித்தளத்தில் இருந்து தண்ணீரை வெளியேற்றுவதற்கான செயல்முறையை விரைவுபடுத்துமாறு ஷார்ஜா முனிசிபாலிட்டி அதிகாரிகளுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும், கட்டிடத்தை நிர்வகிக்கும் நிறுவனம் வெள்ளத்தில் மூழ்கிய அடித்தளத்திலிருந்து தண்ணீரை வெளியேற்ற முயற்சித்து வருவதாகவும், இதற்கிடையில், சாலையில் தேங்கியுள்ள நீரால் துர்நாற்றம் வீசுவதாகவும் அப்பகுதியில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் புகார் அளித்துள்ளனர்.

கடந்த சனிக்கிழமையன்று தீவிரமடைந்த வானிலையால், இரண்டு நாட்கள் கடந்தும் திங்கள்கிழமை பிற்பகலில் அல் கான் அல் மஜாஸ், ஜமால் அப்துல் நசீர் ஸ்ட்ரீட் மற்றும் ஷார்ஜா சிட்டி சென்டருக்கு முன்னால் உள்ள அல் வஹ்தா ஸ்ட்ரீட்டில் சில பகுதிகள்  தொடர்ந்து வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

தற்போது வரை, மக்கள் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி, ஓட்டுநர்கள் தங்களால் இயன்றவரை தங்கள் கார்களை பாதசாரி நடைபாதைகளில் நிறுத்திவிட்டு, பின்னர் தங்கள் கார்களில் இருந்து வெளியேறவோ அல்லது மீண்டும் நுழையவோ பயணிகள் பக்கத்தில் உள்ள முன் கதவைப் பயன்படுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!