அமீரக செய்திகள்

துபாயில் ரமலான் கனான் ஃபயரிங் பார்க்க ஆசையா..?? நிகழ்த்தப்படும் இடங்கள் எங்கெங்கே..??

அமீரகத்தில் புனித ரமலான் மாதம் இன்று (மார்ச் 11) துவங்கியுள்ள நிலையில், இஸ்லாமியர்கள் தங்களின் முதல் நோன்பை நிறைவு செய்யவிருக்கின்றனர். இந்த ரமலான் மாதத்தில் தினசரி நோன்பு முடிவைக் குறிக்கும் வகையில், துபாய் முழுவதும் பல இடங்களில் இருந்து கனான் (Ramadan cannon firing) ஃபயரிங் செய்யப்பட இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் 1960 களில் இருந்து ரமலான் மாதத்தின் போது தினசரி நோன்பு காலம் முடிவடைவதைக் குறிக்கும் வகையில் கனான் ஃபயரிங் எனப்படும் பீரங்கி சுடும் முறை பாரம்பரியமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

ரமலான் மற்றும் ஈத் அல் ஃபித்ர் தொடங்குவதைக் குறிக்க இரண்டு முறை ஃபயர் செய்யப்படும் அதேவேளையில், நோன்பு முடிந்து, இஃப்தார் தொடங்குவதை குறிக்க ஒரு முறை மட்டுமே ஃபயர் செய்யப்படுகிறது. இவ்வாறு துபாயில் ரமலான் மாதம் முழுவதும் கனான் ஃபயரிங் செய்ய பின்வரும் ஏழு இடங்களில் நிலையான பீரங்கிகள் இருக்கும் என கூறப்பட்டுள்ளது

துபாயில் கனான் ஃபயரிங் நடைபெறும் இடங்கள்:

  • எக்ஸ்போ சிட்டி துபாய் (Expo City Dubai)
  • புர்ஜ் கலிஃபா (Burj Khalifa)
  • ஃபெஸ்டிவல் சிட்டி (Festival City)
  • அப்டவுன் (Uptown)
  • மதீனத் ஜுமேரா (Madinat Jumeriah)
  • டமாக் ஹில்ஸ் (DAMAC Hills)
  • ஹத்தா கெஸ்ட் ஹவுஸ் (Hatta Guest House)

கூடுதலாக, ஒரு மொபைல் பீரங்கி புனித மாதம் முழுவதும் துபாய் முழுவதும் பல்வேறு இடங்களில் நிகழ்த்தப்படும் என கூறப்பட்டுள்ளது. இவ்வாறு மொபைல் பீரங்கிகளுடன் பல்வேறு இடங்களிலும் ஃபயரிங் நடத்தும் முடிவு, இந்த பாரம்பரிய காட்சியை அதிகமான குடியிருப்பாளர்கள் அனுபவிக்க முடியும் என்பதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது பின்வரும் இடங்களில் தலா இரண்டு நாட்களுக்கு நிறுத்தப்படும்:

  • அல் சத்வா பெரிய மசூதி (Al Satwa Big Mosque)
  • அல் காஃப் வாக் (Al Ghaf Walk)
  • உம் சுகீம் மஜ்லிஸ் (Umm Suqeim Majlis)
  • ஜபீல் பூங்கா (Zabeel Park)
  • துபாய் க்ரீக் துறைமுகம் (Dubai Creek Harbour)
  • ஹத்தா (Hatta)
  • அல் கவானீஜ் மஜ்லீஸ் (Al Khawaneej Majles)
  • துபாய் ஃபெஸ்டிவல் சிட்டி (Dubai Festival City)
  • துபாய் சர்வதேச நிதி மையம் (Dubai International Financial Centre)

துபாயில் எக்ஸ்போ சிட்டியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய செயல்பாட்டு விவகாரங்களுக்கான உதவித் தளபதி மேஜர் ஜெனரல் அப்துல்லா அலி அல் கைதி, “கனான் ஃபயரிங் நோன்பு நேரத்தின் முடிவையும் இஃப்தாரின் தொடக்கத்தையும் குறிக்கிறது” என்று கூறியுள்ளார். மேலும் தொடர்ந்து பேசுகையில், தங்கள் பகுதிகளில் கனான் ஃபயரிங்கை பார்க்க முடியாமல் தவித்த குடியிருப்பாளர்களிடம் இருந்து புகார்களைப் பெற்றதாகவும், அதை நிவர்த்தி செய்ய, மொபைல் பீரங்கிகளுடன் அதிக இடங்களில் அணுகுவதற்கு முயற்சிக்கவுள்ளதாகவும் மேஜர் ஜெனரல் அல் கைதி விளக்கமளித்துள்ளார்.

ரமலான் கனான் தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக, எக்ஸ்போ சிட்டியில் உள்ள அல் வாஸ்ல் பிளாசாவின் முன் வைக்கப்படுகிறது. இது பற்றி எக்ஸ்போ சிட்டியின் நிர்வாக கிரியேட்டிவ் டைரக்டர் அம்னா அபுல்ஹோல் பேசியதாவது: “பார்வையாளர்களுக்கு அழகான ரமலான் அனுபவத்தை நாங்கள் வழங்க விரும்புகிறோம். இங்கு புகைப்படங்கள், இஃப்தார் மற்றும் சுஹூருக்கு விசாலமான இடங்களை வழங்குகிறோம்” என்று கூறியுள்ளார்.

இதற்கிடையில், புதிய கனான் ஃபயரிங்  இடங்களில் நாத் அல் ஷெபா காவல் நிலையத்திற்கு முன்னால் அமைந்துள்ள அல் காஃப் வாக் பகுதியில் நடத்தப்படவுள்ளதாக துபாய் காவல்துறை ரமலான் பீரங்கிகளின் தளபதி மேஜர் அப்துல்லா தாரிஷ் அல் அமிமி கூறியுள்ளதோடு, உத்தியோகபூர்வ திறப்பு இன்னும் நடைபெறவில்லை என்றாலும், இந்த பகுதியில் ஒவ்வொரு வார இறுதியிலும் மூன்று நாட்களுக்கு மொபைல் கனான் ஃபயரிங் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!